Published : 19 Nov 2018 09:08 AM
Last Updated : 19 Nov 2018 09:08 AM
இன்றைய தலைமுறை இழந்துகொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது மண் சார்ந்த பாரம்பரிய அறிவு. அப்படிப்பட்ட அறிவின் விளைச்சலான 170-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். தமிழ்நாட்டு விவசாயிகள் கவனத்தை இயற்கை வேளாண்மை நோக்கித் திருப்பிய நம்மாழ்வாரின் விழுதுகளில் ஒருவர் இவர். புற்றுநோயின் பிடியில் சிக்கி, உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இதற்கு, ஓரிரு வாரங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கீழச்சிங்களாந்தி கிராமத்தில் அவரைச் சந்தித்துப் பேசினேன். தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி துளியும் பொருட்படுத்தாதவராகப் பேசியவர் விவசாயம், விவசாயிகள், தமிழ் மக்கள் மீது அத்தனை கரிசனத்தை வெளிப்படுத்தினார்.
உங்கள் வாழ்க்கையில் நம்மாழ்வார்தான் திருப்புமுனை அல்லவா?
நான் அரசியல் சார்பு கொண்டவன் இல்லை என்றாலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்த ராஜீவ் காந்தி மீது எனக்குத் தனி ஈர்ப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்களின் துணை இல்லாமலேயே ஒரு நுகர்வோன் நீதிமன்றத்தை அணுக, வாதாட உதவிய சட்டம் இது. பொது வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தேன். நுகர்வோர் இயக்கச் செயல்பாடுகள்தான் தொடக்கத்தில் என் களம். வெறும் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நான் ஐந்நூறுக்கும் மேற்பட்ட வழக்குகளைக் கையாண்டேன். ‘ஏன் நாம் நஞ்சில்லாத உணவு நுகர்வோருக்குக் கிடைப்பதற்காகப் போராடக் கூடாது?’ என்று ஒரு நாள் கேள்வி எழுந்தது. நம்மாழ்வாரைத் தேடிப்போனோம். இப்படித்தான் அவருடன் என்னுடைய பயணம் தொடங்கியது.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் யோசனை எப்படி உங்களுக்கு வந்தது?
நிறையப் பயணங்கள் செய்தோம். அப்படி 2006-ல் ஒரு பயணம். பூம்புகாரிலிருந்து கல்லணை வரை. அப்போதுதான் வடுகூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்ற ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தன்னுடைய வீட்டுக்கு எங்களை அழைத்தார். வீட்டில் ஒரு மஞ்சள் பையை அவர் நம்மாழ்வாரிடம் கொடுத்தார். பையைத் திறந்தால் விதைநெல். “இது காட்டு யானம். 180 நாள் பயிர். நாங்க ஒருமுறை விதைச்சிட்டோம்னா அறுவடைக்குப் போனா போதும். தண்ணியில் நின்னா படகுல போய் அறுப்போம். தண்ணி இல்லன்னா ஆளுங்களை வச்சு அறுப்போம். அப்படிப்பட்ட நெல்லு. எங்க தாத்தா காலத்துலருந்து நாங்க இதைச் சாகுபடி பண்ணிக்கிட்டிருக்கோம். இப்பவும் சாப்பாட்டுக்கு இதுதான் எங்களுக்கு. ரொம்ப ஆரோக்கியமா இருக்கோம். ஆனா, சுத்துப்பட்டு இடங்கள்ல இந்த நெல் ரகம் மறைஞ்சிபோயிடுச்சிங்க. இந்த ரகத்தை மீட்டெடுக்கணும்னுதான் உங்ககிட்ட கொடுத்தேன்” என்றார் ராமகிருஷ்ணன். அதைக் கேட்டதும், “ஒரு நெல்ல மீட்டுட்டோம். இனி இப்படியான ரகங்கள் அத்தனையையும் மீட்டெடுப்போம்” என்று சொன்னார் நம்மாழ்வார். அந்தப் பயணம் முடியும்போதே குடவாலை, பால்குடவாலை, பூங்கார் என்று ஏழு வகை நெல் வகைகள் எங்களிடம் சேர்ந்திருந்தன. அது அத்தனையையும் என்னிடம் கொடுத்து, “இன்னையிலருந்து ஒங்களுக்கு நெல் ஜெயராமன்னு பேரு வைக்கிறேன். நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரிங்க” என்று சொன்னார் நம்மாழ்வார். இதுவரை 174 ரகங்களை மீட்டெடுத்திருக்கிறோம். 41 ஆயிரம் விவசாயிகளிடம் இந்த ரகங்களைக் கொண்டுசேர்த்திருக்கிறோம்.
இந்த நெல் ரகங்களின் வயது ஒரே மாதிரி இருந்ததா, இல்லை வேறு வேறா?
பூங்கார் 70 நாள் பயிர், கருங்குறுவைக்கும் குள்ளக்காருக்கும் 90 நாள், மட்டைக்கார் 110 நாள், குழிவெடிச்சானுக்கும் சேலம் சன்னாவுக்கும் 110 நாள், தூயமல்லிக்கும் சிவப்புக் கவுணிக்கும் 130 நாள், கருப்புக் கவுணி 135 நாள், மைசூர் மல்லி 140 நாள், கருடன் சம்பா 145 நாள், மாப்பிள்ளைச் சம்பா 150, காட்டு யானம் 180, ஒட்டடையான் 200 நாள்.
நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?
ஐயோ பெரிய கஷ்டம்! வயசாளிகளிடம் பேசுகையில் அவர்கள் சொல்லும் நெல் ரகங்களைத் தேடிச் செல்வோம். விவசாயிகளிடம் போய்க் கேட்டால் “ஆடிப்பட்டமெல்லாம் முடிச்சிட்டு அப்புறம் தாறோம்” என்று சொல்லிவிடுவார்கள். அப்புறம் அவர்களிடம் உட்கார்ந்து ஒரு நாள் முழுக்கப் பேசிய பிறகு, நமக்குக் கால் கிலோ தருவார்கள். அந்த நெல்லை எடுத்துக்கொண்டுபோய் ஊரிலுள்ள வயசாளிகளிடம் அதன் அருமை பெருமையையெல்லாம் கேட்போம். எவ்வளவு உயரம் வளரும், சிவப்பரிசியா வெள்ளையரிசியா, சாப்பாட்டுக்கு நன்றாக இருக்குமா என்றெல்லாம் கேட்டுக்கொள்வோம். ஊர் ஊராக அலைவோம். எதுவுமே எளிதல்ல.
மீட்டெடுத்த பின் அடுத்தகட்டமாக என்ன செய்வீர்கள்?
அந்த நெல் ரகங்களின் விசேஷத் தன்மைகள் என்று நாங்கள் கேள்விபட்டவை எல்லாவற்றையும் உறுதிசெய்துகொள்ள பரிசோதனைகள் செய்வோம். உறுதிசெய்துகொண்ட விஷயங்களை மக்களிடம் கொண்டுசெல்வோம். இலுப்பைப்பூச் சம்பா என்ற ரகத்தைக் கொடுத்த விவசாயி சொன்னார், “இது மூணுவேளை சாப்பாட்டுக்கான அரிசி இல்லை. காய்ச்சல், ஒவ்வாமை அப்படின்னு உடம்புக்கு ஏதும் முடியலன்னா இந்த அரிசியில கஞ்சி வெச்சிக் குடிச்சிட்டு ஓய்வெடுத்தா சரியாப்போயிடும்.” கேட்க அதிசயம்போல இருந்தது! ஆனால், பரீட்சிக்காமல், நிரூபணம் செய்யாமல் எப்படி மக்களிடம் கொண்டுசெல்வது?
எப்படிப் பரிசோதிப்பீர்கள்?
நாங்களே நட்டுப்பார்ப்போம். விளைச்சல், மகசூல் எப்படி இருக்கிறது என்பது தொடங்கி, சாப்பாட்டு ருசி வரை சோதித்துப்பார்ப்போம். அப்புறம் நவீன அறிவியல் முறைப்படியிலான ஆராய்ச்சி. உதாரணமாக, தஞ்சாவூரில் உள்ள இந்திய பயிர்ப் பதனத் தொழில்நுட்பக் கழகத்தில் எங்களுக்கு ஒரு நண்பர். தனிப்பட்ட வகையில் அவர் இந்த நெல் ரகங்களையெல்லாம் சோதித்து, இன்னின்னவற்றில் இன்னின்ன சத்துக்கள் இருக்கின்றன; இன்னின்னவை இந்தந்தத் தன்மைகளைக் கொண்டவை என்பதையெல்லாம் சொல்வார். இப்படியானவர்களை எல்லாமும் பயணத்தில் இணைத்துக்கொண்டோம்.
விவசாயிகளிடமிருந்து ஆதரவு எப்படி இருக்கிறது?
சிரமம்தான். ஆனால், இன்று சூழல் மாறுகிறது. ‘பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல விளைச்சல் தராது’ என்று பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்திருக்கிறார்களே, என்ன செய்வது? பாரம்பரிய ரகங்களைக் காணமலடிப்பதற்கே பெரிய வியாபார சதி வேலை செய்யும்போது அதையெல்லாம் தாண்டி வருவது அவ்வளவு எளிதா என்ன? ஆனால், நாங்கள் பேசியும், செய்துகாட்டியும் நம்பிக்கையை உண்டாக்கினோம். ஒடிஷாவின் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ரிச்சார்யா கூறியதைத்தான் அடிக்கடி சொல்வோம், “இந்தியாவில் உள்ள நெல் ரகங்கள், நாட்டு மாடுகளைக் கொண்டே வேளாண் புரட்சியைச் சாதிக்க முடியும்” என்றவர் அவர். அவருடைய கணிப்பின்படி இந்தியா மொத்தம் இரண்டு லட்சம் பாரம்பரிய நெல் ரகங்களின் தாயகம். அவற்றில் இரண்டாயிரம் ரகங்களாவது நல்ல விளைச்சலைக் கொடுக்கக் கூடியவை. ஒரு ஹெக்டேருக்கு 7,500 கிலோ வரைக்கும் அறுக்கலாம் என்று கூறியவர் அவர்.
பாரம்பரிய ரகத்தைக் கொண்டு, அதிக மகசூலை உங்களால் காண முடிந்ததா?
இந்தியாவின் சராசரி மகசூல் 1.5 டன். தமிழ்நாட்டின் சராசரி 2 டன். ஆலங்குடியில் பெருமாள் என்றொரு விவசாயியைப் பற்றி நம்முடைய ‘இந்து தமிழ்’ நாளிதழிலேயே செய்தி வந்திருந்ததே! ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய கால் கிலோ விதை நெல்லை மட்டுமே பயன்படுத்தி, மூன்று டன்னுக்கு மேல் மகசூல் பார்த்தவர் அவர். ஆனால், அவர் செய்தது ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான். நாங்கள் அவருடைய உத்தியைப் பின்பற்றி இயற்கை விவசாயத்தில் தூய மல்லி என்கிற ரகத்தைப் பயன்படுத்தி, கதிராமங்கலத்தில் பரிசோதனை செய்துபார்த்தோம். கதிராமங்கலத்தில் நிலத்தடிநீர்தான். வழக்கமாக 30 கிலோ விதைநெல்லுக்கும் மேலாகத்தான் ஒரு ஏக்கருக்குப் போடுவார்கள். ஆலங்குடி பெருமாளின் உத்தியில் முக்கியமான அம்சம், கால் கிலோ விதையில் ஒரு ஏக்கர் நடுவதுதான். நாற்றங்காலில் விதைநெல்லை அப்படிக்கப்படிச் சுற்றி நின்று போட வேண்டும். பதினெட்டு நாள் கழித்துப் போய்ப் பார்த்தால், நாற்று ஒவ்வொன்றும் ஏழெட்டுச் சிம்புகள் வெடிச்சிருக்கும். அந்த நாற்றை எடுத்து 50 செமீ இடைவெளி விட்டு நட்டீர்கள் என்றால், ஒரு ஏக்கருக்குத் தேவை 16 ஆயிரம் நாற்றுக்கள்தான். அதற்கு அடிப்படை கால் கிலோ விதை நெல்தான்.
இப்படிச் செய்துபார்த்து எவ்வளவு மகசூல் கண்டீர்கள்?
நம்ப மாட்டீர்கள்! 4,170 கிலோ மகசூல் எடுத்தோம். அடுத்து, ஐந்தாயிரம் கிலோ தாண்டி எடுக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம்.
மலைப்பாக இருக்கிறதே… இதை மற்றவர்கள் நம்பினார்களா?
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் ஒருமுறை இதைச் சொன்னோம். அவர் நம்பவில்லை. அதற்குப் பிறகு அவர்களே சோதனை செய்துபார்த்து, அதில் 3,800 கிலோவுக்குச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இந்த ‘ஒரு ஏக்கர் - கால் கிலோ உத்தி’யையும் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களையும் இயற்கை விவசாயத்தையும் தமிழ்நாட்டிலுள்ள எல்லா வேளாண் அறிவியல் நிலையங்களுக்கும் கொண்டுபோகும் வேலையை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கையில் எடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான நெல் ரகங்களை மீட்டெடுத்துவிட்டீர்கள் என்று சொல்லலாம்தானே?
அப்படி இல்லை. இன்னும் ஐந்நூறு நெல் ரகங்களாவது இருக்கலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சுமார் ஆயிரம் ரகங்களாவது வைத்திருப்பார்கள். துணைவேந்தரின் உதவியுடன் அவற்றில் பலவற்றையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற யோசனையும் உண்டு.
பாரம்பரிய நெல் ரகங்கள் நம் கலாச்சாரத்தில் எப்படி இடம்பிடித்திருந்தன?
ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு நெல் வகைகளை அந்தக் காலத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். திருமணக் காலத்துக்கு முன்பு மாப்பிள்ளைச் சம்பா, பின்பு கருப்புக் கவுணி, மகப்பேறு காலத்தில் பூங்கார், குழந்தை பிறந்த பிறகு பால் குடவாலை, குழந்தைக்கு ஆறு மாதத்தில் முதல் உணவாக வாடன் சம்பா. கன்னியாகுமரியில் அரச குடும்பம் சாப்பிடும் கொட்டாரச் சம்பா என்று நெல் ரகம் இருந்திருக்கிறது. சாப்பாடு என்றில்லாமல் நம் வாழ்க்கையோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்தவை அரிசியும் நெல்லும். பிறந்த பதினாறாவது நாள் காப்பரிசி தொடங்கி இறந்த பின் வாய்க்கரிசி வரை அரிசியும் நெல்லும் நம்மோடு ஒட்டி உறவாடுபவை. பொங்கல் அன்று கள்ளி வட்டம் வைப்போம். அதில் ஒரு நெற்பயிர் வைப்போம். அப்புறம் விதை முகூர்த்தம் செய்வது, நல்லேர் பூட்டுவது போன்றவையும் நெல்லையும் வேளாண்மையையும் கொண்டாடும் சடங்குகள்.
நெல் ரகங்களின் வரலாறு குறித்தும் தேடிப்பார்த்திருக்கிறீர்களா?
நிறைய. அப்படித் தேடிப்பார்த்தபோது சுவாரசியமான விஷயங்கள் நிறையக் கிடைத்திருக்கின்றன. 1911-ல் விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் முடிகொண்டான் என்று ஒரு கிராமத்தில் குழந்தைவேல் என்று ஒரு பண்ணையார் இருந்திருக்கிறார். அந்தப் பண்ணையாருக்குக் கருடன் சம்பா மட்டும் எவ்வளவு மகசூல் தந்தது தெரியுமா? ஏக்கருக்கு 3,420 கிலோ.
ஒருங்கிணைந்த தஞ்சையில் மட்டும் எத்தனை ரகங்களை மீட்டெடுத்திருப்பீர்கள்?
சுமார் 60 ரகங்கள் இருக்கும். தமிழ்நாட்டிலேயே பாரம்பரிய நெல் ரகங்கள் அதிக அளவில் கிடைத்தது வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில்தான்.
அது கடைமடைப் பகுதி அல்லவா?
ஆமாம். தண்ணீர் இல்லாத இடத்தில்தான் கண்டுபிடிப்புகள் நிறைய நடந்திருக்கின்றன. திருத்துறைப்பூண்டிக்கு உரிய ரகம் கார் நெல்லு. கார் ஐப்பசி மாதம் அறுவடை செய்வது. கடுமையான மழையில் தண்ணீருக்குள் போய் அறுப்பார்கள். தெளிக்காமல், நடவு நட்டுவிட்டுத் தண்ணீர் விடுவார்கள். பயிர் வளர ஆரம்பித்த பின் தண்ணீர் எவ்விடும். தண்ணீருக்குள்ளேயே அந்தப் பயிர்கள் கதிர் வைக்கும், பழுக்கும், தண்ணீருக்குள்ளேயே அறுவடை செய்துவிட்டு வருவோம். எந்த உரமும் கொடுக்க வேண்டியதில்லை. நடவு நடுவது ஒன்றுதான் வேலை. அறுத்துவிட்டு ஈரத்தோடு போட்டால் முளைக்காது என்பது அதன் தனிச்சிறப்பு. அப்புறம் அவலுக்காகவே உள்ள நெல் கார்தான். கார்த்திகை மாதத்தில் கார் நெல்லைச் சிறகி என்ற பறவையிடமிருந்து பாதுகாக்கப் பெரும்பாடு படுவோம். தப்பு வைத்துக்கொண்டு வயல்காட்டில் அடிப்பார்கள், தீப்பந்தம் கொளுத்திவைப்பார்கள். அந்த மாதிரி பாரம்பரிய நெல் ரகங்களை நாடி வலசைப் பறவைகளும் வருவதை முன்பு நான் பார்த்திருக்கிறேன்.
நெல் விவசாயம் என்பது இந்த அளவுக்குத் தண்ணீர் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறதே?
நெல் என்பது புல் வகையைச் சேர்ந்தது. அதில் தண்ணீரை நிறுத்த அவசியமே இல்லை. ‘நீர் மறைய நீர் கட்டு’ என்று சொல்வார்கள். ஒரு தடவை தண்ணீர் வைத்தால் தண்ணீர் காய்ந்துபோய், காக்காய் கால்விரல்கள் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு இடைவெளி விட்டுத் தரையில் வெடிப்பு வர வேண்டும். அதற்குப் பிறகுதான் மறுபடியும் தண்ணீர் வைக்க வேண்டும். அப்போதுதான் தூர் அதிகமாகக் கட்டும். அந்த மாதிரி தொழில்நுட்பம்தான் முன்பு இருந்தது. அதையெல்லாம் மீண்டும் மீட்டு நாம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
இந்தப் பயணத்தில் உங்களைச் சோர்வடையச் செய்த விஷயம் எது?
நம்மாழ்வார் ஐயா ஒரு 50 ஆண்டுகள் வேலைபார்த்திருக்கார். நான் ஒரு 12 ஆண்டுகள் வேலைபார்த்திருக்கிறேன். இன்னும் மாற்றம் வராத மாவட்டம் என்றால், அது காவிரி மாவட்டங்கள்தான். இயற்கை வேளாண்மையில் திருவண்ணாமலை, ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர் என்று நிறைய மாவட்டங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
என்ன காரணம்?
காவிரிப் படுகை மாவட்டங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துதான். களைக்கொல்லி, இடுபொருட்கள், ரசாயன உரங்கள் இலவசமாகக் கொடுக்கிறது. ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் செய்தால்தான் இந்த இடுபொருட்கள், மோட்டார் இன்ஜின், பைப், தார்ப்பாய் இலவசமாகக் கிடைக்கும் என்பதால் அதிலிருந்து வெளிவர மாட்டேன் என்கிறார்கள் விவசாயிகள். ஒரு ஏக்கருக்கு ரசாயன உரத்திலிருந்து பல விஷயங்களுக்காகவும் அரசாங்கம் ரூ.18 ஆயிரம் வரை செலவுசெய்கிறது. அது மறைமுகமாக விவசாயிகள் அல்லாதவர்களுக்குத்தான் போகிறது. தார்ப்பாய் கம்பெனி, டிராக்டர் கம்பெனி, மோட்டார் இன்ஜின் கம்பெனி என்று விவசாயிகள் பேரைச் சொல்லி, மற்றவர்கள் காசு பார்க்கிறார்கள். ரூ.15 விற்கும் ஆயில் இன்ஜினுக்கு மானியம் ரூ.10 தருவதாக அரசு கூறினால், கம்பெனிக்காரர்கள் ரூ.25-க்கு விற்கிறார்கள். இல்லையென்றால், இடையிலுள்ள அதிகாரிகள் கம்பெனிக்காரர்களின் பேரைச் சொல்லிக் கொள்ளை அடிக்கிறார்கள். இயற்கை விவசாயம் செய்யும் நாங்கள் ஏக்கருக்கு ரூ. 3,000 கொடுங்கள்; நல்ல மகசூல் எடுத்துக்காட்டுகிறோம் என்று அரசைக் கேட்கிறோம். அதேபோல் பாரம்பரிய நெல் ரகங்களை அரசு பரவலாக ஆக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். பார்ப்போம்.
இயற்கை விவசாயம் பணக்காரர்கள் தொடர்பான விஷயம்போல் ஆகிவிட்டதே?
வருத்தமான விஷயம்தான். குறைந்த செலவில் உற்பத்திசெய்து, குறைந்த விலைக்கு விற்பதுதான் அதன் இலக்கு. ஆனால், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்பவர்கள் ஒரு கிலோ ரூ.150, ரூ.200 என்று நகரங்களில் அதிக விலை வைத்து விற்கிறார்கள். எல்லாம் மாறும்.
காவிரிப் படுகையில் விவசாயத்தின் எதிர்காலம் என்ன?
தமிழ்நாட்டின் மூன்று வேளை உணவில், ஒரு வேளை உணவை வழங்குவது காவிரிப் படுகை. அங்கே புயல் அடித்தாலும் சரி, நிலம் வறண்டுபோனாலும் சரி; நம்முடைய உணவுப் பத்தாயமே ஓட்டையாகிவிடும். ஒட்டுமொத்த தமிழகத்தையும் அது பாதிக்கும். ஆகையால், காவிரிப் படுகையின் எதிர்காலம் என்பது வெறுமனே விவசாயிகளின் பிரச்சினை மட்டும் அல்ல. ஆனால், வறட்சியோ, வெள்ளமோ; காவிரிப் படுகை பாதிக்கப்படும்போது நாம் அதற்குரிய முக்கியத்துவத்தைத் தருவதே இல்லை. விவசாயம் அங்கு நிலைத்திருப்பதற்கான வேலைகளை நீண்ட கால நோக்கில் நாம் செய்வதே இல்லை. ஆனால், எனக்கு இளைய தலைமுறை மீது நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், கொஞ்சம் கொஞ்சமாக நாம் மரபில் இழந்த விஷயங்களையெல்லாம் மீட்டெடுத்தால், அடுத்த பத்திருபது வருடங்களுக்குள் காவிரி விவசாயிகள் மீண்டும் தலைநிமிர்ந்துவிடுவார்கள். அதோடு, நம் தமிழ் மக்களும் நஞ்சில்லா உணவைச் சாப்பிடுவார்கள். இயற்கை வேளாண்மை இதற்கு நிச்சயம் வழிகாட்டும். அப்போது காவிரிப் படுகையின் முகமும் மாறும். அதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது. என்ன ஒரு வேதனை என்றால், நோய் என்னைக் கடுமையாகப் படுத்துகிறது. எனக்கு என்னுடைய குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கையெல்லாம் ஒரு பொருட்டல்ல. மக்களுக்காக ஓடுகிறோம். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நிறைய வேலை இருக்கும்போது பாதியைக்கூட முடிக்கவில்லையே என்ற கவலைதான் என்னைக் கடுமையாக வருத்துகிறது!
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
நெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 9952787998
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT