Published : 11 Dec 2018 08:40 AM
Last Updated : 11 Dec 2018 08:40 AM
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், இதழாளர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட மகாகவி பாரதி மிகச் சிறந்த சொற்பொழிவாளரும்கூட. இதுவரை மற்றவர்கள் தலைமையில் பாரதி சொற்பொழிவாற்றிய பதிவுகள் மட்டுமே நமக்குக் கிடைத்திருந்தன. பாரதியின் தலைமையில் மற்றவர்கள் சொற்பொழிவாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. முதன்முறையாகக் கண்டறியப்பட்ட பாரதியின் தலைமையுரை இது.
வாழ்வில் இரண்டு முறை பாரதி மற்றவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசியிருக்கிறார் என்பது இப்போது ‘சுதேசமித்திரன்’ இதழின் வாயிலாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு தலைமைச் சொற்பொழிவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாழ்வின் தொடக்கத்தில் சென்னைக்கு வந்த ஒன்பது மாதங்களில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும், சென்னை வாழ்வின் இறுதியில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் பாரதி தலைமைதாங்கியிருக்கிறார்.
1905 ஆகஸ்ட் 23-ல் சென்னை ராஜதானி கலாசாலை (மாநிலக் கல்லூரி) மாணவர் தமிழ்ச் சங்கத்தில் அக்கல்லூரியின் மாணவர் குருசாமியின் சொற்பொழிவு நடந்தது. ‘திருவள்ளுவரின் பெருமை’ என்னும் தலைப்பில் அம்மாணவர் கட்டுரை எழுதி வாசித்தார். அந்நிகழ்ச்சிக்கு பாரதி தலைமை வகித்து, விரிவாகத் தனது தலைமையுரையை ஆற்றினார். அதுகுறித்த செய்தி 26.08.1905 தேதியிட்ட ‘சுதேசமித்திரன்’ இதழில் வெளியாகியுள்ளது. அப்போது, உ.வே.சாமிநாத அய்யர் இத்தமிழ்ச்சங்கத்தின் தலைவராக விளங்கினார். இந்தத் தலைமையுரை பாரதி வரலாற்றில் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘திருவள்ளுவர் பெரிய மகான்; திருக்குறளின் பல இடங்களில் கவித்திறன் நிரம்பியிருக்கிறது; ஆனால், அது நீதி நூல்; காவியமோ, நாடகமோ அல்ல; எனவே, வள்ளுவரை மகாகவி என்று சொல்ல முடியாது’ என்பது பாரதியின் கருத்து.
காலத்துக்கு ஏற்ப புது நூல்கள் வேண்டும்
திருக்குறளைப் பற்றிப் பொதுவாகச் சிந்திப்பவர்கள் பலரும் திருக்குறளில் அழகியலின் உயிர்நிலையாக விளங்கும் காமத்துப்பாலைப் பற்றி எண்ணுவதில்லை. பாரதியார் இந்தச் சொற்பொழிவில் காமத்துப்பாலின் கருத்துகள், கவித்துவம், பாடல்களின் இசையினிமை முதலியவற்றைப் பற்றியும் சிறப்பாகக் கூறியிருக்கிறார். வள்ளுவரின் சமயத்தைப் பற்றிப் பேசும்போது குறிப்பிட்ட சமயத்தவராகச் சொல்லாமல் ‘ஆஸ்திக மதஸ்தர்’ என்ற சொல்லால் குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், பழைய கருத்துகளையே மீண்டும் மீண்டும் பேசுவதாலும், புது நூல்கள் புனையாதிருப்பதாலும், தமிழ் மொழியைக் கடினமாக எழுதுவதாலும் பலரும் தமிழைக் கற்க முடியாமல் போய்விடுகிறது என்பதையும் பின்வருமாறு வெளிப்படுத்தியிருந்தார்.
“இன்று தமிழ் பாஷையோ வரவர க்ஷீணத்தை அடைந்துவருகிறது என்றே சொல்லலாம். கற்றுணர்ந்தோர் எனக் கூறப்படுகிறவர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கருத்துகளையே பொருளறியாது காதடைக்கப் பாடிக்கொண்டு திரிகிறார்களேயொழிய காலத்திற்கேற்ற புது நூற்களொன்றையும் புனைந் தாரில்லை. அத்தமிழை அபிவிருத்தி செய்ய வேண்டிய மார்க்கங்களில் செல்லுகிறார்களுமில்லை. பிறர் மயங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் யமகம், திரிபு, சிலேடை, நிரோட்டகம் போன்றவற்றைப் புலவர்கள் பாட முயலுகிறார்கள். ஆகையால், தமிழைப் பலர் கற்க முடியாது போய்விடுகிறது.”
இச்சொற்பொழிவில் கட்டுரையை ‘வியாசம்’ எனவும், கட்டுரையாளரை ‘வியாசன்’ எனவும் வடமொழிச் சொற்களால் பாரதியார் குறிப்பிட்டிருந்தார். நுட்பமான கருத்துகளைக் கட்டுரை கொண்டிருந்தபோதிலும், கட்டுரையின் மொழிநடை பிறர் எளிதில் அறியக்கூடிய வகையில் அமையவில்லை என மதிப்பிட்டிருந்தார். சில ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைக் கட்டுரையாளரிடமிருந்து அறிந்துகொண்டோம் எனக் கூறி ‘ஐங்கலைகள்’ (The Five Arts), ‘கலைச்சுவை’ (Artistic Taste) முதலியவற்றை எடுத்துக்காட்டுகளாகத் தெரிவித்திருந்தார்.
இலக்கியக் கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை
திருவள்ளுவரைக் குறித்த அந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குக் குறைவான எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் வந்திருந்தனர். அதையும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பாரதி. ‘மேல்நாட்டில் ஓரூரில் ‘ஷெல்லியின் பெருமை’யைப் பற்றி ஒரு வியாசம் நடக்கப் போகிறதென்றால் நூற்றுக்கணக்கான ஜனங்கள் தானே வருவார்கள். ‘திருவள்ளுவரின் பெருமை’ என்ற இவ்வரிய பெரிய விஷயத்தை யாராய நமது சங்கத்தில் எத்தனை குறைந்த தொகையான ஜனங்கள் வந்திருக்கின்றனர் பார்த்தீர்களா?’ என மேல்நாட்டின் நிலையையும் நம் நாட்டின் நிலையையும் ஒப்பிட்டுக் காட்டினார். இலக்கியக் கூட்டத்துக்கு வருகை தருவோரின் குறைவான எண்ணிக்கை பற்றிய நூற்றாண்டுக்கு முந்தைய பாரதியின் வருத்தம் இன்றைக்கும்கூடப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. மேலும், மேல்நாட்டவர்கள் ஷேக்ஸ்பியர் திருநாள் என்றும், மில்டன் திருநாள் என்றும் கொண்டாடுவதுபோல நாம் கம்பர் நாளென்றும், காளிதாசர் நாளென்றும் கொண்டாடுகிறோமா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். திருக்குறளை மையமிட்டு இந்தச் சிந்தனைகளையெல்லாம் வெளிப்படுத்தியபோது பாரதிக்கு வயது 23தான்.
மாறியது பார்வை
1905-ம் ஆண்டு வள்ளுவரை மகாகவியாகக் கொள்ளத் தயக்கம் காட்டிய பாரதி, 1916-ம் ஆண்டு, “தமிழ்நாட்டில் இப்போது ‘புதிய உயிர்’ தோன்றியிருப்பதால், நாம் இவ்விஷயத்தில் தமோ குணம் செலுத்தாமல் கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மஹாகவிகளுக்கு ஞாபகச் சிலைகளும், வருஷோற்சவங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் கம்பனையும் இளங்கோவையும்போல வள்ளுவரையும் மகாகவி எனப் போற்றி எழுதினார்.
இடைக்காலத்தில் வள்ளுவரை, ‘தெய்வ வள்ளுவர்’ (1910) எனப் போற்றிய பாரதி, பிந்தைய காலங்களில் வள்ளுவர் குறித்த கருத்து வளர்ச்சியில், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ (1919) எனவும் ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை’ (1919) எனவும் பாடிப் போற்றினார். முதலில் வள்ளுவரை மகாகவியாகக் கொள்ளாத பாரதி பிந்தைய காலங்களில் மகாகவியாகக் கொண்டாடிய நிலை, திருக்குறளைத் தொடர்ந்து ஆழ்ந்து பயின்று சிந்தித்துப் பெற்ற சீரான கருத்து வளர்ச்சியைக் காட்டுகிறது.
பாரதி தலைமையில் இன்னொரு சொற்பொழிவு
பாரதி தலைமை தாங்கிய இன்னொரு சொற்பொழிவு அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்தது. இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் 1921 மார்ச் 5-ல் சென்னை தம்பு செட்டித் தெருவில், தொழிலாளர் தலைவராக அக்காலத்தில் முன்னணியில் இயங்கிவந்த ஏ.குமாரசாமி செட்டியார் என்பவரும், மாணிக்க முதலியார், தேவராஜ அய்யங்கார் ஆகியோரும் ‘தற்கால நிலைமை’, ‘நெசவு’ என்னும் தலைப்புகளில் சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கின்றனர். இதுபற்றிய பதிவு 1921 மார்ச் 4 தேதியிட்ட ‘சுதேசமித்திர’னில் வெளிவந்தது: ‘ஒரு பொதுக் கூட்டம்: நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தம்பு செட்டித் தெரு ராமசாமி கோவில் 218 நெம்பர் கிரஹத்தில் ‘சுதேசமித்திரன்’ உதவி ஆசிரியர் மிஸ்டர் ஸி.சுப்பிரமணிய பாரதியாரின் தலைமையின் கீழ் ஸ்ரீமான்களான ஏ.குமாரசாமி செட்டியார், மாணிக்க முதலியார், தேவராஜ அய்யங்கார் முதலியவர்கள் ‘தற்கால நிலைமை’, ‘நெசவு’ என்பதைப் பற்றிப் பேசுவார்கள்.’
சென்னை வாழ்வின் தொடக்கத்தில் மாநிலக் கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தில் ஒரு மாணவரின் சொற்பொழிவுக்குத் தலைமை தாங்கிப் பேசியதும், வாழ்வின் இறுதியில் சென்னையில் மக்கள் மன்றத்தில் தொழிலாளர் தலைவர் உள்ளிட்டோர் பேசிய சொற்பொழிவுகளுக்குத் தலைமைதாங்கிப் பேசியதும், 23 வயதிலேயே வள்ளுவரைக் குறித்துத் தனித்தன்மையான மதிப்பீடுகளை முன்வைத்ததும், அக்கருத்துகள் பின்னாளில் வளர்ச்சி கண்டதும் பாரதி வரலாற்றின் புதிய பக்கங்களாக நம்முன் விரிகின்றன.
- ய.மணிகண்டன், பேராசிரியர், பாரதி ஆய்வாளர்.
தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com
டிசம்பர் 11: பாரதி பிறந்த தினம்
மாணவர்களுக்குப் பாரதியின் அறிவுரை
நல்ல பேச்சு, இனிய பாட்டு, தேக பலத்துக்குரிய விளையாட்டுகள் முதலியவற்றிலே ஆசை கொள்ளுங்கள். அச்சமில்லாமை, மன உற்சாகம் முதலிய குணங்களை அபிவிருத்தி செய்யுங்கள்.
- பிப்ரவரி 2, 1907 ‘இந்தியா’ இதழில் எழுதிய கட்டுரையில்
பத்திரிகையாளர் பாரதி
விடுதலைப் போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்த காலகட்டம் அது. சென்னையில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் மூலம் தேசிய உணர்வுகளை விதைத்துக்கொண்டிருந்தார் ஜி.சுப்பிரமணிய ஐயர். மதுரை வந்த ஜி.சுப்பிரமணிய ஐயரைச் சந்தித்த பாரதி அவரது மனதிலும் இடம்பிடித்தார். 1904-ல் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து ‘சக்கரவர்த்தினி’, ‘இந்தியா’, ‘விஜயா’, ‘சூரியோதயம்’, ‘கர்மயோகி’, ‘தர்மம்’ ஆகிய தமிழ் இதழ்களிலும் ‘பாலபாரதா’ என்ற ஆங்கில இதழிலும் பணியாற்றினார். ‘விவேகபாநு’, ‘ஞானபாநு’, ‘காமன்வீல்’, ‘ஆர்யா’, ‘மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்’, ‘நியூ இண்டியா’, ‘பெண்கல்வி’, ‘கலைமகள்’, ‘தேசபக்தன்’, ‘கதாரத்னாகரன்’ ஆகிய இதழ்களிலும் எழுதினார். தமிழ்க் கவிதைகளுக்கு மட்டுமின்றி உரைநடைகளுக்கும் பாரதியின் எழுத்து உத்வேகம் தந்தது.
தமிழில் முதலில் அரசியல் கேலிச்சித்திரங்களை வெளியிட்டது பாரதி ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ பத்திரிகைதான். பத்திரிகையின் முதல் பக்கத்தில் அரசியல் கேலிச் சித்திரங்கள் வெளிவந்தன. கேலிச்சித்திரங்களுக்கான கருத்தாக்கத்தையும், உத்திகளையும் ஓவியரிடம் விளக்கிவிடுவார் பாரதி. கார்ட்டூன் களைகட்டும்.
பன்மொழிப் புலமையாளர்
பாரதியாரின் அத்தை குப்பம்மாள் காசியில் வாழ்ந்துவந்தார். அவரது அழைப்பை ஏற்று, காசிக்குச் சென்ற பாரதி, அங்குள்ள இந்து கல்லூரியில் சேர்ந்து படித்தார். இந்தி, சமஸ்கிருதம் கற்றார். மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். அவர் வாழ்வில் முக்கியமான காலகட்டம் அது. வைதீகங்களை எதிர்த்து அவர் குரல்கொடுக்க ஆரம்பித்தது அப்போதுதான். காசியிலிருந்து படிப்பைப் பாதியிலே விட்டுவிட்டு மீண்டும் எட்டயபுரத்துக்கே திரும்பிவிட்டார் பாரதி. ஆனாலும், அவரது பன்மொழிப் புலமைக்கு காசி வாழ்க்கை ஒரு காரணமாக அமைந்தது. வங்க மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது. ஆங்கிலம் அத்துபடி. ஷெல்லியும் பைரனும் பாரதிக்குப் பிடித்தமான கவிஞர்கள்.
வரலாற்று நட்பு
மாமன்-மருமகன் முறைசொல்லி உறவாடியவர்கள் பாரதியும் வஉசியும். பக்கத்து ஊர்க்காரர்கள். ஆனால், அவர்கள் அறிமுகமானது சென்னையில் ‘இந்தியா’ பத்திரிகை அதிபரான திருமலாச்சாரியாரின் வீட்டில். “முண்டாசுக் கட்டுக்கும் முறுக்கு மீசைக்கும் பெயர் பெற்றது எங்கள் ஜில்லா. கண்டதுமே, பாரதி என்று கண்டுகொண்டேன்” என்று அந்த முதல் சந்திப்பை நினைவுகூர்ந்திருக்கிறார் வஉசி. பின்னர், ‘இந்தியா’ பத்திரிகை அலுவலகம் செல்வதும் பாரதியோடு உரையாடுவதும் வழக்கமானது. இந்திய அரசியல் நிலைமை மட்டுமின்றி சர்வதேச விவகாரங்களைப் பற்றியும் இருவரும் விவாதிப்பார்கள். இருவரின் பெயர்களை மட்டுமல்ல, அவர்களது நட்பையும் சரித்திரம் பேசுகிறது!
வீடுதோறும் பாரதி
பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் பெருந்தொகுப்பாக வரவில்லை. 8 பக்கம், 16 பக்கம், 32 பக்கம் என்று சிறுவெளியீடுகள்தான். ஆங்கிலேய அரசின் அடக்குமுறை ஒரு காரணம். தனித் தனி நூல்களாயிருந்த அனைத்தையும், முதன்முதலில் ‘பாரதியார் கவிதைகள்’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டது பாரதி பிரசுராலயம்தான். ஒரு லட்சம் பிரதிகளை மலிவுப் பதிப்புகளாக வெளியிட்டவர் சக்தி வை.கோவிந்தன். பாரதியை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததில் சக்தி காரியாலயத்துக்கு முக்கியப் பங்குண்டு. தொடர்ந்து பல பதிப்பகங்கள், பாரதியார் கவிதைகளை மலிவுப் பதிப்புகளாக வெளியிடத் தொடங்கின. இன்று தமிழர் வீடுகளின் அடையாளங்களில் பாரதியின் கவிதைகளும் ஒன்றாக மாறியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT