Published : 16 Nov 2018 09:15 AM
Last Updated : 16 Nov 2018 09:15 AM
சென்னையின் வழக்கமான மாலை நேரப் போக்குவரத்து நெரிசல். மோட்டார் சைக்கிளில் ஒரு இளைஞர் இறக்கைக் கட்டிப் பறந்தார். பின்னால் அமர்ந்திருந்த பெண் அவருடைய நயன்தாராவாக இருக்க வேண்டும். இளைஞரின் வண்டியை ஓட்டும் வேகத்தில் அது பிரதிபலித்தது. வாகனங்களுக்கு நடுவே புகுந்து புகுந்து போகிறார். பின்னால் அமர்ந்திருந்தவரிடம் மகிழ்ச்சியுடன் கூடிய கிலியையும் பார்க்க முடிந்தது.
இப்படி வண்டி ஓட்டுவதற்கெல்லாம் நிச்சயம் ஒரு திறமை வேண்டும். மாலை ஆறு மணிக்குப் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் கண்களை மூடித் திறப்பதற்குள் அந்த இளைஞர் கடந்த தூரம் மிக அதிகம்.
இந்தத் திறமையை அவர் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று தோன்றியது. கைப்பந்திலோ கால்பந்திலோ அல்லது ஏதோ ஒரு விளையாட்டில் அந்த வேகத்தைப் பயன்படுத்தலாம். அதே வேகத்துடன் இசையைக் கற்றுக்கொள்ளலாம். இரண்டு மூன்று மொழிகளைக்கூட தெரிந்துவைத்திருக்கலாம்.
என்னுடைய கருத்து தவறாகவும்கூட இருக்கலாம். அவருக்கு நான் சொன்ன எல்லா திறமைகளும் இருக்கலாம். ஆனால் இந்த வேகம் எல்லாவற்றையும் நொடியில் தொலைத்துவிடும்.
‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ என்று அழைக்கப்படும் டி.இ.லாரன்ஸுக்குப் பல மொழிகள் தெரியும். பெரிய போர் வீரர். தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர். உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களில் பயின்றவர். ஆனால், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவதில் அவருக்கு அலாதிப் பிரியம். அந்த வேகமே அவருக்கு முடிவாய் அமைந்தது. ஒருநாள், அவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது எதிரே திடீரென இரு சிறுவர்கள் வந்துவிடவே அவரால் வண்டியைக் கையாள முடியவில்லை. தூக்கி எறியப்பட்டார். அத்துடன் பரிதாபமாக முடிந்தது எல்லா திறமைகளும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT