Published : 01 Nov 2018 10:01 AM
Last Updated : 01 Nov 2018 10:01 AM
ஒரு திரைப்படம் உருவாகும்போதோ, வெளியீட்டுத் தேதி நெருங்கும்போதோ, அந்தப் படத்தின் கதைக்கு வேறு சிலர் உரிமை கோருவது தமிழ் சினிமாவில் புதிதல்ல. இப்படியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையல்ல என்றபோதிலும், பல தருணங்களில் சமரசம் என்ற பெயரில் பிரச்சினை பெரிதாகாமல் தடுக்கப்பட்டுவிடும். இந்தச் சூழலில் ‘சர்கார்’ திரைப்படம் தொடர்பாக உருவான சர்ச்சை, உதவி இயக்குநர்கள், கதாசிரியர்களுக்கு இதுவரை கிடைத்திராத வெற்றிக்கு வழிகோலியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று உரிமை கோரிய துணை இயக்குநர் கே.வி.ராஜேந்திரன் என்கிற வருண் இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகினார். அப்போதுகூட இதைப் பலரும் கவனிக்கவில்லை. வருண் 2007-ல் பதிவு செய்திருந்த ‘செங்கோல்’ என்ற கதைக்கும் முருகதாஸ் 2017-ல் பதிவு செய்த ‘சர்்கார்’ கதைக்கும் ஒற்றுமைகள் இருப்பதாகவும் வருண் நீதிமன்றத் தீர்வை நாடினால் அதற்குச் சங்கம் தடையாக இருக்காது என்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெரிய அளவில் விவாதமும் எழுந்தது.
தனது முழுக் கதையைப் படிக்காமல் ‘சர்கார்’ படத்தையும் பர்க்காமல் இதுவும் வருண் எழுதிய கதையும் ஒன்றுதான் என்று பாக்யராஜ் எப்படிச் சொல்லலாம் என்று கேள்வி எழுப்பினார் முருகதாஸ். படத்தின் வசனம், திரைக்கதையில் பணியாற்றிய எழுத்தாளர் ஜெயமோகனும் இயக்குநர் பக்கமே நியாயம் இருப்பதாகப் பேசினார். படக்குழு தரப்பிலிருந்து வெளிப்பட்ட தார்மிக ஆவேசத்தைப் பார்த்தபோது, இரண்டு கதைகளும் முழுதாக நீதிமன்றத்தால் படிக்கப்பட்டு இரண்டும் வெவ்வேறு கதைகள் என்று தீர்ப்பு வரும் என்றுதான் தோன்றியது. ஆனால், நீதிமன்ற விசாரணை நாள் அன்று வருணுடன் சமரசம் செய்துகொள்வதாக அறிவித்தது முருகதாஸ் தரப்பு. ‘சர்கார்’ படத்தின் டைட்டில் கார்டில் இருவருக்கும் ஒரே கதைக் கரு தோன்றியிருப்பதை அங்கீகரிக்கும் அறிக்கையை 30 நொடிகளுக்குக் காண்பிப்பதாகவும் முருகதாஸும் படத்தைத் தயாரித்த ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
கதைக் கரு ஒற்றுமையை முன்வைத்து சமரசம் செய்துகொள்ளுங்கள் என்றுதான் பாக்யராஜ் முதலிலேயே பரிந்துரைத்தார். அதை ஏற்காமல் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளப்போவதாக சொன்ன முருகதாஸ், விசாரணை நாளில் சமரசத்துக்கு முன்வந்தது அவரது முந்தைய வாதங்களை சந்தேகத்துக்குள்ளாக்குவது இயல்பானது. படத்தின் வெளியீடு தள்ளிப்போவதைத் தவிர்க்கவே இந்த சமரசம் என்று வைத்துக்கொள்ளலாம். முன்பு இதை ஒரு ‘சதித் திட்டம்’ என்பதுபோல் முருகதாஸ் ஏன் பேட்டியளித்தார் என்ற கேள்வியும் எழுகிறது.
சமரசத்தின் மூலம் இந்தப் பிரச்சினை சுமுகமாக தீர்த்துவைக்கப்பட்டது என்று பலரும் சொல்கிறார்கள். நிகழ்ந்தவற்றைப் பார்த்தால் வருணின் கதை உரிமைகோரலில் இருந்த உண்மையே இறுதி வெற்றியைச் சுவைத்திருக்கிறது. கதை உரிமை சார்ந்த விவாதங்களைத் தாண்டி இந்த விவகாரம் முடிந்த விதம் திரைத் துறையில் குரலற்றவர்களாக இருக்கும் உதவி இயக்குநர்களுக்கும், கதாசிரியர்களுக்கும் பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. பாக்யராஜ் தலைமையிலான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் இனி இதுபோன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்ற நம்பிக்கையும் கிடைத்துள்ளது. மேலும், இன்றைய சமூக ஊடக யுகத்தில் முன்புபோல் ஆதிக்க சக்திகள் எளியவர்களின் குரலை அவ்வளவு எளிதாக நசுக்கிவிட முடியாது என்பதையும் வருண்களின் போராட்டமும் பாக்யராஜ்களின் நேர்மையான ஆதரவும் நமக்கு உணர்த்தியுள்ளன!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT