Last Updated : 02 Oct, 2018 09:40 AM

 

Published : 02 Oct 2018 09:40 AM
Last Updated : 02 Oct 2018 09:40 AM

இந்தியாவின் பேரெதிரியும் காத்திருக்கும் காந்தியக் களமும்!

இந்தியாவில் உண்மையான சமத்துவத்தை விரும்பும் எவரும் தீண்டாமைக்கு எதிரான போரில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் எதிரிகளிலேயே பெரியது தீண்டாமை. சமத்துவத்துக்கான பயணத்தின் முதல் படியும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைதான். சமத்துவத்தைத் தன் உயிரெனக் கருதிய காந்தி காலம் முழுமையும் அதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சமத்துவம் பேசுவோருக்கு இன்றும் அவருடைய பணிகள் ஊக்கசக்தி.

சொந்த வீட்டில் சத்தியாகிரகம்

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது டால்ஸ்டாய் பண்ணை, ஃபீனிக்ஸ் பண்ணை என்ற இரு கூட்டுவாழ்வுச் சமூகங்களை காந்தி நிறுவினார். அங்கு இந்தியர் அல்லாதவர்களும் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த இந்தியர்களும் எந்த வேறுபாடும் பார்க்காமல் வசித்தனர். அங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் வசித்தார். ஒருநாள் தனது ‘மலசலச் சட்டி’யை அவர் சுத்தம் செய்ய மறந்துவிட்டார். அதைச் சுத்தம் செய்யும்படி கஸ்தூர்பாவிடம் காந்தி கூறியபோது கஸ்தூர்பா மறுத்துவிட்டார். அதனால், கஸ்தூர்பாவை இழுத்து வெளியே தள்ளினார் காந்தி. மனைவியிடம் காந்தி கடுமையாக நடந்துகொண்ட நிகழ்வுகளில் ஒன்று இது. இந்தியாவுக்குத் திரும்பிவந்த பிறகு 1915-ல் தொடங்கிய சத்தியாகிரக ஆசிரமத்தின் விதிமுறைகளுள் முக்கியமான ஒன்று தீண்டாமை கூடாது என்பது. அந்த ஆசிரமத்தில் வசித்த தலித் குடும்பத்தினர் துதாபாய் – தானிபென் தம்பதி. அவர்களின் குழந்தை லட்சுமி. அவர்களைத் தன் குடும்பத்தினராக ஏற்றுக்கொண்ட காந்தி, லட்சுமியை மகளாகவும் ஏற்றார். இது ஆசிரமத்திலுள்ள பலருக்கும் பிடிக்கவில்லை – கஸ்தூர்பா உட்பட. இதனால் கஸ்தூர்பாவைப் பிரியும் முடிவுக்கு வந்தார் காந்தி. ‘நண்பர்களாகவே பிரிவோம்’ என்றார்.

காந்தியின் இந்த முடிவு குடும்பத்தாரை அதிரச் செய்தது. காந்தியின் செயலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். காந்தி எதிர் உண்ணாவிரதம் இருந்தார். இறுதியில், எதிர்த்தவர்கள் மனம் மாறி காந்தியைப் பின்பற்றத் தொடங்கினார்கள். குழந்தை லட்சுமி வளர்ந்து பெரியவளான பிறகு, அவளுக்குப் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துவைத்தார் காந்தி.

நிதி முடக்கம்

தன்னுடைய ஆசிரமத்திலும் பணிகளிலும் தலித் சமூகத்தினரை காந்தி உள்ளடக்கியது ஆதிக்க சாதியினரை அதிருப்திக்குள்ளாக்கியது. அதுவரை காந்திக்கு நிதியுதவி அளித்த பலர் ஆதரவை நிறுத்தினார்கள். காந்தியும் அசரவில்லை. ஆசிரமத்தை இழுத்து மூடும் சூழல் வந்தபோது, பெரும் பணக்காரரான அம்பாலால் சாராபாய் ரூ.13,000 காந்திக்கு அளித்தார். அக்காலத்தில் பெரிய தொகை அது.

மலம் அள்ள ஒரு போராட்டம்

காந்தியின் ஆசிரமத்தில் வசித்த அப்பாசாகேப் பட்டவர்தன் 1932 வாக்கில் ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்துகொண்டு ரத்னகிரி சிறையில் இருந்தார். அவர் ஒரு பிராமணர். சிறையில் மலம் அள்ளும் துப்புரவுப் பணியானது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கைதிகளுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தப் பணியைத் தனக்குத் தருமாறு கேட்டார் அப்பாசாகேப். சிறை அலுவலர்கள் மறுத்தனர். மலம் அள்ளும் பணியைத் தனக்குத் தர வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார் அப்பாசாகேப்.

அப்போது யெரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் காந்தி. அவர் காதுக்குப் பிரச்சினை சென்றது. அப்பாசாகேப்பின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஐஜி கர்னல் ஈ.ஈ.டோயலுக்கு டிசம்பர் 3, 1932 அன்று கடிதம் எழுதினார் காந்தி. இதுபற்றி அதே காலகட்டத்தில் அம்பேத்கர் எழுதுகிறார்: “யெரவாடா சிறையிலிருந்து காந்தி எழுதிய கடிதங்களை ‘டெய்லி ஹெரால்டு’ பத்திரிகையில் படித்தேன். காந்தியின் நிலைப்பாடு சரியானது, பிரிட்டிஷ் அதிகாரிகளின் நிலைப்பாடோ தவறானது. ஒரு சாதியின் மீது மட்டும் பாரம்பரியமாக ஒரு தொழிலை எப்படித் திணிக்க முடியும்?”

தீண்டாமைக் கோயிலே வேண்டாம்

பூரி ஜெகந்நாதர் கோயிலில் தலித் மக்களுக்கு அனுமதியில்லை என்று கேள்விப்பட்டதும் ‘இந்தக் கோயிலின் கதவுகள் தலித் மக்களுக்குத் திறக்காது என்றால், எனக்கும் திறக்க வேண்டியதில்லை’ என்று கோபத்துடன் அந்தக் கோயிலைப் புறக்கணித்தவர் காந்தி. அதை மட்டுமல்ல, எல்லாக் கோயில்களையும்தான்.

இப்படி இருக்கும்போது 1938-ல் ஒரிஸாவில் காங்கிரஸின் வருடாந்திர உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. காந்தியுடன் கஸ்தூர்பா, காந்தியின் செயலர் மகாதேவ் தேசாய், தேசாயின் மனைவி, குழந்தை நாராயண் ஆகியோரும் சென்றிருந்தனர். காந்திக்குத் தெரியாமல் கஸ்தூர்பாவும் தேசாயின் மனைவியும் நாராயண் தேசாயை அழைத்துக்கொண்டு ஜெகந்நாதர் கோயிலுக்குச் செல்கிறார்கள்.

அவர்கள் கோயிலை நெருங்குகையில் 12 வயதுச் சிறுவன் நாராயண் தேசாய் அவர்களைக் கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று தடுக்கிறான். ‘பாபு (காந்தி) நம்மை இதற்கு அனுமதிக்க மாட்டார். ஏனெனில், இந்தக் கோயில் தலித் மக்களை அனுமதிக்காது என்பதால் இது புனிதம் வாய்ந்த கோயில் இல்லை’ என்று தடுக்கிறான். மீறிச் சென்றவர்கள் தங்குமிடம் திரும்பியதும், கடும் கோபம் கொள்கிறார் காந்தி. இந்தச் சம்பவத்தைப் பற்றி ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதும் மகாதேவ் தேசாய், ‘கஸ்தூர்பாவும் என் மனைவியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சேவையில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் பூரி கோயிலுக்குச் சென்றது அதர்மமே’ என்கிறார்.

