Last Updated : 15 Nov, 2018 09:07 AM

 

Published : 15 Nov 2018 09:07 AM
Last Updated : 15 Nov 2018 09:07 AM

சைவ உணவாளர் காந்தி

“நீர் என் சொந்தச் சகோதரனாக இருந்தால் மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பியிருப்பேன். இங்குள்ள நிலையை அறியாமல், எழுத்து வாசனையே இல்லாத ஒரு தாயாரிடம் செய்துகொடுத்த  சத்தியத்துக்கு என்ன மதிப்பு உண்டு? மேலும், இந்தப் பிடிவாதத்தினால் இங்கே உமக்கு எந்தவிதப் பயனும் உண்டாகாது என்பதையும் கூறுகிறேன். மாமிசத்தை முன்பு சாப்பிட்டதாகவும், அது உமக்குச்    சுவையாக இருந்தது என்றும் ஒப்புக்கொள்ளுகிறீர்; எங்கே முற்றும் அவசியமில்லையோ அங்கே நீர் அதைச் சாப்பிட்டிருக்கிறீர். அவசியமான இடத்தில் உண்ண மாட்டேன் என்கிறீர்; இது என்ன பரிதாபம்!”

அந்த நண்பர் அக்கறை நிரம்பிய கோபத்துடன் காந்தியின் மீது வார்த்தைகளை வீசியெறிந்தபோது கலங்கிவிட்டார் காந்தி.

தாயிடம் மூன்று சத்தியங்களைச் செய்து கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்கு பாரிஸ்டர் படிப்புக்காக 04.09.1888 அன்று கப்பலேறிய காந்தி 12.06.1891 அன்று இந்தியாவுக்குத் திரும்புவதற்காக மறுபடியும் கப்பலேறும் வரை அந்தச் சத்தியங்களைக் காப்பாற்றுவதற்காகவே பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார். மது அருந்த மாட்டேன் என்ற சத்தியத்தைக் காப்பாற்றுவது காந்திக்கு அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால், மனைவியைத் தவிர வேறு பெண்ணைத் தொட மாட்டேன், புலால் உண்ண மாட்டேன் என்ற சத்தியங்களைக் காப்பாற்றத்தான் அவர் பெரும்பாடு பட்டார்.

பெண்களைப் பொறுத்தவரை தடுக்கிவிழ நேரிட்ட ஒருசில கணங்களிலெல்லாம் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துக்கொண்டதாகத்தான் காந்தியே தன்னுடைய சுயசரிதையில் கூறுகிறார். ஆக, இங்கிலாந்தைப் பொறுத்தவரை அவருடைய சைவ உணவுப் பற்றுதான் அவர் வாழ்க்கையில் முக்கியமான சில மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

இங்கிலாந்து செல்லும் கப்பலிலும் சரி, இங்கிலாந்து சென்ற பிறகும் சரி; சைவ உணவு சரிவரக் கிடைக்காமல் காந்தி திண்டாடினார். வீட்டிலிருந்து எடுத்துச்சென்ற பண்டங்கள், ஊறுகாய் போன்றவற்றை வைத்துக்கொண்டும், ரொட்டி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றை வைத்துக்கொண்டும் கொஞ்சம் சமாளித்தாலும் நல்ல சைவ உணவு கிடைக்காமல் காந்தி ரொம்பவும் கஷ்டப்பட்டார்.

இங்கிலாந்தின் தட்பவெப்பத்துக்கு அங்கு மாமிசம் சாப்பிடாமல் இருப்பது மிகவும் கடினம். அதனால், காந்தியின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும் என்ற அக்கறையில்தான் காந்தியின் நண்பர் கோபமாகப் பேசினார்.

சைவ உணவு விடுதியைத் தேடி தினமும் பத்து மைல்களுக்கும் மேல் காந்தி நடந்தே பயணத்தை மேற்கொண்டார். இங்கிலாந்தில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால்தான் தனக்குப் படிப்புக்கென்று அனுப்பப்படும் பணத்தை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியும் என்பதற்காக சாரட் வண்டிகளைத் தவிர்த்துவிட்டு பெரும்பாலும் நடந்தே செல்லும் பழக்கத்தை காந்தி ஏற்படுத்திக்கொண்டார். அங்கு ஆரம்பித்த நடை தென்னாப்பிரிக்காவில் அங்குள்ள இந்தியர்களுக்காக நடந்தது, உப்பு சத்தியாகிரக நடை, நவகாளி நடை என்று இறுதிவரை தொடர்ந்தது.

ஒருவழியாக சைவ உணவகம் ஒன்றை காந்தி கண்டுபிடித்தார். இங்கிலாந்து சென்ற பிறகு அப்போதுதான் வயிறார உணவு உண்டார். அது மட்டுமல்லாமல், அந்த சைவ உணவகத்தின் கண்ணாடி ஜன்னலில் விற்பனைக்காக வைத்திருந்த ‘சைவ உணவின் முக்கியத்துவம்’ என்ற புத்தகத்தை வாங்கிக்கொண்டார். எச்.எஸ்.சால்ட் எழுதிய அந்தப் புத்தகம் காந்தியிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை மதத்துக்காகவும் தாயிடம் கொடுத்த சத்தியத்துக்காகவுமே காந்தி சைவ உணவாளராக இருந்ததாகவும் அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு தன்னுடைய சுயவிருப்பத்தின் பேரில் முழு சைவ உணவாளராகத் தான் மாறினேன் என்றும் காந்தி எழுதுகிறார்.

அப்படியே லண்டனிலுள்ள சைவ உணவுக்கார ஆங்கிலேயர்களின் தொடர்பு அவருக்கு ஏற்படுகிறது. அவர்களின் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார் காந்தி. ஒரு குழுவாக காந்தி தன்னை இணைத்துக்கொண்ட முதல் சமூகச் செயல்பாடு அதுதான். அதன் பிறகு தான் இருக்கும் பகுதியில் அந்தச் சைவ உணவுச் சங்கத்தின் கிளை ஒன்றைத் தொடங்குகிறார். அவர் உருவாக்கிய முதல் அமைப்பு அதுவே. சைவ உணவுச் சங்கத்தினரால் நடத்தப்பட்ட ‘தி வெஜிட்டேரியன்’ இதழில் 1890 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியர்களின் சைவ உணவுப் பழக்கத்தைப் பற்றி காந்தி ஆறு வாரத் தொடர் ஒன்றை எழுதுகிறார். ஒரு எழுத்தாளராக காந்தியின் தொடக்கம் இதுவே.

ஆயினும் இறுதிவரை காந்தியின் சைவ உணவுப் பழக்கம் மற்றவர்களுடைய உணவுப் பழக்கத்தை அவமதிப்பதாக இல்லை. பிற்காலத்தில் இந்தியாவில் தனது ஆசிரமத்துக்கு வந்திருந்த கான் அப்துல் கபார் கானின் குடும்பத்துக்காக இறைச்சி வாங்கிவரும்படி காந்தி கூறிய நிகழ்வுகள் இருக்கின்றன. அதேபோல், மாட்டிறைச்சியைத் தடைசெய்யும் வகையில் பசுவதைச் சட்டம் கொண்டுவருவதையும் கடுமையாக எதிர்த்தவர் அவர்.

சைவ உணவாளர்களுடன் காந்தி கொண்டிருந்த நட்பு அவரது உலகத்தின் எல்லைகளை விரித்தது. நண்பர் ஒருவர் பகவத் கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொடுக்க கீதை மீதான காந்தியின் காதல் தொடங்குகிறது. இன்னொருவர் பைபிளைக் கொடுக்க பைபிள் மீதான காதலும் தொடங்குகிறது. அத்துடன் காந்தி நிற்கவில்லை. புத்தரைப் பற்றிய ‘ஆசிய ஜோதி’, முகம்மது நபியைப் பற்றிய நூல் போன்றவற்றைப் படித்து அவர்கள் மீதும் பெரும் பற்று கொள்கிறார். கூடவே, சார்லஸ் பிராட்லா என்ற நாத்திகரின் பரிச்சயமும் அவருக்கு ஏற்படுகிறது.

ஏழைகளுக்காகத் தன் வாழ்நாளைச் செலவழித்தவர் சார்லஸ். செல்வச் செழிப்பான வாழ்க்கையை விட்டுவிட்டு, ஒரு இசைக்கருவி விற்பனையகத்தின் மாடியில் சிறு அறையில் குடியிருந்தவர். செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக வாழ்வது எப்படி என்பது குறித்து சார்லஸ் பிராட்லா போன்ற சில ஆங்கிலேயர்களிடமிருந்து ஊக்கம் பெற்றார் காந்தி.

குஜராத்தில் ஒரு கூண்டில் அடைந்துகிடந்த காந்திக்கு வெளியுலகத்தின் வெளிச்சத்தை முதன்முதலில் திறந்துகாட்டியது இங்கிலாந்துதான். ஒரு மரபார்ந்த இந்தியராய் அவருடன் புத்துலகின் இங்கிலாந்து நடத்திய உரையாடல் காந்தியிடம் பெரும் ரசவாதத்தை நிகழ்த்தியது. பன்மைக் கலாச்சாரம், எல்லா மதங்களையும் சமமாக நேசித்தல் போன்ற இன்றைய இந்தியாவுக்கு மிகவும் அவசியமான குணங்களை காந்தி உள்வயப்படுத்திக்கொண்டது அவருடைய இங்கிலாந்து காலத்தில்தான்.

பாரிஸ்டர் படிப்பை முடித்தாகிவிட்டது. வெளியுலகைப் பற்றிய அறிவைக் கொஞ்சம் திரட்டிக்கொண்டாகிவிட்டது. எனினும், இன்னமும் கூச்சம் நிரம்பிய காந்திதான். எழுதிவைத்துக்கொண்டு பேசுவதற்குக்கூடத் தயங்கும் காந்திதான். இந்தியாவிலிருந்து அவர் கட்டிக் கொண்டுசென்ற மூட்டைகளில் அவசியமில்லாத சிலவற்றை இங்கிலாந்தில் விட்டுவிட்டும் இங்கிலாந்திலிருந்து சில அவசியமான மூட்டைகளை எடுத்துக்கொண்டும்தான் மறுபடியும் காந்தி இந்தியாவுக்குக் கப்பலேறுகிறார்.

(காந்தியைப் பேசுவோம்)

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x