Last Updated : 19 Dec, 2018 09:05 AM

 

Published : 19 Dec 2018 09:05 AM
Last Updated : 19 Dec 2018 09:05 AM

 உலகை மாற்றிய காந்தியின் பயணம்!

‘‘காந்தி! எனக்கு நிறத் துவேஷம் எதுவுமே கிடையாது என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன். ஆனால், என் ஓட்டலுக்கு வருபவர்கள் எல்லோரும் ஐரோப்பியர்கள். சாப்பாட்டு அறையில் உங்களை நான் சாப்பிட அனுமதித்தால் அவர்கள் கோபமடைவார்கள். அவர்கள் இங்கிருந்து போய்விட்டாலும் போய்விடக் கூடும்’’ - இப்படி அந்த விடுதியின் உரிமையாளர் ஜான்ஸ்ட்டன் கூறியபோது, அதற்கு முன்னர் ஒரு வாரத்துக்குள் நிறவெறியின் தாக்குதல்களைப் பலமாக எதிர்கொண்டிருந்த காந்திக்கு இது ஆசுவாசமாகவே பட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு வழக்கு நிமித்தமாக வந்திருந்த காந்தி, டர்பனிலிருந்து பிரிட்டோரியாவுக்கு மேற்கொண்ட பயணம், உலக வரலாற்றை மாற்றிய பயணங்களுள் ஒன்று என்று தயங்காமல் சொல்லிவிடலாம். ஏனெனில், பீட்டர்மாரீட்ஸ்பெர்கில் முதல் வகுப்பிலிருந்து தள்ளிவிடப்பட்டது மட்டுமல்ல, பிரிட்டோரியா வந்துசேர்வதற்குள் இனவெறித் தாக்குதல்களை காந்தி அடுக்கடுக்காக வெவ்வேறு வகைகளில் எதிர்கொண்டார்.

பீட்டர்மாரீட்ஸ்பெர்கிலிருந்து சார்லஸ் டவுன் சென்ற காந்தி அங்கிருந்து ஜோஹனஸ்பெர்குக்குச் செல்வதற்கு குதிரை வண்டியில் முன்பே பயணச் சீட்டு எடுத்திருந்தார். ஆனால், குதிரை வண்டிப் பொறுப்பாளரான ஆங்கிலேயர் (இப்படியானவர்களை ‘லீடர்’ என்று அவர்கள் அழைத்தார்கள்) காந்தியை உள்ளே ஆங்கிலேயர்களுடன் உட்கார அனுமதிக்கவில்லை. வண்டியோட்டியின் பக்கவாட்டில் இருந்த இருக்கையில் உட்கார்ந்துவரும்படி காந்தி பணிக்கப்பட்டார். அப்படி உட்கார்ந்துவரும்போது இடையில் ஒரு இடத்தில் ‘லீடர்’ வண்டியோட்டிக்குப் பக்கத்தில் அமர்ந்து புகைபிடிக்க விரும்பினார். ஒரு அழுக்குத் துணியை எடுத்துப் படிக்கட்டின் மேல் போட்டு “நீ அங்கே உட்கார். நான் புகைபிடிக்க வேண்டும்” என்றார். மேலும் மேலும் அவமானப்படுத்தப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாத காந்தி, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே காந்தியை ‘லீடர்’ சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தார். வழியெல்லாம் அடித்துக்கொண்டே வந்தார். காந்தி படியைப் பிடித்துத் தொங்கியபடியேதான் வந்தார். தனக்கு நடந்ததையெல்லாம் பின்பு இந்தியர்களிடம் காந்தி சொன்னபோது. “நீ புதியவன். எங்களுக்கு இந்த அவமானங்கள் எல்லாம் சாதாரணம்” என்றார்கள் அவர்கள்.

அடுத்ததாக, ஜோஹனஸ்பெர்கிலிருந்து பிரிட் டோரியா செல்வதற்கு முன் ரயில் விதிமுறைகளைப் படித்துவிட்டுத்தான் காந்தி பயணச் சீட்டு எடுக்க வந்திருந்தார். வெள்ளையர் அல்லாதவர்களுக்கு முதல் வகுப்பு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்படும் எந்த விதிமுறையும் இல்லை என்பதைக் கண்டறிந்தார். ஆகவே, என்னதான் ஆகிறது என்று பார்ப்போம் என்று முதல் வகுப்பு பயணச்சீட்டு வேண்டுமென்று முன்கூட்டியே ஸ்டேஷன் மாஸ்டருக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டுத்தான் காந்தி நிலையத்துக்கு வந்தார்.

அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் ஆங்கிலேயர் அல்ல; ஹாலந்துக்காரர் என்பதால், காந்தியின் நிலையைப் புரிந்துகொண்டு அவருக்கு டிக்கெட் கொடுத்தார். ஆனாலும், வழியில் ஆங்கிலேய அதிகாரி யாரும் அவரை முதல் வகுப்பிலிருந்து வெளியேறும்படி சொன்னால் வெளியேறிவிட வேண்டும் என்றும், தன்னை இந்த விவகாரத்தில் மாட்டிவிடக் கூடாதென்றும் கேட்டுக்கொண்டார். முதல் வகுப்பில் காந்தி போய் உட்கார்ந்துகொண்டார். எதிர்பார்த்தபடியே ரயில்வே காவலாளி ஒருவர் வந்து காந்தியை வெளியேறும்படி கேட்க, கூட வந்த ஆங்கிலேயர் ஒருவர், “அவருடன் உட்கார்ந்துவருவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார். “ஒரு கூலியுடன் பிரயாணம் செய்ய நீங்கள் விரும்பினால் எனக்கு என்ன கவலை?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

டர்பனிலிருந்து செல்லும் ரயிலில் பீட்டர்மாரீட்ஸ்பெர்கில் இறக்கிவிடப்பட்டு, அங்கிருந்து கோச் வண்டியில் ஸ்டாண்டர்ட்டன், அங்கிருந்து இன்னொரு வண்டியில் ஜோஹனஸ்பெர்க், அங்கிருந்து ரயிலில் பிரிடோரியா என்று நீண்ட பயணத்தின் முடிவில் ஒருவழியாக பிரிட்டோரியாவுக்கு காந்தி வந்து இறங்குகிறார்.

பிரிட்டோரியாவில் தங்குவதற்கு இடம் தேடி அலைந்த காந்தி சென்றடைந்த விடுதியின் உரிமையாளர் தென்னாப்பிரிக்காவில் காந்தி சந்தித்த நல்ல ஆன்மாக்களில் ஒருவர் என்று சொல்லலாம். காந்திக்கு இடம்கொடுப்பதைப் பற்றிப் பிரச்சினை இல்லை என்றாலும், உணவை மட்டும் தன்னறையிலேயே காந்தி சாப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றாலும் அவரது மனசாட்சி அவரை விடவில்லை. மறுபடியும் திரும்பி வருகிறார்.

“உங்கள் அறையிலேயே நீங்கள் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும் என்று உங்களிடம் சொன்னது எனக்கே வெட்கமாக இருந்தது. உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னேன். சாப்பாட்டு அறைக்கே நீங்களும் வந்து சாப்பிடுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபமும் இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். ஆகையால், தயவுசெய்து சாப்பாட்டு அறைக்கே வாருங்கள். உங்களுக்கு இஷ்டம் இருக்கும் வரை நீங்கள் இங்கேயே தங்கலாம்” என்று காந்தியிடம் கூறுகிறார்.

ஒரு தரப்புக்கு எதிரான போராட்டத்தில் அந்தத் தரப்பினரிடையே இருக்கும் நல்லிதயங்களை முதலில் வெற்றி காண வேண்டும், அந்த வெற்றியைத் தன்னுடைய போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும்படி ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை தென்னாப்பிரிக்காவின் வலி மிகுந்த அந்த ஆரம்ப நாட்களில் காந்திக்கு ஜான்ஸ்ட்டன் போன்ற ஒருசிலரால் கிடைத்திருக்கலாம் என்று நாம் நம்பலாம். எதிர்த் தரப்பை முற்றிலுமாக எதிரித் தரப்பாக்கிக்கொள்ளும் உலக வழக்குக்கு மாறாக காந்தி கண்டெடுத்த பாதையின் ஆரம்பச் சுவடுகள் இவை. அது மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி செல்வதற்கு முன்பு 1885-ல் அவர் இருந்த ட்ரான்ஸ்வால் பகுதியில் கடுமையான ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது அந்தச் சட்டத்தின் ஒரு பகுதி, பொது நடைபாதைகளில் இந்தியர்கள் நடக்கக் கூடாது என்பதும் இரவு 9 மணிக்கு மேல் பெர்மிட் இல்லாமல் இந்தியர்கள் வெளியில் வரக் கூடாது என்பதும். அராபியர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

காந்தி தனது ஆங்கிலேய நண்பர் கோட்ஸுடன் அப்போது இரவு நேரங்களில் நடையுலாவிவிட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் திரும்பி வருவார். தன்னிடம் வேலை பார்த்த ஆப்பிரிக்கர்களுக்கு கோட்ஸ் அவ்வப்போது பெர்மிட் வழங்குவது வழக்கம். பெர்மிட் இல்லாததால் காந்தியைக் காவலர்கள் கைதுசெய்துவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார்.

அவரால் காந்திக்கு பெர்மிட் கொடுத்திருக்க முடியும்; அப்படிச் செய்தால் காந்தியைத் தனது வேலையாளாகக் கருதுகிறார் என்பதுடன், அது பித்தலாட்டமாகவும் இருக்கும் என்று அவர் தயங்கிக்கொண்டிருந்தார். எனினும், தென்னாப்பிரிக்க அதிபர் க்ரூகரின் வீடு இருக்கும் பகுதிவரை அஞ்சாமல் இருவரும் நடையுலாவிவிட்டு வருவது வழக்கம். அங்கே ரோந்துப் பணியில் இருக்கும் காவலர்கள் காந்தியைக் கண்டுகொள்வதில்லை என்பதால், அச்சமின்றி அவர்கள் நடையுலாவிவிட்டு வருவார்கள்.

ஆனால், ஒருமுறை ரோந்துக் காவலர் ஒருவர் முன்னறிவிப்பு ஏதுமின்றி காந்தியை நடைபாதை யிலிருந்து சாலையில் தள்ளிவிட்டு உதைக்க ஆரம்பித்தார். காந்தியைத் தூக்கிவிட்ட கோட்ஸ், “காந்தி, நான் எல்லாவற்றையும் பார்த்தேன். ஆகையால், அந்தக் காவலருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் நான் உங்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்வேன்” என்றார். அதற்கு காந்தி, “பாவம் அந்தக் காவலருக்கு என்ன தெரியும்… என்னை நடத்தியதுபோல்தானே கறுப்பினத்தவர்களையும் அந்தக் காவலர் நடத்துவார். எனது சொந்தப் பாதிப்புக்கு நீதிமன்றம் செல்வதில்லை என்பதை விதிமுறையாக நான் கடைப்பிடித்துவருவதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம்” என்றார் காந்தி.

ஒரு இந்தியரான தன் வலியைக் கறுப்பினத் தவர்களின் வலியுடன் வைத்துப்பார்க்க முடிந்ததால்தான் பிற்காலத்தில் காந்தி தன்னைத் தாழ்த்தப்பட்டவர்களுடன் இனம்காண முடிந்தது. தென்னாப்பிரிக்கக் களம் காந்திக்கு மிகவும் அத்தியாவசியமான களமாகவே அமைந்தது!

(பேசுவோம்)

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x