Published : 29 Oct 2018 09:13 AM
Last Updated : 29 Oct 2018 09:13 AM
மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி உருவானது, அதன் நோக்கங்கள் – செயல்பாடுகள் என்ன, அது எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்ற கதை இந்தியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, சுவாரஸ்யமானது.
எப்படி உருவானது சிபிஐ?
மிக முக்கியமான ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், முறைகேடுகள், பயங்கரவாதச் செயல்கள் போன்றவற்றை விசாரிக்கும் நாட்டின் முன்னணி விசாரணை நிறுவனம், ‘மத்தியப் புலனாய்வு அமைப்பு’ (சிபிஐ). இரண்டாவது உலகப் போர் சமயத்தில், போருக்குத் தேவையான கொள்முதல்களில் லஞ்சம், இதர முறைகேடுகள் நடந்ததால் அரசு ஊழியர்களை விசாரிக்கத் தனி அமைப்பாக ‘சிறப்பு போலீஸ் பிரிவு’ ஒன்று 1941-ல் ஏற்படுத்தப்பட்டது. அதுவே 1.4.1963-ல் உள்துறை அமைச்சகத் தீர்மானத்தால் ‘சிபிஐ’ என்ற புதிய பெயரால் அழைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது.
சிபிஐ இயக்குநர் தேர்வு எப்படி?
மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி, சிபிஐ அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்படுவார். இவருடைய பதவிக் காலம் இரண்டாண்டுகள். ஊழல் கண்காணிப்பு, விழிப்புணர்வுத் துறைச் சட்டப்படிதான் சிபிஐ தலைமை இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு, சிபிஐ தலைமை இயக்குநரைத் தேர்வுசெய்கிறது. அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லாத சூழலில், அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் உறுப்பினராக உரிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டுமானம் எப்படி?
சிபிஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வராது. பணியாளர் நலத் துறையின் கீழ்தான் வருகிறது. கடின உழைப்பு, நடுநிலைமை, நேர்மை ஆகியவை சிபிஐயின் லட்சியங்கள். தலைமையகம் டெல்லியில் இருக்கிறது. இதன் சார்பு அமைப்பான சிபிஐ அகாடமி என்ற பயிற்சிப் பிரிவு உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ளது. 2017 மார்ச் 1 நிலவரப்படி இந்த அமைப்புக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 7,274. நிரப்பப்பட்ட இடங்கள் 5,685. காலியிடங்கள் – 1,589 (21.84%).
சிபிஐ அதிகாரிகள் தேர்வு எப்படி?
சிபிஐயில் தலைமை இயக்குநர் தவிர, உள்ள இதர அதிகாரப் பணியிடங்களுக்கு ஐபிஎஸ், ஐஆர்எஸ் துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். தவிர, மாநிலக் காவல் துறைகளிலிருந்தும் வருமானவரித் துறை, சுங்கத் துறைகளிலிருந்தும் அயல்பணி அடிப்படையில் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். பெரும்பாலானவர்கள் ‘எஸ்எஸ்சி’ என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பொதுத் தேர்வு நடத்தி வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
பணிப் பிரிவுகள் என்னென்ன?
ஊழல் விசாரணை, சிறப்புக் குற்றச் செயல்கள், பொருளாதாரக் குற்றங்கள், கொள்கை – சர்வதேச ஒத்துழைப்பு விவகாரங்கள், சிபிஐ நிர்வாகம், வழக்கு தொடுப்பதற்கான இயக்ககம், மத்திய தடயவியல் ஆய்வுக்கூடம் என்று ஏழு பெரும் பிரிவுகள் சிபிஐக்குள் உள்ளன.
சிபிஐயின் நிறுவனத் தலைவர் யார்?
சிறப்பு போலீஸ் பிரிவாக இருந்தபோது, 1955 - 1963 காலகட்டத்தில் செயல்பட்டவர் டி.பி.கோலி. அவரே சிபிஐயின் முதல் தலைமை இயக்குநராகவும் 1963-1968 காலகட்டத்திலும் தொடர்ந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் எஃப்.வி.அருள், சி.வி.நரசிம்மன், டி.ஆர்.கார்த்திகேயன், ஆர்.கே.ராகவன் ஆகியோர் சிபிஐ இயக்குநர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர்.
சிபிஐயின் சிறப்பதிகாரம் என்ன?
தேர்தல் ஆணையம்போல அரசியலமைப்புச் சட்டரீதியிலான உருவாக்கத்தைப் பெற்றதல்ல சிபிஐ. தன்னாட்சி, சுதந்திரம் என்றெல்லாம் பேசப்பட்டாலும், பெரும்பாலும் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே அது செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு முக்கியமான காரணம் இதுவே. எனினும், சிபிஐ பல சிறப்பதிகாரங்களைப் பெற்றிருக்கிறது. ஓர் உதாரணம், சிபிஐ விவகாரங்களைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியாதபடி இது விலக்கு பெற்றுள்ளது. விசாரணையை எல்லாம் ரகசியமாக முடித்துவிட்டு, கைகளில் துருப்புச் சீட்டுகள் கிடைத்த பின் வெளிப்படையான விசாரணையைத் தொடங்குவது சிபிஐயின் உத்திகளில் ஒன்று.
பெரிய குற்றச்சாட்டு என்ன?
மாநில அரசு எப்படிக் காவல் துறையை ஆட்டுவிக்கிறதோ, அப்படி மத்திய அரசின் ஆட்டுவிப்புக்கு ஏற்ப சிபிஐ ஆடும் என்பதுதான்.முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, லாலு பிரசாத், முலாயம் சிங், மாயாவதி போன்ற பலர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்த விதம் இக்குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் விதத்திலேயே இருந்தன. பாஜக தலைவர் அமித் ஷா சம்பந்தப்பட்ட சோராபுதீன் என்கவுன்டர் வழக்கு இந்த ஆட்சியில் அந்தக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வழக்குகளில் ஒன்று.
தீர்வு என்ன?
சிபிஐ அமைப்பின் தன்னாட்சி, சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அரசியலமைப்புச் சட்டரீதியிலான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். ஆளுங்கட்சியின் அழுத்தங்களிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டும்.
- வ.ரங்காசாரி,
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT