Published : 21 Dec 2018 09:22 AM
Last Updated : 21 Dec 2018 09:22 AM
உச்ச நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் குரியன் ஜோசப், தற்போது உச்ச நீதிமன்றத்துக்கும் நிர்வாகத் துறைக்கும் இடையே நல்லுறவு இருப்பதாகவும், அது நீதித் துறை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதில் வெளிப்படுவதாகவும் கூறுகிறார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக, ஜனவரி 12-ல் செய்தியாளர் சந்திப்பை நடத்திய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர். நீதித் துறை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் பற்றி அவர் அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவியேற்றுக்கொண்ட பிறகு, நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைத்த சில மணி நேரங்களிலேயே நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உயர் நீதிமன்ற காலிப் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?
இவ்விஷயத்தில் தெளிவான புரிதல் ஏற்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் பிரதமரும் இது குறித்து விவாதித்திருப்பார்கள் என்று கருதுகிறேன். இந்தப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்குத் தேவையான முடிவுகளை இருவரும் சேர்ந்தே எடுத்திருப்பார்கள்.
அப்படியென்றால், இதற்கு முன்பு தகவல் தொடர்பில் சில குறைபாடுகள் இருந்தன என்று எடுத்துக்கொள்ளலாமா?
அப்படித்தான் நான் நினைக்கிறேன். நீதி மற்றும் நிர்வாகத் துறைகளின் தலைமைகளுக்கு இடையேயான தகவல் தொடர்பில் சில போதாமைகள் இருந்தன.
அத்தகைய பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானவையா? வழக்காடும் தரப்பினரில் அரசும் ஒன்றல்லவா?
இந்தப் பேச்சுவார்த்தைகள் வழக்குகளைப் பற்றியவை அல்ல. இவை திரைமறைவாகவும் நடக்கவில்லை. நீதித் துறை நியமனங்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாக நடந்த பேச்சுவார்த்தைகள் இவை. நீதி நிர்வாகத்தைப் பற்றிப் பேசாமலிருந்தால் தாமதத்துக்கான வாய்ப்பு அல்லது அமைப்பு பாதிக்கப்படும் எனும்போது அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் பிரதமர், மற்றொருவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. ஒருவர் தேசத்தின் தலைவர். மற்றொருவர் உச்ச நீதிமன்றத்துக்குத் தலைமைவகிப்பவர்; இந்திய நீதித் துறையின் பாதுகாவலராக இருப்பவர். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்ற வரம்புகள் அவர்கள் இருவருக்குமே தெரியும். அவர்கள், முதிர்ச்சியுள்ளவர்கள். தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
சமீபத்தில், பிரதமர் உச்ச நீதிமன்றத்துக்கு வருகைபுரிந்தார். என்ன நடந்தது?
உச்ச நீதிமன்றத்துக்கு பிரதமர் வருகைபுரிந்தபோது தலைமை நீதிபதியோடு நீதிபதிகளும் இருந்தோம். இது வழக்கமான நடைமுறைதான்.
பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய நான்கு நீதிபதிகளில் நீங்களும் ஒருவர். அந்த நிகழ்வுக்குப் பிறகு, தலைமை நீதிபதி தன்னிச்சையாகச் செயல்பட முடியாது என்ற சூழல் உருவாகியிருப்பதாகச் சொல்கிறீர்கள். இது வெறும் கண்ணோட்டம்தானா அல்லது ஆதாரத்தின் அடிப்படையிலானதா?
அது ஒரு கண்ணோட்டம்தான். அது எங்கள் நான்கு பேருடைய கருத்து மட்டுமல்ல, மற்ற சில நீதிபதிகள் மற்றும் ஊடகங்களின் கருத்தும் அதுதான். அத்தகைய கண்ணோட்டங்கள் எங்களுடைய கவனத்துக்கு வந்தபோது, அந்தக் கருத்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி நாங்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கேட்டுக்கொண்டோம். இதுதொடர்பாக அவருக்குக் கடிதங்கள் எழுதினோம். ஆனால், ஆக்கபூர்வமாக எந்த மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, அந்தச் சூழலில் நாங்கள் ஊடகங்களைச் சந்தித்தோம். எனினும், இந்தப் பிரச்சினைகளுக்கு மீண்டும் உயிரூட்ட விரும்பவில்லை. எனது பணி ஓய்வுக்குப் பிறகு, பத்திரிகையாளர் சந்திப்பின் பின்னணியை வெளியிட வேண்டும் என்ற உறுதிமொழியைக் கடைப்பிடிக்க மட்டுமே செய்கிறேன்.
கும்பல் கொலைகள், ஆணவக் கொலைகள், மத வன்முறைகள் ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தடுக்க முயற்சித்தாலும்கூட அவை தொடரத்தான் செய்கின்றன. தன்னுடைய தீர்ப்புகள் பொதுவெளியில் வெளிப்படையாக அவமதிக்கப்படுவது பற்றி உச்ச நீதிமன்றம் என்ன நினைக்கிறது?
நீங்கள் கேட்கிற விஷயங்களிலிருந்து நாங்கள் விலகியே இருக்கிறோம். அவை அரசியல் பிரச்சினைகள். அரசியல் சட்டம் இருக்கும் காலம் வரையிலும், உச்ச நீதிமன்றத்தின் தொடர்பும் இருக்கும். அரசியல் சட்டம் இருப்பதாகவே உச்ச நீதிமன்றம் நினைக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவரையும் கட்டுப்படுத்துகிறது. அது அறுதியானது. ஒரு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், அதைச் செயல்படுத்த வேண்டியது நிர்வாகத் துறையின் கடமை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அவர்களுக்கு விளக்கங்கள் தேவைப்படுகிறபோது, நீதிமன்றத்தை அணுகுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. நிர்வாகத் துறை பெருமளவிலான மக்களின் நலனை முன்னிட்டு அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என்றால், தேவையான சட்டத்தை இயற்றி நீதிமன்றத் தீர்ப்பை மாற்றவும் செய்யலாம்.
நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீதிபதிகள் தங்களது அறநெறிக் கருத்துகளை அல்லது தர்க்கங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
அப்படிச் செய்யக் கூடாது. நீதிபதிகள் தங்களது நம்பிக்கைகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக நியமிக்கப்படவில்லை. அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர்கள் உறுதியெடுத்துக்கொள்கிறார்கள்.
நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தி மூன்றாம் நபர்கள் தொடுக்கும் பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஊக்குவிக்கின்றதா?
நிலுவையிலிருக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால், அடிப்படைக் கொள்கையின்படி, பொருட்படுத்தத்தகாத விஷயங்களுக்காக உச்ச நீதிமன்றம் நேரம் செலவிடக் கூடாது என்பதுதான் எனது பார்வை. ‘பொது நலன்’ என்பதற்கும் ‘பொதுமக்கள் எதில் விருப்பமாக இருக்கிறார்கள்’ என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியிலிருந்தவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது. பதவியிலிருந்து அவர் விலகியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
அவர் பதவி விலகாமல் இருந்தது சரியே.
அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்குத்தான் இருக்கிறதா?
அது மரபுகளின் அடிப்படையில் அமைந்த நிறுவனரீதியான முடிவாகவே இருக்க வேண்டும். தலைமை நீதிபதி அவரது சகோதர நீதிபதிகளால் கண்டிப்பாக வழிநடத்தப்பட வேண்டும். அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்குவது, நீதிமன்ற நிர்வாகம் போன்ற பிரச்சினைகளை விசாரிப்பதற்காகவும் அது தொடர்வதற்காகவும் வருங்காலத்திலாவது தலைமை நீதிபதிகள் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று யோசனை கூறப்பட்டது. தற்போது ஒவ்வொரு தலைமை நீதிபதி மாறும்போதும் முற்றிலும் எல்லாம் மாறிவிடுகிறது. அது ஆரோக்கியமானது அல்ல!
© ‘தி இந்து’ ஆங்கிலம்,
தமிழில்: புவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT