Last Updated : 21 Nov, 2018 10:01 AM

 

Published : 21 Nov 2018 10:01 AM
Last Updated : 21 Nov 2018 10:01 AM

குடிக்க ஒரு வாயி தண்ணி கொடுங்கய்யா

பேராவூரணி அருகே கொன்றைக்காடு பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களைச் சந்தித்தேன். “புயல் வருமுன்னு சொன்னாங்க... ஆனா, இப்படி எங்களை நிராயுதபாணியாக்குமுன்னு நாங்க நினைக்கவே இல்லை. வீடு, தோட்டம் தொறவுன்னு இருந்த எங்களையெல்லாம் ஒரு வேளை சோத்துக்குக் கையேந்த வைச்சுட்டுதே... குடிக்க ஒரு வாயி தண்ணிகூட இல்லையே” என்று குமுறுகிறார்கள் மக்கள்.

கஜா புயல் தாக்கிய கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சாலைநெடுகிலும் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து கிடக்கின்றன. மரங்களை மக்களே வெட்டி வழிகளை சரிசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மின்சார வாரியம் முழுமூச்சாக களத்தில் இறங்கினாலும்கூட மின்கம்பங்களை நிறுத்தி இணைப்பு கொடுக்க எப்படியும் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது தேவைப்படும். அதுவரை, குடிநீர்ப் பிரச்சினையைச் சமாளிப்பது எப்படி என்பதுதான் முதல் சவால்.

கஜா புயல் 15-ம் தேதி கரையைக் கடக்கப்போகிறது, எல்லா மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளிலும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என அரசாங்கம் புயல் தாக்கப்படுவதற்கு முன்பே கூறியிருந்தது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் ஆயிரக்கணக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீரை சேமித்து வைத்தனர். 16-ம் தேதி புயல் கரையைக் கடந்தபோது தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமங்களில் இந்தக் குடிநீர் பெரிதும் உதவியது. அதே நேரத்தில் கடற்கரையோரப் பகுதிகளான அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி, மல்லிப்பட்டினம் என்று தஞ்சையின் கடற்கரையோரப் பகுதிகளில் குடிநீர்த் தொட்டிகளும் குழாய்களும் சேதமடைந்ததால் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது. வீடுகளின் மேலிருந்த மினி வாட்டர் டேங்குகளும் காற்றில் பறந்தன. இதனால், குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பரிதவித்துவருகின்றனர்.

மின்சாரம் இல்லாததால் பம்புசெட்டுகளை இயக்க முடியவில்லை. பம்புசெட்டுகள் வந்ததால் இந்தப் பகுதியில் கிணறுகள் அறவே மூடப்பட்டுவிட்டன. “கிணறு இருந்தாலாவது தண்ணீர் இறைத்துக் குடிக்க முடியுமே” என்று அங்கலாய்க்கிறார்கள் கிராமத்துப் பெரியவர்கள். “என்னதான் விவசாயம் நவீனமாகிப்போனாலும், கிணறுகளைக் கைவிட்டு ஆழ்துளைக் கிணறுகளுக்கு மாறியது எவ்வளவு துயரத்துக்கு ஆளாக்கிவிட்டது” என்று வருத்தப்படுகிறார்கள் விவசாயிகள்.

பட்டுக்கோட்டை கோட்டத்தில் மட்டும் பத்தாயிரக்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதமாகியுள்ளன. மாவட்டத்தில் இந்த அளவுக்கு மின் கம்பங்கள் இருப்பு இல்லை, பக்கத்து மாவட்டத்திலிருந்து எடுத்துவர ஒரு வார காலமாகிவிடும் அதுவரை மின்சாரம் கிடைக்காது, மின்சாரம் கிடைக்காததால் குடிநீரும் கிடைக்காது. இன்னும் ஒரு வாரத்துக்குக் குடிநீர் இல்லாத நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

சில கிராமங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர்த் தொட்டிக்குத் தண்ணீர் ஏற்றப்படுகிறது. ஆனால், அந்த வசதி எல்லா ஊர்களிலும் இல்லை. குறைந்தபட்சம், மற்ற மாவட்டங்களிலிருந்து ஜெனரேட்டர்களைக் கொண்டுவந்து தற்காலிகமாவது இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம்.

“ஒரு ஜெனரேட்டரைக் கொண்டுவந்து கொடுத்தா போதும்... குடிதண்ணிப் பிரச்சினையைச் சமாளிக்கலாம். அதைக்கூட செய்யாம என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாங்க?” என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்வி.

- வி.சுந்தர்ராஜ்,

தொடர்புக்கு: sundarraj.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x