Published : 23 Nov 2018 10:07 AM
Last Updated : 23 Nov 2018 10:07 AM

கோ.வீரய்யன்: தஞ்சை விவசாயிகளின் உரிமைக் காவலர்!

பெருநிலவுடைமையாளர்களின் கோர முகத்தையும் குரூர மனதையும் உலகறியவைத்த வெண்மணி துயரத்தின் ஐம்பதாம் ஆண்டு இது. அந்நிகழ்வைத் தொடர்ந்து மேலும் தீவிரமடைந்த விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களை முன்னின்று வழிநடத்தியவர் ‘தோழர் ஜி.வீ’ என்று அழைக்கப்பட்ட கோ.வீரய்யன் (1932-2018). ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அவர் கால் படாத கிராமங்களே இல்லை.

1950-களின் தொடக்கத்தில் தனது 17 வயதில் போராட்டக் களத்தில் அடியெடுத்து வைத்தவர் வீரய்யன். பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு கட்சிப் பணிகளில் அவர் அடியெடுத்து வைத்த சமயம், கட்சி தடைசெய்யப்பட்டிருந்தது. கட்சித் தலைவர்கள் காவல் துறையால் தேடித் தேடிக் கொல்லப்பட்டார்கள். களப்பால் குப்பு சிறைச்சாலையிலேயே விஷம் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். வாட்டாக்குடி இரணியனும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்கள். பி.சீனிவாச ராவ், மணலி கந்தசாமி என்று முன்னோடித் தலைவர்களின் தலைகளுக்கெல்லாம் விலை அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படியொரு அபாயகரமான சூழலில்தான் விவசாய சங்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார் வீரய்யன். அந்த அபாயச் சூழல் அவரது போராட்டப் பயணம் முழுவதும் பின்தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த முதல் உள்ளாட்சித் தேர்தலில் தனது ஊரான நன்னிலம் வட்டம், சித்தாடியில் ஊராட்சித் தலைவராக இருந்த உள்ளூர்ப் பண்ணையாருக்கு எதிராக விவசாயப் பிரதிநிதிகளைப் போட்டியிட வைத்து வெற்றியும் பெறவைத்தார் வீரய்யன். அப்போது, அன்றைய வாக்குரிமை வயதான 21-ஐக்கூட அவர் எட்டவில்லை. அவரது குடும்பம் கடனுக்காகப் பண்ணையாரிடம் நகைகளை அடகு வைத்திருந்த நிலையில், பண்ணையாருக்கு எதிரான அவரது போராட்டத்தின் காரணமாக அவற்றை மீட்க முடியாமல் போனது. வாங்காத கடனுக்காக நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் குடும்பத்தை மட்டுமின்றி, அவருக்கு ஆதரவாக இருந்த கிராம மக்கள் அனைவருக்கும் குத்தகை சாகுபடிக்கு வாய்ப்பில்லாமல் ஆக்கியது. பக்கத்து ஊர்களில் விவசாயக் கூலியாக வேலைபார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த நிலையிலும் வட்டிக்குக் கடன் வாங்கி கட்சி நடத்தும் மார்க்ஸிய வகுப்புகளில் கலந்துகொண்டவர் வீரய்யன்.

சட்டமாக அறிவிக்கப்பட்டு ஏட்டிலேயே இருந்த தமிழ்நாடு பண்ணையாள் சாகுபடியாளர் பாதுகாப்புச் சட்டத்தை ஓர் ஆயுதமாக அவர் கையிலெடுத்தார். பண்ணையார்களின் அச்சுறுத்தல்கள் ஒருபக்கம், போராட்டத்தைக் கைவிட்டால் பயன்களைப் பெறலாம் என்ற ஆசை வார்த்தைகள் ஒருபக்கம். ஆசை வார்த்தைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். 1961-ல் நில உச்சவரம்புச் சட்ட மசோதாவில் திருத்தங்கள் செய்யக் கோரி நடந்த போராட்டத்தின்போது அவர் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் தனிமைச் சிறை, ஓய்வில்லாத உடல் உழைப்பு என்று பல கொடுமைகளை அனுபவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியவர்கள் மார்க்ஸிஸ்ட் பிரிவைத் தொடங்கியபோது, அதன் தஞ்சை முகமாக இருந்தவர் வீரய்யன். கட்சிப் பணிகளுக்குத் தகுதியானவர்களைக் கண்டெடுப்பதும், அவர்களைப் பட்டை தீட்டிக் களத்தில் பணியாற்றச் செய்வதும் என அவரது பொது வாழ்க்கை தொடர்ந்தது. மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் விவசாய சங்கப் பொறுப்புகளை வகித்த அவர், தேசியத் தலைவர்களில் ஒருவரானார். கட்சித் தோழர்களிடம் கொள்கைப் பிணைப்பைத் தாண்டி தனிப்பட்ட முறையிலும் அக்கறை எடுத்துக்கொண்டவர் வீரய்யன். அவருடன் கைகோத்துக் களப்பணியில் ஈடுபட்ட பல தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதே அவர் எதிர்கொண்டிருந்த ஆபத்தான சூழலை எடுத்துச்சொல்லும்.

