Last Updated : 25 Dec, 2018 11:11 AM

 

Published : 25 Dec 2018 11:11 AM
Last Updated : 25 Dec 2018 11:11 AM

கீழவெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு!

கீழவெண்மணிப் படுகொலை என்ற அணையா நெருப்பின் அரை நூற்றாண்டைக் கடந்துகொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் அந்தப் படுகொலை நடப்பதற்குப் பின்புலமாக இருந்த வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

1927-ல் கும்பகோணத்திலும் 1936-ல் கீழ்வேளூரிலும் நடத்தப்பட்ட விவசாயிகள் மாநாடுகளால் தஞ்சை மாவட்டத்தில் பரவிய விழிப்புணர்வு, நிலமற்ற கூலி விவசாயிகளாக இருந்த தலித்துகளை அணிதிரட்டியது. 1943-ல் தென்பரை என்கிற ஊரில் குத்தகைச் சாகுபடியாளர் சங்கம் உருவான பிறகு, விவசாயத் தொழிலாளர்களின் போராட்டம் புதிய வேகம் பெற்றது.

1944-ல் மன்னார்குடியில் தலித்துகளின் பிரதிநிதிகள், நிலவுடைமையாளர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் ஆகிய முத்தரப்பினர் பேசி ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினர். ‘மன்னார்குடி ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் அதன் மூலம் மொத்த மகசூலில் 7-ல் ஒரு பகுதி பண்ணையாளுக்கு உரிமை, 2 படி தானியம் என்று இருந்த தினக்கூலி 3 படி என முடிவானது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தின்படி கூலியை உயர்த்த நிலவுடைமையாளர்கள் மறுத்துவிட்டனர். 1948-ல் மாயவரத்தில் மீண்டும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தினக்கூலி 4 படி தானியம் என உயர்த்தப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு தொழிலாளர்கள் நிலை உயரும் என நினைத்ததற்கு மாறாக விவசாயத் தொழிலாளர் தலைவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு ஒடுக்குமுறை ஏவப்பட்டது. நாணலூர் வழக்கு, நெடும்பலம் வழக்கு, ஆம்பலாப்பட்டு வழக்கு, வடகாலத்தூர் வழக்கு, மாயவரம் சதி வழக்கு, திருப்பூந்துருத்தி வழக்கு, கோயில்பத்து வழக்கு ஆகியவை அவற்றுள் சில. அதன் காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதன் உச்சகட்டமாகவே வெண்மணிப் படுகொலை நடந்தேறியது.

மூன்று காரணங்கள்

வெண்மணிப் படுகொலைகள் நடந்ததற்கு மூன்று காரணங்களை நாம் குறிப்பிடலாம்.

1. கூலி உயர்வுக் கோரிக்கை

2. சாதியப் பாகுபாடு,

3. நிலவுடைமை.

கடந்த 50 ஆண்டுகளில் இந்த அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன என்பதை நாம் ஆராய்ந்துபார்க்க வேண்டும்.

1968-ல் இருந்ததைவிட விவசாயத் தொழிலாளர்களின் கூலி பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்றாலும், பிற தொழிலாளர்களின் சம்பளத்தோடு ஒப்பிடும்போது இப்போதும் அது குறைவாகத்தான் உள்ளது. விவசாயத் தொழிலாளர்களை நாம் திறன்மிக்க தொழிலாளராகவே கருத வேண்டும்.

நகர்ப்புறத்தில் திறன் எதுவும் இல்லாத உதிரிப் பாட்டாளியாக இருக்கும் ஒருவர் பெறும் சம்பளத்தில் கால் பங்குகூட விவசாயக் கூலிகளுக்குக் கிடைப்பதில்லை. அது மட்டுமின்றி விவசாயம் நசிந்துவருவதால் வேலை நாட்களும் குறைந்துகொண்டே போகின்றன.

வெண்மணியில் நடந்தது ஒரு சாதியப் படுகொலை. கொல்லப்பட்ட அனைவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தலித் மக்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகப் பல்வேறு புதிய சட்டப் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான திருத்தச் சட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், வன்கொடுமைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டேதான் போகிறது.

தொடரும் படுகொலைகள்

1984 டெல்லி கலவரம் தொடர்பாகத் தற்போது தீர்ப்பளித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், ‘இத்தகைய வன்முறைகள் மனிதகுலத்துக்கு எதிரானவை’ என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அப்படியான ஒரு கருத்தை நீதிமன்றம் ஒருபோதும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய தீர்ப்பில் குறிப்பிட்டதே இல்லை. வெண்மணிக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் கொடூரமான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

கரம்சேடு(1985), சுண்டூரு(1991), பதானி தோலா(1996), மேலவளவு(1996), லட்சுமண்பூர் பதே(1997), கம்பலபள்ளி(2000), கயர்லாஞ்சி(2006). ஆனால், அந்த வழக்குகளிலெல்லாம் பெரும்பாலான குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலித் மக்கள் படுகொலை செய்யப்படுவதை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக நீதிமன்றம் கருதுவதற்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியிடப்பட வேண்டுமோ தெரியவில்லை.

நிலவுடைமை என்பது கீழவெண்மணிப் பிரச்சினையின் அடிப்படையான அம்சம் என்று கூறலாம். நில உச்சவரம்புச் சட்டத்தின் காரணமாக நிலவுடைமையில் கடந்த 50 ஆண்டுகளில் பெயரளவுக்கான மாற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடியிருப்பதே அதற்குச் சான்று. 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 41% பேர் நிலமற்ற கூலிகள். 2011 மக்கள்தொகை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலமற்ற கூலித் தொழிலாளரின் எண்ணிக்கை 51.35%.

தலித் மக்களின் நிலவுடைமை அளவு முன்பைவிட மோசமாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் அளவுக்கே மக்கள்தொகை கொண்ட ஆந்திரம், மகாராஷ்டிரம் கர்நாடகத்தின் நிலையோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டிலிருக்கும் தலித்துகளின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணரலாம். 2010- 2011-ல் ஆந்திரத்தில் 14.6 லட்சம் தலித்துகள் நிலம் வைத்திருந்தனர், அவர்களிடம் 11 லட்சம் ஹெக்டேர் நிலம் இருந்தது.

கர்நாடகத்தில் 9.14 லட்சம் தலித்துகளிடம் 10.74 லட்சம் ஹெக்டேர் நிலம் இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் 10.29 லட்சம் தலித்துகள் நிலம் வைத்துள்ளனர். அவர்களிடம் 13.03 லட்சம் ஹெக்டேர் நிலம் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலோ 8.73 லட்சம் தலித்துகள் மட்டுமே நிலம் வைத்துள்ளனர். அவர்களிடம் 4.92 லட்சம் ஹெக்டேர் நிலம் மட்டுமே உள்ளது. அதுமட்டுமின்றி 2005–2006-க்கும் 2010–

2011-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 11 ஆயிரம் தலித்துகள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 11 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பறிபோயிருக்கிறது என விவசாயக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

வாழ்க்கை நிலையில் மாற்றமில்லை

தொகுத்துக் கூறினால் கீழவெண்மணிப் படுகொலை நடைபெற்றதற்குப் பிறகான 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தலித் மக்களின் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன; அவர்களிடமிருக்கும் கொஞ்சநஞ்ச நிலமும் பறிக்கப்படுகிறது. அதனால், அவர்களிடையே நிலமற்ற கூலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1968-ல் இருந்ததைவிடவும் மோசமான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த அரை நூற்றாண்டில் தலித்துகளில் கணிசமானவர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். அரசு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால், இத்தகைய மாற்றங்கள் எதுவும் தலித் மக்களின் அடிப்படையான வாழ்நிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடவில்லை. அந்த மாற்றத்துக்கான முயற்சிகள் இனிமேல்தான் எடுக்கப்பட வேண்டும்!

- ரவிக்குமார், விசிக பொதுச்செயலாளர்
தொடர்புக்கு: adheedhan@gmail.comஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x