Published : 17 Dec 2018 09:02 AM
Last Updated : 17 Dec 2018 09:02 AM

அமிதவ் கோஷ்: எல்லைகளை கேள்விக்கு உள்ளாக்குபவர்!

வரலாற்று நிகழ்ச்சிகள் தனிமனிதர்கள் மேல் ஏவுகின்ற அபத்தத்துக்கு சதத் ஹசன் மண்டோ எழுதிய ‘டோபா டேக் சிங்’ கதை சிறந்த உதாரணம். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பிரிக்கப்பட்ட இந்திய, பாகிஸ்தான் அரசுகள் தங்கள் மனநலக் காப்பகங்களிலுள்ள முஸ்லிம், சீக்கிய, இந்து நோயாளிகளைப் பரிவர்த்தனை செய்துகொள்ள முடிவெடுக்கிறது. இந்தப் பரிமாற்றத்தின் பின்னணியில் பிஷன் சிங் என்ற மனநோயாளி, இந்தியாவுக்கு போலீஸ் காவலுடன் அனுப்பப்படுகிறார். தனது ஊரான டோபா டேக் சிங், பாகிஸ்தானில்தான் உள்ளதாக அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

அவரைச் சகநோயாளிகள் அனைவரும் ‘டோபா டேக் சிங்’ என்றே அழைக்கிறார்கள். அதனால் அவர் இந்தியாவுக்குப் போக மறுக்கிறார். இந்தியா, பாகிஸ்தானுக்கிடையே போடப்பட்ட இரண்டு முள்வேலிகளுக்கு இடையே போய் அவர் படுத்துக்கொள்கிறார். இரண்டு தேசங்களுக்கும் சொந்தமில்லாத அந்த நிலத்தில் அந்த மனிதன் படுத்திருக்கும் இடத்தில்தான் டோபா டேக் சிங் இருக்கிறது என்று முடிக்கிறார் மண்டோ.

வரலாறு தனிநபர்களின் துயரங்களையும் ஆசாபாசங்களையும் பொருட்படுத்துவதே இல்லை. பெரும் வரலாற்றுச் சுழிப்புகள், உலகைப் பாதித்த நிகழ்வுகளின் பின்னணியில் வெறும் எண்களாக மாறும் தனிமனிதர்களின் கதைகள்தான் அமிதவ் கோஷின் படைப்புக்களம் ஆகும்.

நிழல் கோடுகள்

1988-ல் அமிதவ் கோஷ் எழுதி, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ‘தி ஷேடோ லைன்ஸ்’ நாவல் தமிழில் ‘நிழல் கோடுகள்’ என்ற பெயரில் எழுத்தாளர் திலகவதியால் மொழிபெயர்க்கப்பட்டு 1995-ல் வெளியானது. நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலத்துக்குள் மாறி மாறிச் செல்லும் கதைசொல்லியின் சரளமும் தொனியும் அபூர்வமாகப் பெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்புப் படைப்பு இது.

வீட்டிலும் ஹெட்மிஸ்ட்ரஸாகவே கண்டிப்பு மிகுந்தவளாகத் தன் மகனிடமும், மருமகளிடமும் பேரனிடமும் நடந்துகொள்ளும் பாட்டியை நான் என் அம்மாவோடு அடையாளம் கண்டிருக்க வேண்டும். எட்டு வயது கதைசொல்லி சிறுவனுக்கு அவள் சொல்லும் அறிவுரை எனக்கு இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. நேரம் என்பது  டூத் பிரஷைப் போன்றது; உபயோகிக்கப்படாமல் இருந்தால் பாழாய்ப் போய் நாற்றமடிக்கத் தொடங்கிவிடும் என்று அந்தச் சிறுவனின் மூக்கைத் திருகிச் சொல்வாள். பாட்டியின் தங்கை மாயாதேவியின் மகன் திரிதீப்போ பாட்டியின் ஒழுங்குக்கு நேர்மாறானவன். திரிதீப்போ நேரத்தைப் பயன்படுத்துவதே இல்லை. அதை நாற்றம் அடிக்க வைக்கவும் இல்லை.

தனித்துவம், அறிவு, வினோதம், பற்றின்மை, விலகல் கொண்டு நம் இளம் வயதில் குடும்பத்திலும் பள்ளிச்சூழலிலும் நம்மை வசீகரிக்கும் முன்மாதிரி நாயகர்களின் அடையாளங்களைக் கொண்டவன் திரிதீப். வெளிநாடுகளில் வசிக்கும் அரசாங்க ராஜதந்திரியான தந்தை, அம்மாவுடன் தங்காமல்  கல்கத்தாவிலேயே இருந்து தொல்லியலில் ஆராய்ச்சி செய்யும் அறிவுஜீவி அவன்; கதைசொல்லியான சிறுவனுக்கு மெசபடோமியக் கல்லறைச் சிலைகள், கிழக்கு ஐரோப்பிய இசை, வனாந்திரங்களில் வாழும் மனிதக் குரங்குகளின் பழக்க வழக்கங்கள், கார்சியோ லோர்காவின் நாடகங்கள் என எல்லையே தெரியாத அறிவை அறிமுகம் செய்யக்கூடியவன். திரிதீப் என்னும் பெயர் ஜோசப் ஜேம்ஸ் (ஜே.ஜே.சில குறிப்புகள்), மெர்சோ(அன்னியன்), தினகரன்(இடைவெளி) கணேசன்(அசடு), திமித்ரி(கரமசோவ் சகோதரர்கள்) போன்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களுள் ஒன்றாக எப்போதும் இருக்கும்.

பேரண்டத்தில் நுட்பம்

அமிதவ் கோஷின் உலகத்தைத் தமிழில் ஒப்பிட்டால் அவர் அசோகமித்திரனின் படைப்புலகத்துக்கும் பார்வைக்கும் நெருக்கமாக வரக்கூடியவர். அசோகமித்திரனைச் சிற்றண்டத்தின் நுட்பம் என்று சொன்னால், பேரண்டத்தின் நுட்பம் என்று அமிதவ் கோஷை வரையறுக்கலாம்.

புறப்பாடு, வீடு திரும்பல் என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நாவல், கல்கத்தாவில் வளர்ந்து டெல்லியில் படித்து லண்டனுக்குச் சென்ற அனுபவங்களைச் சொல்லும் ஒருவனின் விவரணையாக எழுதப்பட்டுள்ளது. கதைசொல்லியின் சின்னப் பாட்டியின் மகன் திரிதீப் விவரித்த லண்டனின் தெருக்களை, குண்டு வீசப்பட்டதாகச் சொல்லப்பட்ட வீடுகளைத் திசை உட்படத் துல்லியமாகப் பின்னர் லண்டனுக்குச் செல்லும்போது கதைசொல்லியால் சொல்ல முடிகிறது. உறவினர்கள், நண்பர்களையும் திரிதீப்பின் கண்கள் வழியாகவே பார்க்கிறான் அந்தச் சிறுவன். ஆனால் அந்த திரிதீப், வங்காளத்திலிருந்து பிரிந்து பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறிவிட்ட டாக்கா நகரில், பாட்டியின் உறவினரைப் பார்க்கப் போகும்போது, 1963-64-ல் நடந்த கலவரத்தில் தனது காதலி மேயைக் காப்பாற்றுவதற்கான தாக்குதலில் இறந்துபோகிறான்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனுக்கு வரும் கதைசொல்லி, லண்டனில் தான் பார்க்கும் அத்தனை இடங்களையும் திரிதீப்புடன் இனம்கண்டே அடையாளப்படுத்த முடிகிறது. அதேபோல, வங்காளத்தைத் தனது இடமாக எண்ணி, தனது மாமாவை இந்தியாவுக்கு அழைத்து வர, அந்தச் சிறுவனின் பாட்டி செய்யும் முயற்சியில் தான் கலவரக் கும்பலின் தாக்குதலில் சிக்கி, திரிதீப் உயிரிழக்க நேரிடுகிறது.

திரிதீப் வழியாக லண்டனுக்கு வரும் சிறுவனுக்கு திரிதீப் சொன்ன லண்டன், ஒரு நினைவாக மட்டுமே எஞ்சியிருக்கிறது. திரிதீப்பால் காதலிக்கப்பட்ட மே, தன்னால்தான் அவன் இறந்துவிட்டானோ என்ற குற்றவுணர்ச்சியுடன் தனிமை நிறைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நேர்கிறது. மனிதகுல வரலாற்றிலேயே அதிகபட்ச பயணங்களையும் இடப்பெயர்வுகளையும் சந்திக்கும் 20, 21-ம் நூற்றாண்டின் பின்னணியில் மனிதர்கள் தங்களின் வீடென்று ஒரு இடத்தை உணர்வதன் வலிமையையும் அர்த்தமின்மையையும் சேர்த்தே பரிசீலிக்கிறார் அமிதவ் கோஷ். திரிதீப்பின் அகால மரணம் வழியாக அந்தரங்கமும் அரசியலும் எங்கே குறுக்கிடுகின்றன என்பதைப் பார்க்க வைக்கிறார். ஒருவகையில் தேசியவாதம், தேசம், பிராந்தியம், தனி அடையாளம் எனப் பிரிக்கப்பட்ட கோடுகள் எல்லாம் நிழல்கள்தானோ என்ற கேள்வி அமிதவ் கோஷ் படைப்புகளில் கேட்கிறது. நேசத்தால் உபயோகிக்க வேண்டிய காலத்தை வெறுப்பால், பிரிவினைகளால் பாழாக்கப்போகிறோமா நாம்?

ஆங்கிலத்துக்கு ஞானபீடம்

1956-ல் கல்கத்தாவில் பிறந்த அமிதவ் கோஷ், இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீடத்தைப் பெறும் முதல் இந்திய ஆங்கில எழுத்தாளர். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பயணிக்கும் அவரது படைப்புகளின் கதாபாத்திரங்களைப் போலவே தன் சிறுவயதை வங்கதேசத்திலும் இலங்கையிலும் கழித்தவர். சமூக மானுடவியலாளரான அமிதவ் கோஷின் படைப்புகளில் நுணுக்கமான விவரணையாளரும் தீர்க்கமான பார்வையுள்ள ஒரு நாவலாசிரியரும் இணைந்து கதையை நுட்பமாக நூற்கிறார்கள்.

வரலாற்றுப் பின்புலங்களிலிருந்து தற்காலத்துக்குள் பயணித்து இறந்தகாலம், நிகழ்காலத்தோடு தொடர்பு கொள்ளும் ஒரு வெளியைப் பொருத்தமான வழிமுறைகள் வழியாக உருவாக்குபவர் அமிதவ் கோஷ். ‘தி ஷேடோ லைன்ஸ்’, தி க்ளாஸ் பேலஸ்’, தி ஹங்ரி டைட்’ இவரது ஆரம்ப நாவல்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே கிழக்கிந்தியக் கம்பெனியால் நடத்தப்பட்ட ஓபிய வர்த்தகத்தை வைத்து ட்ரையாலஜி படைப்பாகச் சமீபத்தில் உருவாக்கிய ‘சீ ஆஃப் பாப்பிஸ்’, 'ரிவர் ஆஃப் ஸ்மோக்’, 'ஃப்ளட் ஆஃப் பயர்’ ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை.

இடங்களையும் அதனுடனான மனிதர்களின் பிணைப்பையும் அவர்கள் அதோடு கொள்ளும் அடையாளத்தையும் வரலாற்று நிகழ்வுகள் தடம்மாற்றி விடுகின்றன. தாங்கள் அடையாளம் கொண்ட இடத்தை இழக்கும்போது, அவர்கள் இன்னொரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பல்லியின் வாலைப் போலத் துண்டித்த மனித நினைவுகளைப் பற்றி வரலாறென்னும் பெரும் இயந்திரம் கவலை கொள்வதேயில்லை. ஆனால் நினைவுகள் இல்லாமல் வரலாறு உண்டா?

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: shankarashankara@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x