Last Updated : 28 Nov, 2018 10:14 AM

 

Published : 28 Nov 2018 10:14 AM
Last Updated : 28 Nov 2018 10:14 AM

தற்செயலாகப் பத்திரிகை உலகுக்குள் வந்த தமிழாசிரியர்

தமிழ்ப் பத்திரிகையுலகின் ஜாம்பவான்களில் தற்செயலாக இந்தத் துறைக்கு வந்து பெரும் மாற்றங்களை நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் ஐராவதம் மகாதேவன். ‘தினமணி’யில் அதன் புகழ்பெற்ற ஆசிரியரான ஏ.என்.சிவராமனுக்கு அடுத்து பொறுப்புக்கு வந்தவரான ஐராவதம் மகாதேவன், பத்திரிகையில் பணியாற்றியது என்னவோ வெறும் ஐந்து ஆண்டுகள்தான். ஆனால், அதற்குள் அவர் அங்கு ஏற்படுத்திய மாற்றங்கள் ஒட்டுமொத்த தமிழ்ப் பத்திரிகையுலகிலும் தாக்கங்களை உண்டாக்கின. அவை இன்றும் தொடர்கின்றன.

பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து பத்திரிகை ஆசிரியரானவர் ஏ.என்.சிவராமன் என்றால், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து பத்திரிகை ஆசிரியரானவர் ஐராவதம் மகாதேவன். நேர்மை, கறார்தன்மையை அடையாளமாகக் கொண்ட அவர், நம்முடைய அமைப்பில் எங்கும் நீண்ட காலம் நீடிக்க முடியாமல்போனதில் ஆச்சரியம் என்ன? ஆனால், எவ்வளவு காலம் ஒரு துறையில் இருக்கிறோம் என்பதைக் காட்டிலும் எப்படியான மாற்றங்களுக்கு நாம் வித்திட்டிருக்கிறோம் என்பதில்தான் மனிதர்கள் வாழ்க்கை வரலாறு ஆகிறது. ஐராவதம் மகாதேவனின் வாழ்க்கை ஒரு வரலாறு.

வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் அல்லது வேட்டி ஜிப்பாவில் வருவார். அவர் சிரித்துப் பேசினால் அன்று தீபாவளி, கோபமாக வந்தால் அக்னி நட்சத்திரம். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அலுவலகத்தில் மூத்த நிர்வாகியாகத்தான் முதலில் அவர் பதவிக்கு வந்தார். அப்போதே பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர் செய்த நிர்வாகச் சீர்திருத்தங்கள் இன்றும் நினைவுகூரப்படுபவை.

ஊதியக் குழுப் பரிந்துரைகளின்படி ஊதியத்தில் கணிசமான பலன் கிடைக்க உதவினார். பெண் ஊழியர்களுக்கென்று தனிக் கழிப்பறைகளை ஒதுக்கச் செய்தார். மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் தரப்படுவதை உறுதிசெய்தார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பத்திரிகையாளர்களுக்குக் கட்டாயப் பதவி உயர்வை அவர்தான் அமல்படுத்தினார்.

ஒரு பத்திரிகையாசிரியராக நாளிதழுக்குள் அவர் கொண்டுவந்த மாற்றங்களில் முதன்மையானது மொழிக்கான முக்கியத்துவம். மொழிதான் தொழில் கருவி என்றாலும், அதையே உதாசீனப்படுத்துவது தமிழ்ப் பத்திரிகையாளர்களை எங்கோ எப்படியோ பீடித்துவிடும் சாபக்கேடுகளில் ஒன்று. ஐராவதம் மகாதேவன் முதலில் அந்த இடத்தில்தான் கை வைத்தார். தமிழ் நாளிதழ்களில் முதல் முறையாக பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் பத்திரிகை அலுவலகத்தில் முதலில் ஆசிரியர் குழாத்தில் அவர் கூறியதே ‘நல்ல தமிழில் எழுதுங்கள்’ என்பதுதான். ஆசிரியர் இலாகாவினர் அனைவரும் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும் அவர்களை அதிகம் தொல்லைக்குள்ளாக்குவது தமிழில் உள்ள ‘ஒற்று’கள். தேவைப்பட்ட இடத்தில் தவிர்த்தும் - தேவையற்ற இடங்களில் மிகுத்தும் எழுதும் பழக்கம் எப்படியோ எல்லோருக்கும் பொதுவாகிவிடும். கல்லூரியில்கூட, தமிழ்ப் பாடத்தில் இலக்கணத்துக்கு 20 மதிப்பெண்கள் மட்டுமே என்பதால் ‘சாய்ஸில்’ விட்டுவிட்டு, தமிழில் தேர்ச்சிபெறும் கலையை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் இல்லையா?

ஐராவதம் மகாதேவன் எல்லாவற்றையுமே சொல்லிக்கொடுப்பார். அறையில் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருப்பார். நடுவில் நாம் சந்தேகம் கேட்டால் உடனே உள்ளே அழைத்து, மிகச் செறிவாக விளக்கம் தருவார். மறுநாள் செய்தித்தாளில் நாம் கேட்ட விஷயம் பிரசுரமாகிறதா என்று பார்ப்பார். முதல் முறை தவறு செய்தால் கோபிக்க மாட்டார், கற்றுத்தருவார். தொடர்ந்து தவறு செய்தால் மன்னிக்க மாட்டார்.

பெயர்களை எப்படி எழுதுவது என்று ஐராவதம் மகாதேவன் எங்களுக்குக் கற்றுத்தந்த பாடம் என்றென்றும் எல்லோருக்குமானது. அந்நிய மொழிப் பெயர்களை எழுதுகையில், சம்பந்தப்பட்ட மொழியின் உச்சரிப்பு, அர்த்தம் அறிந்து மொழிபெயர்க்க வேண்டும் என்பார். பாகிஸ்தான் பிரதமர் பெயரை ‘பெநாசிர் புட்டோ’ என்று எழுதினோம். “நசீர் என்றால் அழகு. பே நசீர் என்றால் இணையற்ற அழகு” என்று அர்த்தம் சொல்லி, பேநசீர் புட்டோ என்று எழுத வைத்தார்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று எழுதிக்கொண்டிருந்தவர்களிடம், ‘‘இப்படியே போனால் எதிர்காலக் குழந்தைகள் ‘நாங்கள் மராவில் ஏறி, குளாவில் குளித்து, பழாக்களைத் தின்றோம்’ என்று தமிழில் எழுதுவார்கள். ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என்று எழுதிப் பழகுங்கள்” என்றார்.

ஜெயலலிதா பெயரையே சம்ஸ்கிருதத்தில் ‘ஜெ’ கிடையாது; ‘ஜ’தான் என்று சொல்லி ‘ஜயலலிதா’ என்று மாற்றிவிட்டார். அடுத்த நாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ஆசிரியருக்குக் கடிதம் வந்தது. ‘சம்ஸ்கிருத உச்சரிப்புப்படி நீங்கள் எழுதியிருப்பது சரிதான். நான் ஜயலலிதாதான். ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஜெயராம் ஜெயலலிதா என்றே எழுதி, ஆவணங்களிலும் ஏறிவிட்டது. எனவே மாற்றம் வேண்டாம்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா. ஒருவர் தன் பெயரை எப்படி அதிகாரபூர்வமாக எழுதுகிறாரோ அப்படியே நாமும் பின்பற்றுவதில் தவறில்லை என்று அந்த நியாயத்தையும் ஏற்றுக்கொண்டார்.

கமலா, விமலா என்று பெண் பெயர்களில் விகுதி நீட்டலாக வரும், ஆண் பால் பெயர்களில் அதை கமலபதி திரிபாடி, விமல்குமார் மிஸ்ரா என்று எழுத வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டிய உதாரணங்கள் இன்றும் நினைவில் இருக்கிறது. தன்னுடைய பெயரைத் தூய தமிழில் எழுதுவதாக இருந்தால், ‘வெள்ளை யானை பெரிய சாமி’ என்று எழுதலாம் என்று அவர் ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னது நினைவுக்குவருகிறது.

அறிவியலுக்கும் தமிழுக்கும் தனி இணைப்புகளைத் தொடங்கி, தகுதியானவர்களிடம் அவற்றின் பொறுப்புகளை ஒப்படைத்தார். அவர் கொண்டுவந்த ‘தமிழ்மணி’ இணைப்பு வெகுஜன தளத்தில் இதழியலையும் இலக்கியத்தையும் ஒருங்கிணைக்கும் பாலமானது.

மொழியுணர்வு மட்டும் அல்ல; அபாரமான நீதியுணர்வும் தொலைநோக்குணர்வும் கொண்டவர் ஐராவதம் மகாதேவன். மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை மனதார வரவேற்று எழுதியவர்; சமூகநீதிக்கு இடஒதுக்கீடு முக்கியம் என இடைவிடாமல் முழங்கியவர். சுற்றுச்சூழல் அக்கறைகள் இன்றளவு முக்கியத்துவம் பெற்றிடாத அன்றைய காலகட்டத்தில் - முப்பதாண்டுகளுக்கு முன்னரே கூடங்குளம் ஆலைக்கு எதிர்க்குரல் எழுப்பியவர்.

பலதரப்பட்ட கருத்துகளுக்கும் இடமளித்த ஜனநாயகர். அப்போது இணை ஆசிரியராக இருந்த கஸ்தூரி ரங்கன் முதல் பக்கத்தில் செய்தி விமர்சனக் கட்டுரை எழுதுவார். உள்ளே நடுப்பக்கத்தில் ஐராவதம் மகாதேவன் தலையங்கம் தீட்டுவார். அனேகமாக இரண்டும் ஒரே பிரச்சினையின் வெவ்வேறு பகுதிகளை மையமாகக் கொண்டிருக்கும்.

ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அதிகாரச் செருக்கை ஒருபோதும் சகாக்களிடம் அவர் காட்டியதில்லை. அதேசமயம், தமிழ் மீது அக்கறையில்லாமல் இருக்கிறார்களே என்ற அறச்சீற்றத்தை மறைத்ததில்லை. அவரவர்க்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளைக் கேட்காமலேயே நிறைவேற்றுவார்.

அதே வேளையில், அலுவலக செய்தித்தாள் காகிதத்தைக்கூட சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் சகித்துக்கொள்ள மாட்டார். அவருடைய மகன் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு ஆண்டுதோறும் கணிசமான தொகையைச் செலவிட்டுவந்தார்.

தமிழில் தன் உயிரைக் கரைத்தோருக்குத் தனித்த உயிர் ஒன்று ஏது, பறிபோக? தமிழோடு நிலைத்திருப்பார் ஐராவதம் மகாதேவன்!

- வ.ரங்காசாரி, 

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x