Published : 14 Nov 2018 09:06 AM
Last Updated : 14 Nov 2018 09:06 AM
“என் மதத்திற்காக நான் உயிரையும் கொடுப்பேன். ஆனால், அது எனது தனிப்பட்ட விவகாரம். அரசாங்கத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அரசாங்கம் மதச்சார்பற்ற முறையில் உங்களது நலன்களைப் பற்றி அக்கறை செலுத்தும். ஆனால், எனது மதத்தின் மீதோ, உங்களது மதத்தின் மீதோ அரசாங்கம் அக்கறை காட்டாது. இது ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட விசாரம்.” - காந்தி, 1947.
“தேசியவாதமும் வகுப்புவாதமும் சேர்ந்து வாழ முடியாது. நீங்கள் இந்து, சீக்கியம் அல்லது இஸ்லாமுக்காகப் பேசத் தொடங்கியவுடனேயே, இந்தியாவுக்காகப் பேசுவதை நிறுத்திவிடுகிறீர்கள். ஒவ்வொரு இந்தியனும் தன்னைத்தானே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளட்டும். நான் இந்தியாவை ஒரு நாடாகக் காக்க வேண்டுமா அல்லது இருபது, இருபத்தைந்து நாடுகளாகத் துண்டுகளாகச் சிதைக்க வேண்டுமா?” - நேரு, 1961.
காந்தியும் சரி, அவர் வழிவந்த நேருவும் சரி; இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக மதச்சார்பின்மையையே கருதினர். நாடு சுதந்திரம் அடைந்த கையோடு காந்தி மறைந்துவிட்ட நிலையில், புதிய நாட்டின் கட்டமைப்பில், மக்களுடைய மதிப்பீடுகளை வடிவமைப்பதில் மதச்சார்பின்மையைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திவந்தார் நேரு.
இன்றைக்கெல்லாம் பலரும் மதச்சார்பின்மையை நேரு வெறுமனே ஒரு அற விழுமியமாகக் கருதிப் பேசியதுபோலக் கருதுகின்றனர். அப்படியல்ல. இந்தியாவின் மிகப் பெரிய ஆபத்து என்று வலதுசாரிகளையும், வகுப்புவாதத்தையும் ஏன் நேரு குறிப்பிட்டார் என்றால், பிரிட்டிஷாரால் இந்தியா அடிமைப்படுத்தப்பட எது முக்கியமான காரணமாக இருந்ததோ - அந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியில் - வகுப்புவாதமே பிரதான மையமாக இருந்தது என்பதை வரலாற்றினூடாக நேரு கற்றிருந்தார். விளைவாகவே, 1857 மக்கள் எழுச்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து போராடியதைக் கண்ட பிரிட்டிஷார், அதற்குப் பின் மத அடிப்படையில் மக்களைப் பிரிப்பதை மேலும் எப்படி வலுப்படுத்தினர் என்பதைப் பல கூட்டங்களிலும் அவர் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார்.
வாழ்க்கை கற்பித்த பாடம்: அரசியலில் தீவிரப் பங்கு கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுடனும் சமூகத்திலுள்ள பலதரப்பட்ட மக்களுடனும், பழகவும் பேசவும் நேருவுக்குச் சின்ன வயதிலிருந்தே வாய்ப்பு இருந்தது. நேருவுக்கு வீட்டில் கல்வி கற்பித்தவர்களில் ஒருவர் பிரம்ம ஞானக் கொள்கையில் பிடிப்பாக இருந்தவர். நேருவின் தந்தையின் செயலாளர்களில் ஒருவர் முஸ்லிம். பிரிட்டனில் நேரு படித்தபோது ஹாரோவில் அவருடைய விடுதி நண்பர்களாக யூதர்கள் இருந்தார்கள்.
ஐரோப்பிய வரலாறு, மெய்ஞ்ஞானம் ஆகியன பற்றியும், அரசாங்கமும் சமயமும் எப்படித் தனித்தனியாகப் பிரிந்து செயல்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக அறிந்திருந்தார் நேரு. இந்தப் பின்னணியில்தான் இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான அங்கமாக காந்தி வலியுறுத்திய மதச்சார்பின்மையை வளர்த்தெடுத்தார். மதச்சார்பின்மை என்பது இங்கே அடிப்படையில் எல்லாக் குரல்களுக்கும் சமமான இடத்தைக் கொடுப்பதுதான். சொல்லப்போனால், இந்து மதத்தின் எல்லையை அரசியல் தளத்திலும் விரிவாக்கிய முக்கியஸ்தர்களில் ஒருவர் என்றும் நேருவைச் சொல்லலாம்.
எல்லோருக்குமான இந்தியா… யாரெல்லாம் பொறுப்பு? - நேருவின் பேச்சுகள் காந்தியின் இந்தியக் கனவுக்கான கட்டுமானங்கள் என்று நாம் கருத முடியும். நவீன இந்தியாவை உருவாக்க மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய இரண்டு தத்துவங்களும் நெருக்கமான முறையில் இணைக்கப்படுகின்றன.
இந்த இணைப்பு எப்படி நடக்கும்? நேரு சொல்கிறார், “நாம் ஒரு சுதந்திரமான மதச்சார்பற்ற நாட்டைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். இங்கே எல்லா மதங்களும் முழு உரிமையுடனும் சமமான மரியாதையுடனும் நடத்தப்படும். எல்லோருக்கும் சமமான உரிமையும் சமமான வாய்ப்புகளும் உண்டு.”
எல்லோருக்கும் சமமான இந்தியா எனும் மாபெரும் லட்சியத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால், மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். நேரு சொல்கிறார், “இந்த லட்சியங்களை அடைவது எப்படி? இந்தக் கேள்விக்கான பதில், அரசாங்கத்திடம் மட்டுமே இல்லை, மக்களிடமே இருக்கிறது.
அவர்கள்தான், தேசத்தைப் பலவீனப்படுத்தக் கூடிய போக்குகளான வகுப்புவாதத்தை, பிரிவினைவாதத்தை, மதவெறியை, பிரதேசக் கண்ணோட்டத்தை, வர்க்க ஆணவத்தை அடியோடு இல்லாமல் செய்ய ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.”
“நம்முடைய அரசாங்கம் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம். எல்லாக் குழுவினருக்கும் சமவாய்ப்பை அளிக்கும். தேசத்தின் எல்லாப் பகுதிகளும் எல்லாப் பிரதேசங்களும் சமவாய்ப்பு பெறும். அரசாங்கம் எந்த வகையிலும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாது அல்லது சேராது அல்லது புறக்கணிக்காது.”
நேருவின் கொள்கையை அசோகரின் நீட்சியாகவும் இங்கே பார்க்கலாம் என்று கருதுகிறேன். “உன்னுடைய மதத்திற்குக் கொடுக்கும் அதே மரியாதையை, உன் பக்கத்து வீட்டுக்காரனின் மதத்திற்கும் கொடு!” என்றவர் அசோகர்.
பெரும்பான்மையினருக்கான கூடுதல் பொறுப்பு: பிற்போக்குத்தனம் என்று வரும்போது எல்லா மதங்களையுமே நேரு சாடினார். அதிலும் பாகுபாடு ஏதும் அவர் காட்டவில்லை. ஆனால், மதப் பெரும்பான்மையினராக இருப்போர் கூடுதல் பொறுப்பேற்பது முக்கியம் என்று கருதினார். 1953 நவம்பரில் எழுதிய கடிதம் ஒன்றில் நேரு குறிப்பிடுகிறார், ‘இந்தியாவின் எதிர்காலம் இந்துக்களுடைய அரசியல் பார்வையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய இந்துக்களின் பார்வை தீவிரமான முறையில் மாறவில்லையெனில், நாட்டின் எதிர்காலம் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். முஸ்லிம்களுடைய மனப்பான்மை இன்னும் மோசமானதாக இருப்பதை நான் உணர்கிறேன். அதேசமயம், அது இந்தியாவின் எதிர்காலத்துக்குப் பெரிய பாதிப்பைக் கொண்டுவராது.’
தேச ஒற்றுமை என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்றே நினைத்தார் நேரு. 1963-ல் அன்றைய பஞ்சிம் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் நேரு பேசுகிறார்: “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நம்முடைய கொள்கையாக என்றும் இருக்கிறது. இந்தியாவின் வளமான பல கலாச்சாரங்களுக்கிடையில் நம்முடைய ஒற்றுமையை இதுதான் கட்டிக்காக்கிறது.”
உலகம் முழுவதும் ஒரே குடும்பம் எனும் பார்வை நேருவுக்கு இருந்தது. “உலகம் முழுவதும் ஒரே குடும்பம் (Vasudhalva Kutumpakam) என்னும் கருத்தாக்கத்தின் மூலம் இந்தக் கொள்கை வளம்பெறுகிறது. நம்ப முடியாத அளவுக்கு வேற்றுமைகள் கொண்ட இந்தியச் சமுதாயத்தின் தன்மையைக் கவனத்தில் கொண்டு, அரசியல் சட்ட வரைவாளர்கள் மதச்சார்பற்ற கொள்கையைத் தீர்மானமாக ஆதரித்தார்கள். நம்முடைய நாடு மிகப் பெரியது; மிக அதிகமான வேற்றுமைகள் கொண்டது.”
- ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு, ‘ஜவாஹர்லால் நேரு: அன் இல்லஸ்ட்ரேட்டட் பயோகிராபி’ நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: desiyamurasu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT