Published : 14 Jan 2014 01:33 PM
Last Updated : 14 Jan 2014 01:33 PM
தமிழ்ப் பதிப்புத் துறை இப்போது எவ்வளவோ முன்னேறிவிட்டது. சென்னைப் புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகத் தலைப்புகளின் எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சம் என்பது, பதிப்பகத் தொழிலில் எவ்வளவு கோடிகள் புரளுகின்றன என்பதற்கு ஓர் உதாரணம். புத்தகத் தயாரிப்பு, விளம்பரங்கள், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் எல்லாம் ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையாக மேம்பட்டிருக்கின்றன தமிழ்ப் புத்தகங்கள். ஆனால், புத்தகங்களை எழுதும் படைப்பாளிகளுக்குக் கொடுக்கும் சொற்பத் தொகையான ‘ராயல்டி’யைத் தருவதில் எந்த அளவுக்கு நியாயமாக நடந்துகொள்கின்றன?
அன்று முதல் இதே கதை!
கடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய சமயப் பின்னணி கொண்ட பதிப்பகத்தின் கதை இது. “அந்தப் பதிப்பகத்தில் வெறும் கருப்பட்டி காபி கொடுத்தே நூல்களை எழுதி வாங்கிவிடுவார்கள்” என்று புலம்பினார்கள் கருப்பக்கிளகம் சு.ராமசாமிப் புலவர் போன்றோர். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாருக்கு பிரியாணி பிரியம் என்பதால், ஒரு பொட்டலம் பிரியாணியை வாங்கிக் கொடுத்து, மொழிபெயர்ப்பு வேலையை வாங்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. புதுமைப்பித்தன் போன்றோர் பதிப்பக முதலாளியைத் தேடிப்போய் பணத்துக்காக நின்றதையும், அவர்கள் கூடுமானவரை பணம் தராமல் இழுத்தடிப்பதையும் நொந்துபோய் எழுத்திலேயே பதிவுசெய்துள்ளனர்.
பிரபஞ்சனின் கதை அப்படி
“என் அனுபவத்தில் இரு பதிப்பகங்கள் என்னை ஏமாற்றி யிருக்கின்றன. முதலாவது, இடதுசாரி இயக்கத்தோடு பிணைந்திருக்கும் ஒரு நிறுவனம். நான், எஸ். பொன்னுதுரை, வளர்மதி மூவரும் எழுதிய ஆறு நாடகங்களை எங்களது அனுமதி பெறாமலேயே அச்சிட்டு, 30 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றிருந்தது அது. கடைசியில், தோழர் நல்லகண்ணுவை அணுகி அவர் முன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்குரிய பணத்தைப் பெற்றோம். இன்னொரு பதிப்பகம், இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டு, தொலைக்காட்சிகளில் சர்வதேசப் பிரச்சினைகள் முதல் டிஎம்டி கம்பிகள் வரை எதுபற்றிக் கேட்டாலும் தொலைக் காட்சிகளில் அபிப்பிராயம் சொல்வாரே அவர் நடத்துகிற நிறுவனம். என் இரண்டு புத்தகங்களுக்கு அவர் எனக்கு ராயல்டியே தரவில்லை. எழுத்தாளர்களின் மரணத்துக்காகக் காத்திருக்கும் பதிப்பாளர்கள் உண்டு. ஏனெனில் அவர்கள் இறந்தவுடன் அவர்களது படைப்புகள் கிட்டத்தட்ட நாட்டுடைமையாகிவிடுவதைப் போல. அதற்குப் பிறகு ராயல்டி தொகையைத் தராமலேயே புத்தகங்களைப் பிரசுரிக்கலாம் என்பதுதான் காரணம் “ என்கிறார் பிரபஞ்சன்.
சாருவின் கதை அப்படி
“ஒரு விஷயம் சொல்லட்டுமா? எனக்குப் பதிப்பாளர்கள் தரும் ‘ராயல்டி’ தொகை செல்பேசி டாப் அப் செய்வதற்கு மட்டுமே உதவுகிறது. என்னுடைய சிறந்த நாவலான ‘ராச லீலா’ 80 பிரதிகள்தான் போயிருப்பதாகச் சொல்கிறார் பதிப்பாளர். என்னைப் போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கு வருடத்துக்கு 20 ஆயிரம் பிரதிகள் விற்க வேண்டும். அப்போதுதான் ‘ராயல்டி’ கௌரவமாக இருக்கும். அதுவரை இதுபற்றிப் பேசுவதே அபத்தம்” என்கிறார் சாரு நிவேதா.
இது கண்ணதாசன் கதை
“எங்கள் அப்பா எழுதிய புத்தகங்களுக்குச் சரியான ராயல்டி தொகையைப் பதிப்பாளர்கள் கொடுக்கவில்லை. அந்த நிலையில்தான் நாங்களே அப்பா பெயரில் ‘கண்ணதாசன் பதிப்பகம்’ தொடங்கினோம்” என்று சொல்லும் கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் “தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிடுவதற்குப் புத்தகத்தின் முகப்பு விலையில் 10%; முன்பணமாக ரூ. 10,000; மொழிபெயர்ப்பாளர்களுக்குக் காப்புரிமைத் தொகையாக அன்றி, உள்ளடக்கத்தைப் பொறுத்து ஒரு பக்கத்துக்கு ரூ. 125 முதல் ரூ. 150 வரை தரும் வழக்கத்தைத் தாம் கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கிறார்.
பிரதிகளும் ராயல்டிதான்!
மூன்று விதமான முறைகளை ‘ராயல்டி’ விஷயத்தில் கடைப்பிடிப்பதாகச் சொல்கிறார் ‘அடையாளம் பதிப்பகம்’ சாதிக். “சந்தையில் எப்போதும் தேவை இருக்கக் கூடிய நூலாசிரியர்களுக்கு 5% முதல் 8% தொகையை முன்பணமாகக் கொடுத்துவிடுவோம். ஓரளவு விற்பனை வாய்ப்புள்ள எழுத்தாளர்களுக்கு முகப்பு விலையில் 10% தொகையைப் புத்தகங்கள் விற்க விற்கக் கொடுப்போம். தொடக்க நிலை எழுத்தாளர்கள் என்றால், புத்தகத்தின் 25 பிரதிகளை மட்டுமே ‘ராயல்டி’யாகக் கொடுப்போம்” என்கிறார். புத்தகம் விற்ற எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் 7.5% முதல் 10% வரை ‘ராயல்டி’யாகத் தரும் முறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார் ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி சேஷாத்ரி.
சர்ச்சையின் நாயகன்
சமீப காலமாக இணைய விவாதங்களிலும், முகநூலிலும் காப்புரிமைத் தொகை தொடர்பாக அதிகம் சர்ச்சைக்குள்ளாகிவரும் பதிப்பகம் ‘உயிர்மை பதிப்பகம்’. இதுகுறித்து அதன் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டபோது, “நாங்கள் 10% ‘ராயல்டி’ வழங்குகிறோம். அதிகமாக விற்பனையாகும் எழுத்தாளர்களின் நூல்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இந்தத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், இளம் எழுத்தாளர்கள் பெரும்பாலானோரின் நூல்கள் ஆண்டுக்கு 100 முதல் 150 பிரதிகள்கூட விற்பதில்லை. கவிதைத் தொகுப்புகளின் நிலை இன்னும் மோசம். ஆண்டுக்கு 50 பிரதிகள்கூட விற்பனையாகாத ஒரு புத்தகத்தை எழுதிய கவிஞர், ‘பதிப்பாளர் ராயல்டி தராமல் ஏமாற்றுகிறார்’ என்று கூசாமல் எழுதினால் என்ன செய்ய முடியும்? விற்பனையாகாத நூல்கள் மீது ஏகப்பட்ட தொகையை முதலீடு செய்துவிட்டுத் தவிக்கிறேன்” என்கிறார்.
என்னதான் நடக்கிறது?
ஆண்டுதோறும் ஒருபுறம் புத்தக வெளியீடுகளும் விற்பனையும் அதிகரிக்கின்றன; இன்னொருபுறமோ எழுத் தாளர்கள் ‘ராயல்டி’ தரப்படுவது இல்லை என்கிறார்கள்; பதிப்பாளர்கள் ‘நஷ்டத்தைச் சந்திக்கிறோம்’ என்கிறார்கள். எனில், எதை நம்பி ஓர் எழுத்தாளர் எழுதுகிறார்? எதை நம்பி ஒரு பதிப்பாளர் பதிப்பிக்கிறார்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT