Published : 29 Nov 2018 09:34 AM
Last Updated : 29 Nov 2018 09:34 AM
பத்து நாட்களுக்கு முன்புகூட காவிரிப் படுகை இயல்பு நிலையில் இருந்தது. ஆனால், அதெல்லாம் பல யுகங்களுக்கு முன்னால் என்பதுபோல் இப்போது இருக்கிறது. இந்நாட்களில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதென்பது ஒரு யுகம்போலத்தான்.
கான்கிரீட் வீடுகள் தவிர, ஓட்டு வீடுகளோ, கூரை வீடுகளோ, ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளோ எல்லாமே காற்றில் பறந்துவிட்ட நிலையில் வீடுகளில் தங்க இயலாத சூழலில் மக்கள் சமூக நலக் கூடங்களிலும், பள்ளிக்கூடங் களிலும் தங்கியிருக்கின்றனர். மின்சாரம் இல்லை. தகவல் தொடர்பு சரியாக இல்லை. நாட்டு நடப்புகள் தெரியவில்லை. முதல்வர் எடப்பாடி ஹெலிகாப்டரில் பறந்து பாதியில் அப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்ற கதை இங்கே முகாம்களில் இருக்கும் பலருக்குத் தெரியவில்லை. செல்போனோடு இருக்கும் பையன்களில் சிலர் சிக்னல் கிடைக்கும் இடங்களைக் கண்டறிந்து வாட்ஸப் பார்த்து தகவல் சொல்கின்றனர். முகாம்களில் இப்போது தரப்பட்டுள்ள ஜெனரேட்டர் மூலம் அவ்வப்போது செல்போன் பேட்டரியை உயிரூட்டிக்கொள்கிறார்கள்.
மாற்று உடைகள்கூட இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் கழித்த முதல் ஐந்தாறு நாட்கள் அவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளியிருக்கின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொட்டும் மழையில் ஒதுங்க இடமின்றி குளிரில் நடுங்கியபடி, போர்த்திக்கொள்ள போர்வையுமின்றி நனைந்தால் மாற்றிக்கொள்ள உடையுமின்றி, நனைந்து காய்ந்து நனைந்து காய்ந்து என ஒரு வாரத்தைக் கடத்தியிருக்கின்றனர். அதன் பின்னரே அவர்களுக்கு நிவாரணப் பொருட்களில் மாற்று உடைகள் வந்தன. அவைகூட எல்லாக் கிராமங்களுக்கும் இந்த நொடி வரை சென்று சேரவில்லை. பெண்களுக்கு இந்த முகாம்கள் கூடுதல் சித்திரவதை. சரியான கழிப்பறை வசதி இல்லாமல், குளிக்கவும் முடியாமல் தவிக்கின்றனர். ஆண்கள் அருகில் உள்ள நீர்நிலைகளைத் தேடிச்செல்கின்றனர். விடிவதற்குள் காலைக்கடன்களை முடிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் அருகில் உள்ள திறந்தவெளிக்கு மலங்கழிக்கச் செல்லும் பெண்கள், மின்சாரம் இல்லாத கும்மிருட்டில் செல்கையில் பூச்சிகள் கடித்து அவதியுறுகின்றனர். பாம்புகள் நிறைந்த பகுதிகளிலும் இதுவே நிலைமை. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் மலம்கூட கழிக்க முடியும் என்பது கொடுமையல்லவா? இருள் என்பது குறைந்த ஒளி என்பதைப் பொய்யாக்கி இருள் என்பது அடர் இருள் என நிரூபிக்கின்றன இவர்களின் பாடுகள்.
வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நிவாரணப் பொருட்கள் தரச்சென்றபோது, ஓர் இளம்பெண் மெல்ல என் காதருகே வந்து ‘நாப்கின் இருக்கா?’ என்றாள். அவள் அதை தயங்கித் தயங்கிக் கேட்டவிதம் என்னைத் துயரத்தில் ஆழ்த்தியது. என் கைப்பையில் இருந்த ஒரு நாப்கினை எடுத்து அவளிடம் தந்தேன். அவள் ‘எனக்கு இப்போது வேண்டாம். நான் எல்லோருக்காகவும் கேட்டேன்’ என்றாள். கலங்கிப்போனேன்.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல; தினமும் நடக்கும் சம்பவங்களைப் பட்டியல் போட்டால் எழுதி மாளாது. தலைஞாயிறு லிங்கத்தடி தெருவில் அரசு தந்த புழுத்த அரிசியைப் புகைப்படத்துடன் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தேன். முதலில் அந்தப் பகுதிப் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். பின்னர், அந்தப் பகுதி மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்றெண்ணி நீக்கிவிட்டேன். அந்தப் பகிர்வு வைரலானது. நான்கு நாட்கள் கழித்து மீண்டும் அங்கே சென்றபோது அங்கிருந்த இளைஞன் ஒருவன் கோபித்துக்கொண்டான். “எல்லாம் எழுதினீங்களே, எங்க ஊர் பெயரை எழுதினீங்களா?”. காரணம் சொன்னபோது, “அப்படியாச்சும் நாலு பேர் வந்து ஏதாச்சும் எங்களுக்கு உதவுவாங்க இல்லையா? இப்போ பாருங்க நாதியத்துக் கெடக்கோம்” என்றான். இந்த ‘நாதியத்துக் கெடக்கோம்’ என்கிற வார்த்தைகள் பலரிடமிருந்து திரும்பத் திரும்ப வெளிப்பட்டன.
பிள்ளைகள் சாலையோரங்களில் நின்று வாகனங்களிடம் கைநீட்டுவதைக் காணச் சகியவில்லை. நீட்டிய கரங்களை முத்தமிட்டு ‘நீ சிக்கிரம் வீடு திரும்புவாய். முன்புபோல் இருப்பாய்’ என்று சொல்ல ஆசைப்பட்டாலும் அதைச் சொல்லவும் இயலாமல் கண்ணீர் திரைகட்டிவிடுகிறது.
எப்போது இந்தக் கிராமங்களுக்கு மின்சாரம் வந்து எப்போது இவர்கள் வீடுகளுக்குத் திரும்பி எப்போது இந்தப் பள்ளிக்கட்டிடங்கள் மீண்டும் கல்விக்கூடங்களாகும்? யாருக்கும் தெரியவில்லை. சிதைந்த வீடுகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துவிட்டால், வீடுகளை சீர்படுத்தும் பணியை மக்கள் தொடங்கிவிடுவார்கள். கடன் வாங்கியும் சீரமைக்கலாம். ஆனால், அறிவிப்பு வருவதற்கு முன்பே சீர் செய்துவிட்டால், நிவாரணம் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமும் இருக்கிறது. அவர்கள் முகாம்களில் தங்குவதும், தங்கள் வீட்டுக்கு வந்து வந்து பார்ப்பதுமாய் இருக்கிறார்கள். இந்த அரசு செய்ய வேண்டியதை விரைந்து செய்து முடித்தால் பலருக்கு விடுதலை கிடைக்கும்.
ஒரு ஆக்கபூர்வமான விஷயம், இந்தப் புயல் எல்லா ஊர்களிலும் உள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்திருக்கிறது. அதுவரை தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவர்களைத் தன் ஊருக்காக உழைக்கப் பணித்திருக்கிறது கஜா புயல். ஓயாது வேலை செய்கிறார்கள். எப்படியா வது இத்துயரில் ஒரு துளியையாவது துடைக்க வேண்டும் என்கிற அவர்களின் ஆற்றாமையால் தான் பலருக்கு உணவே கிடைக்கிறது.
‘புயலோடு போய்ச் சேர்ந்திருக்கலாம்’ என்கிற குரல்களை இதுவரை நிறையக் கேட்டாயிற்று. பசியோ பட்டினியோ கூழோ கஞ்சியோ இருக்க இடமென்று ஒன்று இருந்துவிட்டால் எப்படியோ இருந்துவிடலாம். ஆனால், உறங்கவும் இடமின்றி, அமரவும் இடமின்றி கொசுக்கடியில் இந்தக் கடுமையான மழைக்கு நடுவில் கோழிக்குஞ்சுகள்போல குளிரில் நடுங்கும் மக்களைக் காக்க வேண்டிய அரசோ அவர்களை அகதிகளாக்கி சொந்த ஊரிலேயே அலையவிட்டிருக்கிறது!
- கவின்மலர், பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: jkavinmalar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT