Published : 01 Nov 2018 09:59 AM
Last Updated : 01 Nov 2018 09:59 AM

இறுதித் தீர்ப்பை மக்களே எழுதுவார்கள்...

மதில்மேல் நின்ற பூனை ஒருவழியாகக் குதித்தேவிட்டது. நல்லவேளையாக, சரியான பக்கத்தில்தான் குதித்திருக்கிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்.

எம்எல்ஏக்களுடன் கூடிக் கலந்து பேசி அவர்களுக்கிடையேயான பெரும்பான்மை கருத்தின்படிதான் முடிவெடுக்கப்படும் என்று அநியாயத்துக்கு ஜனநாயகவாதியாக மாறியிருந்தார் தினகரன். தொகுதி மக்களின் கருத்தறிந்த பிறகே இப்போது முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்பதாக இன்னமும்கூட அந்தக் காட்சிகள் நீள்கின்றன. தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது முதலாக இந்த ‘அதிதீவிர’ ஜனநாயகவாதம், பழனிசாமியின் ஆட்சியை ஓராண்டுக்கும் மேலாகப் பாதுகாத்துவந்திருக்கிறது என்றும் நாம் மொழிபெயர்க்கலாம்.

சபாநாயகரின் உத்தரவு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் 2017 ஆகஸ்ட் 22-ல் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, முதல்வருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அதிமுக கொறடா ராஜேந்திரன். 19 பேரில் ஜக்கையன் என்ற உறுப்பினர் மட்டும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். மற்ற 18 உறுப்பினர்களையும் தகுதிநீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் 18 பேரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இவ்வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கிறார்.

கட்சித்தாவல் என்பதற்கான வரையறை, சபாநாயகரின் அதிகார வரம்பெல்லை குறித்த சில விவாதங்களை இவ்வழக்கு உருவாக்கியிருக்கிறது. உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டின் மூலமாக இந்தக் கேள்விகளுக்கு ஒரு தெளிவான முடிவு கிடைத்திருக்கலாம். ஆனால், இது சட்டரீதியான பிரச்சினை என்பதைக் காட்டிலும் மக்கள் பிரச்சினை என்பதே முக்கியமானது. சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளைச் சொல்லி முறையிடவும் நிவர்த்தி செய்துகொள்ளவும் பிரதிநிதிகள் இல்லாமலிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டால் வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாவது மேலும் தாமதமாகும். மேல்முறையீடுதான் செய்வோம் என்று ஒருவேளை தினகரன் சொல்லியிருந்தால், யாரை அரசியல் எதிரிகள் என்றும் நம்பிக்கைதுரோகிகள் என்றும் அவரும் அவரது ஆதரவாளர்களும் அனுதினமும் வசைபாடிக்கொண்டிருக்கிறார்களோ அவர்களின் ஆட்சியை ஏதோ ஒருவகையில் பாதுகாக்கிறார் என்ற மக்களின் நியாயமான சந்தேகத்துக்கும் பதில்சொல்ல வேண்டியிருந்திருக்கும்.

தாமதமான முடிவு

‘நீதிமன்றங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. தகுதிநீக்கம் குறித்து நான் வழக்கு தொடுக்கப்போவதில்லை’ என்று தொடக்கத்திலேயே அறிவித்தார் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான தங்க.தமிழ்ச்செல்வன். ஆனால், அவர் உட்பட தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் இணைந்தே உயர் நீதிமன்றத்தை நாடினர்.

தலைமை நீதிபதியை உள்ளடக்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகளுக்கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவியதையொட்டி மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு விடப்பட்ட நிலையில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நோக்கி சந்தேகங்களை எழுப்பினார் தங்க.தமிழ்ச்செல்வன். அவர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்பட்டு, மன்னிப்பு கேட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

நீதிமன்றத்தில் தனக்குச் சாதகமான தீர்ப்பு வரலாம், வராமலும் போகலாம் என்ற இரட்டை சாத்தியங்கள் எல்லா வழக்கிலுமே உண்டு. சாதகமான தீர்ப்பை எதிர்நோக்கி முறையிடுபவர்கள், அப்படி நடக்காவிட்டால் அதன் பிறகு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையிழந்து பேசுவது துரதிருஷ்டவசமானது.

தங்க.தமிழ்ச்செல்வன் முன்னரே அறிவித்தபடி தகுதிநீக்கப் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லாமல் இடைத்தேர்தலை விரைவுபடுத்தி யிருந்தால் தமிழக அரசியலின் காட்சிகள் தலைகீழாய் மாறியிருக்கும். இப்போதும்கூட, மேல்முறையீடு இல்லை என்று தினகரனோ தகுதிநீக்கம் செய்யப் பட்டுள்ள அவரது எம்எல்ஏக்களோ உடனடியாக அறிவிக்கவில்லை. எடியூரப்பா வழக்கின் தீர்ப்பு தங்களுக்கும் பொருந்தும் என்ற எதிர்பார்ப்பு, இடையிடையே நம்பிக்கைதுரோக வசைபாடல்கள் என்ற வழக்கமான காட்சிகளைத் தாண்டித்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

வெல்வாரா பழனிசாமி?

திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது.  தற்போது,  சபாநாயகருடன் சேர்த்து மொத்தம் 116 உறுப்பினர்கள் அதிமுக வசம் இருக்கிறார்கள். பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றால் அதிமுக குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். ஆனால், அதிமுக தலைமை மீது நான்கு உறுப்பினர்கள் வெளிப்படையாக அதிருப்திகாட்டிவருகிறார்கள். எனவே, 20 தொகுதிகளில் ஆறு இடங்களையாவது வென்றால்தான் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற அழுத்தம் பழனிசாமிக்கு உருவாகியிருக்கிறது.

இடைத்தேர்தல் வந்தால் இருபது தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருக்கிறார் பழனிசாமி. அவரது ஆட்சி தொடரக் கூடாது என்று குரல்கொடுக்கும் தினகரன் அவரை வெற்றிகொள்வாரா என்பது தெரியவில்லை. ஆனால், இனிமேலும் பழனிசாமி, தினகரன் இருவரும் காய்நகர்த்தி விளையாடிக்கொண்டிருக்க முடியாது.

சட்டப் போராட்டப் பூச்சாண்டி காட்டலைத் தாண்டி கள அரசியலில் இருவரும் கால் பதிக்க வேண்டும். வரவிருக்கிற இடைத்தேர்தல் தமிழகத்தின் அடுத்த சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளை முன்னறிவிப்பதாகவும் இருக்கலாம், முன்கூட்டியே ஆட்சிமாற்றத்தையும் உருவாக்கலாம். இறுதித் தீர்ப்பை மக்களே எழுதுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x