சாதி இந்துக்கள் ஜெனரல் டயர்கள்

ஆதிக்க சாதி இந்துக்களை ஜெனரல் டயருடன் ஒப்பிட்டார் காந்தி.  “தங்களுக்குள் ஒரு பெருந்திரள் மக்களை அடிமைகளைப் போல் நடத்தும் இந்துக்களுக்கு ஆங்கிலேயர்களின் மீது குறை சொல்லும் உரிமை கிடையாது.”

எந்தத்  தொழில்களை  வைத்து சாதியம்  குறிப்பிட்ட சமூகங்களை இழிவுக்கு உள்ளாக்கியதோ அந்தத் தொழில்களை எல்லோரையும் செய்ய வைத்தவர் காந்தி. தன் வீட்டுக் கழிப்பறையைத் தானே சுத்தம் செய்துகொள்வதிலிருந்துதான் சாதியத்துக்கு எதிரான போராட்டம் தொடங்க முடியும். அந்தப் போராட்டத்தை காந்தி அளவுக்குத் தீவிரமாகச் செய்தவர்கள் யாரும் இல்லை. காந்தியின் ஆசிரமத்தில் எல்லோரும் எல்லா வேலைகளும் செய்ய  வேண்டும். நவீனக் கழிப்பறைகள் இல்லாத காலம் அது. ஒருமுறை வினோபா பாவே மலம் அள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்து கஸ்தூர்பா துடித்துப்போய், ‘ஒரு பிராமணப் பிள்ளை மலம் அள்ளலாமா?” என்று கேட்டிருக்கிறார். அப்போது காந்தி  கேட்டார், “பிராமணர்கள் மலம் அள்ளு வதை விடச் சிறந்தது எதுவாக இருக்க முடியும்?”

அது மட்டுமல்ல, ஒருகட்டத்தில் சாதிமறுப்புத் திருமணத்தில் மட்டுமே தான் கலந்துகொள்ளப்போவதாக காந்தி அறிவித்தார். அதிலும் குறிப்பாக மணப்பெண் ஆதிக்க சாதியாகவும் மணமகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

ஏன் கொல்லப்பட்டார்?

இதெல்லாம் சில துளிகள்தான். காந்தி இந்தியாவுக்குத் திரும்பியதிலிருந்து சனாதனியும் மதவெறியாளனுமான ஒருவனால் சுட்டுக்கொல்லப்படும் வரையிலான 33 ஆண்டுகளில் தேச விடுதலையைவிட அதிக முக்கியத்துவத்தைத் தீண்டாமை ஒழிப்புக்கே கொடுத்தார் என்று இன்று திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய நிலை துயரமானது. ஏனெனில், சிறுபான்மையினர் நலனுக்காக காந்தி செயல்பட்டார் என்பதற்காக மட்டுமே அவர் கொல்லப்படவில்லை; சனாதனத்தின் மீதான அவரது தாக்குதலும் அவரது படுகொலைக்கு முக்கியமான காரணம்.  யாரெல்லாம் கொடுமைகளுக்குக் காரணமோ அவர்களின் மனசாட்சியை நோக்கி காந்தி பேசினார். அப்படிப் பேசி அவர்களின்  தவறுகளை அவர்களுக்கே உணர்த்தினார். அம்பேத்கரும் பெரியாரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையே பேசினார்கள் என்றால், காந்தியோ பாதிப்புக்கு உட்படுத்தியவர்களிடமும் பேசினார்.

தீண்டாமை என்பது பேரெதிரி. காலம் முழுமைக்கும் அதற்கு எதிராக ஒரு சமூகம் உள்ளும் புறமுமாய் வீரியத்துடன் போராட வேண்டியிருக்கிறது. காந்தி விட்டுச்சென்ற போராட்டக் களம் காத்திருக்கிறது!

-ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x