1968 ஜூனில் திருவாரூரில் நடந்த சாகுபடிக் கூலிக்கான முத்தரப்பு மாநாட்டில் விவசாயிகளின் பிரதிநிதியாகப் பேசியவர் வீரய்யன். 1968 டிசம்பரில் நடந்த வெண்மணி அதிர்ச்சியிலிருந்து மீள மாட்டார்கள் என்று பண்ணையார்கள் இறுமாந்திருந்த நிலையில், கூலியை உயர்த்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று அறைகூவல் விடுத்து, அடுத்த ஒரு மாதத்துக்குள் அதைச் சாதித்தும் காட்டியவர் அவர். வெண்மணி சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசு நியமித்த கணபதியா பிள்ளை ஆணையத்தில் விவசாயத் தொழிலாளர்களின் சார்பில் வாதங்களை எடுத்துரைத்து கீழத்தஞ்சையில் மாற்றத்துக்கு வித்திட்டவர் அவர்.

கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, வெடிகுண்டு வழக்கு என்று எல்லாவிதமான கொடுங்குற்ற வழக்குகளும் வீரய்யன் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. அவர் அதற்கெல்லாம் அஞ்சி நடுங்கிடவில்லை. அறுபதாண்டு காலப் பொதுவாழ்வில் ஏறக்குறைய இரண்டரை ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். நெருக்கடி காலத்தில் ஓராண்டு காலம் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றியிருக்கிறார். நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம், கம்யூனிஸ்ட் கட்சி தனது தொண்டர்களையே சோதித்துப் பார்க்கும் என்பதற்கான உதாரணங்களும் அவர் வாழ்வில் நிறையவே உண்டு. கட்சிக் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும் என்பதற்காகத் தனக்கு உரிமையான குத்தகை சாகுபடி நிலத்தை விட்டுக்கொடுத்தவர், கட்சிக் கடனுக்காகத் தனது தாத்தா அரும்பாடுபட்டு வளர்த்த புளிய மரங்களை விற்றுக் கடனை அடைத்தவர் என்ற பெருமைகளும் அவருக்கு உண்டு. 2005-ல் அவரது உடல்நிலை சரியில்லாததால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவித்துக்கொண்டார்.

சாதனையாளரின் சுயசரிதைகள் வாழ்க்கைப் பாடமாக இருக்கலாம், மக்கள் தலைவர்களின் சுயசரிதைகளே வரலாறாகவும் மாறி நிற்கிறது. வீரய்யன் எழுதிய ‘செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்’, தஞ்சை மாவட்டத்தின் 20-ம் நூற்றாண்டு வரலாறு. அந்தச் சுயசரிதையையும்கூட கட்சித் தோழர்களின் வற்புறுத்தலின்பேரில்தான் எழுதினார். வரலாறு என்பது ஆள்பவர்களின் வரலாறு அல்ல, மக்களின் வரலாறே என்கிறது நவீன ஆய்வுக் கண்ணோட்டம். வீரய்யன் எழுதிய ‘தமிழ்நாடு விவசாயிகள் இயக்க வீர வரலாறு’ நூலே தஞ்சையின் மக்கள் வரலாறு. ஆயிரம் ஆண்டு காலப் பெருநிலவுடைமை எத்தனை உயிர்களைப் பலிவாங்கி முடிவுக்கு வந்திருக்கிறது என்பதற்கான ஆவணம் அது!

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x