Published : 09 Nov 2018 09:55 AM
Last Updated : 09 Nov 2018 09:55 AM

பணமதிப்பு நீக்கம்: மீண்டெழுமா அமைப்புசாரா தொழில் துறை?

ஆகஸ்ட் 30, 2017-ல் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த ஆண்டறிக்கையின்படி, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 தாள்களின் மொத்த மதிப்பு ரூ.15,44,000 கோடி. அவற்றில் திரும்பிவந்த தாள்களின் மதிப்பு ரூ.15,28,000 கோடி. வங்கிகளுக்குத் திரும்பிவராத ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, 1%தான். திரும்பப் பெறப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ.41 கோடி. இது, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 0.0027% மட்டுமே. ஆக, பணமதிப்பு நீக்கம் படுதோல்வி அடைந்ததை இந்திய ரிசர்வ் வங்கி அளித்த ஆண்டறிக்கை முன்னரே தெளிவுபடுத்திவிட்டது.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.4 லட்சம் கோடி வரை பணத்தாள்கள் திரும்பிவராது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி வரும்பட்சத்தில் அந்த மதிப்புக்குரிய பணத்தை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளிக்கும் திட்டமும் இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. கடைசியில் ரிசர்வ் வங்கி தனது கையிருப்பிலிருந்து பங்கு ஆதாயங்களை வழங்க வேண்டியதாகிவிட்டது. ஒருவகையில், பிரதமர் அலுவலகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்குமான உறவில் விரிசல் விழுவதற்கு முழுமுதல் காரணமாகப் பணமதிப்பு நீக்கம் அமைந்துவிட்டது.

 பாதிப்புகள் என்னென்ன?

 பணமதிப்பு நீக்கத்தால் சாதாரண மக்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து சகல தொழில் துறை நடவடிக்கைகளும் நிலைகுலைந்து போயின.  படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது அமைப்புசாரா தொழில் துறைதான். வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், மொத்தமாக சொந்த மாநிலத்துக்குத் திரும்பினார்கள். பிஹாரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடிச் சென்றவர்களில் 95% பேர் திரும்பிவந்திருப்பதாக 2016 டிசம்பரில் அம்மாநில நிதியமைச்சர் தெரிவித்தார்.

அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களும் தன்னார்வ நிறுவனங்களும் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து பணமதிப்பு நீக்கத்தால் அமைப்புசாரா தொழில்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

2016 டிசம்பரில் அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி, பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட முதல் 50 நாட்களில் அமைப்புசாரா தொழில்துறையில் 40-45 வயதினரிடையே 40% பேரும், 22-30 வயதினரிடையே 32% பேரும் வேலைவாய்ப்பை இழந்தனர். மொத்தத்தில் 60% பேர் வேலைவாய்ப்பை இழந்தனர். சிறுவணிகர்களும் சிறு தொழிலகங்களை நடத்தியவர்களும் தங்களது வருமானத்தில் 47% சரிவைச் சந்தித்தனர். 300-700 தொழிலாளர்கள் பணிபுரியும் நடுத்தரத் தொழிலகங்களில் வேலையிழப்பு 3%, வருமானக் குறைவு 7%. 2000-3000 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிலகங்களில் வேலையிழப்பு 2%, வருமானக் குறைவு 3%.

மும்பை, புணே மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பணமதிப்பு நீக்கம் 69% வணிகத்தைப் பாதித்ததாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2017 ஜனவரியில் வெளியிட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவித்தன. 55% கட்டுமானத் தொழிலாளர்களும் 71% சாலையோர வணிகர்களும் 50%க்கும் மேலாகத் தங்களது வேலைவாய்ப்பும் வருமானமும் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வில் தெரிவித்தனர்.

 2017 ஜனவரியில் ‘இண்டியா டெவலப்மெண்ட் பவுண்டேஷன்’ ஒன்பது மாநிலங்களில் உள்ள 48 மாவட்டங்களில் நடத்திய மாதிரிக் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் சிறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்களில் பணிபுரியும் 74% பேர் பணமதிப்பு நீக்கத்தால் உற்பத்தி நடவடிக்கைகள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டன என்றும் 71% பேர் வேலைவாய்ப்புகள் வீழ்ச்சியடைந்தன என்றும் தெரிவித்தார்கள்.

அமைப்புசாரா தொழில் துறையைப் பற்றிய விவரங்களை அரசு சேகரிப்பதில்லை. தனியார் அமைப்புகளின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட  ஒரு சில மாதிரிக் கணக்கெடுப்புகளின் முடிவுகளே அந்தத் துறை எவ்வளவு மோசமான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளப் போதுமானவை.

 பணத்தாள்களின் புழக்கம் குறைந்ததால் விவசாயத் துறையும் கடும் சிக்கலைச் சந்தித்தது. 2016-17ல் உணவு தானிய உற்பத்தி 8.7% அதிகம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், விலைபோகவில்லை. காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் தேவைகள் குறைந்துபோய் விற்பனையாகாமல் அழுகி வீணாயின. 2017 ஜனவரியில் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் தக்காளியின் விலை 60-85% வரையில் குறைந்தது. விவசாயிகள் சாகுபடிக்காக வாங்கிய கடன்களைக் கட்ட முடியாத நிலைக்கு ஆளானார்கள். வங்கிகள் பணத்தாள்களை மாற்றும் வேலையை மட்டும்தான் செய்துகொண்டிருந்தன. சிறுதொழில்கள் மற்றும் விவசாயத்துக்குத் தேவையான கடனுதவிகள் முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

 மீண்டதா தொழில் துறை?

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அமைப்புசார் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டதை எடுத்துக்காட்டின. வேலைவாய்ப்புகள் குறைந்தன. பணிச்சூழல்களும் மோசமாகின. 2017 மே மாதம் ரிசர்வ் வங்கி 6 பெருநகரங்களில் நடத்திய ஆய்வில் 32.5% பேர் தங்களது பணிபுரியும் சூழல் சுமார் என்றும், 39.2% படுமோசமாக உள்ளதென்றும் தெரிவித்தார்கள். அமைப்புசார் தொழில் துறை பணமதிப்பு நீக்கத்தால் கடும் பின்னடைவைச் சந்தித்தபோதிலும் தட்டுத் தடுமாறி அது எழுந்துநிற்க முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

 மீண்டும் அமைப்புசார் தொழில்துறையின் வளர்ச்சி தற்போது 7-8%ஐ எட்டியிருக்கிறது. எனவே, பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்புகள் தற்காலிகத் துயரம்தான் என்று நியாயப்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன. அமைப்புசாரா தொழில் துறையைக் குறித்த விவரங்களை அரசு சேகரிப்பதில்லை என்பதால், அத்துறையில் தேக்கம் சரியாகிவிட்டது என்று முடிவுகட்டிவிட முடியாது. பணமதிப்பு நீக்கக் காலத்திலும் சரி, அதன் பிறகும் சரி, அமைப்புசாரா தொழில்கள் சந்தித்த வீழ்ச்சியைப் பற்றியும் அது திரும்பி எழுந்துநிற்க இயலாத நிலையைக் குறித்தும் ஒரு கனத்த மௌனமே கவிந்துகிடக்கிறது.

மொத்தத்தில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்த ஒரு திட்டம். இரண்டாண்டுகளுக்குப் பின்பும்  அந்தத் தவறை நியாயப்படுத்தவே மத்திய அரசு முயற்சிக்கிறதே தவிர, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய முன்வரவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x