Published : 20 Nov 2018 09:45 AM
Last Updated : 20 Nov 2018 09:45 AM

எங்க குறையைக் கேட்க யாருமில்லையா?

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கிறது. இரவுகளில் மெழுகுவத்தியின் சொற்ப வெளிச்சத்துடன் வியர்வையுடன் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையே நிலைகுலைந்திருக்கிறது. மின்விநியோகம் இல்லாததன் விளைவாகத் தண்ணீரும் தட்டுப்பாடாகியிருக்கிறது. “கரண்ட் சப்ளை வந்துட்டாலே, 75% பிரச்சினை முடிஞ்சிரும். ஆனா, அதுக்கான அறிகுறியே இல்ல. எப்படிச் சமாளிக்கிறதுன்னே தெரியல” என்கிறார்கள் நான் சந்தித்த பெரும்பாலான மக்கள்.

அரசின் நடவடிக்கைகளில் சுணக்கம் இருப்பதாகக் கருதும் மக்கள், அமைச்சர்கள், அதிகாரிகளை முற்றுகையிடத் தொடங்கியிருக்கிறார்கள். திங்கள் கிழமைகூட திருத்துறைப்பூண்டியில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, காமராஜ் ஆகியோரை மக்கள் முற்றுகையிட்டிருக்கிறார்கள். ஐஏஎஸ் அதிகாரி அமுதாவும் முற்றுகையிடப்பட்டிருக்கிறார். “பாதிக்கப்பட்ட எங்களை யாருமே வந்து பாக்காதது ஏன்?” என்ற குமுறல், மாவட்டம் முழுவதும் பரவலாகக் கேட்க முடிகிறது. உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, கருவாக்குறிச்சி, திருப்பத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. கருவாக்குறிச்சியில் மரங்கள் சாயவில்லை; சேதங்கள் இல்லை என்று அதிகாரிகள் பொய் சொல்வதாக மன்னார்குடிக்கே வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர் கருவாக்குறிச்சி கிராமத்து மக்கள். ஆதிச்சபுரம், வடகுடி ஆகிய கிராமங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசு அதிகாரிகள் சேதங்களை மதிப்பிட வரவில்லை என்று அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மனக் கொதிப்போடு இருக்கிறார்கள்.

12,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன. இவற்றைச் சரிசெய்யப் போதுமான பணியாளர்கள் இல்லை. உபகரணங்கள் இல்லை. மண்ணெண்ணெய் இல்லை. நகரங்களுக்கு வந்துசெல்லும் சாலைகள் தடைபட்டுக் கிடக்கின்றன. இரவைச் சமாளிக்கப் போதுமான மெழுகுவத்திகளும் இல்லை. இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். கூடுதலான பொருட்செலவும் இன்னொரு சுமை. புயலில் சரிந்த மரங்களுக்கு அடியில் பாம்புகள், விஷப் பூச்சிகள் மறைந்துகிடப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மன்னார்குடி வடுவூர் அருகில், சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றச் சென்ற முருகேசன் பாம்பு கடித்து உயிரிழந்திருக்கிறார்.

சென்னை வெள்ளம், கேரள வெள்ளத்தின்போது காவிரிப் படுகைப் பகுதியிலிருந்து நிவாரண உதவிகள் சென்றன. ஆனால், இன்றைக்கு அப்படிப்பட்ட உதவிகள் தங்களுக்குப் பெருமளவில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஒருநாள் கழித்துத்தான் நிவாரணப் பணிகள் தொடங்கின. சரியான திட்டமிடுதல் இல்லாமல் ஏற்படும் தாமதம் மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. செல்போன் கோபுரங்கள் விழுந்திருப்பதால், தகவல் தொடர்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைகளில் மின்சார வசதி இல்லாததால், அறுவை சிகிச்சைகள் நடப்பதில்லை. கர்ப்பிணிகள் பாடு சொல்லி மாளாது. சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து முடங்கியிருப்பதால், பிரசவத்துக்காகக் கிராமங்களிலிருந்து நடந்துவர வேண்டிய சூழல். ஆம்புலன்ஸ் வந்துசெல்ல முடியாத நிலை. இதனால், பெரும் இன்னலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். நகரங்களுக்கான சாலைகள் ஓரளவு சரியாகிவிட்டாலும், பல கிராமங்களுக்கு இடையிலான சாலைகள் இன்னமும் சீரடையவில்லை. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் முடங்கிக்கிடக்கிறார்கள்.

உடனடியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று மக்கள் ஏங்குகிறார்கள். அது சரியாக நடக்காதது அவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசிடமிருந்து முறையான உதவிகள் கிடைக்காத நிலையில், எல்லா ஊர்களிலும் அமைப்புரீதியான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்யலாம். இதனால், விரக்தியின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் திருவாரூர் மாவட்ட மக்கள். அரசு கவனிக்கிறதா?

- எஸ்.கோபாலகிருஷ்ணன்,

தொடர்புக்கு: gopalakrishnan.siva@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x