Published : 05 Oct 2018 09:18 AM
Last Updated : 05 Oct 2018 09:18 AM
பெரியாரின் நூற்றாண்டு விழா எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் விதமாக ஒரு முக்கியமான நடவடிக்கையை எம்ஜிஆர் எடுத்தார். “தமிழ்நாட்டின் சாலை, தெருப் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும்” என அறிவித்தார் எம்ஜிஆர். 1978 அக்டோபர் 3 அன்று இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டது. சாலை, தெருப் பெயர்களிலிருந்து சாதிப் பின்னொட்டுகள் நீக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பின்னொட்டுகள், பெரியாரால் நீங்கின என்றால், சாலைகள், தெருக்களின் பெயர்களின் பின்னால் இருந்த சாதிப் பின்னொட்டுகள் எம்ஜிஆரால் நீங்கின என்பது வரலாறு. ஆனால், தொடர் கவனம் செலுத்தப்படாததால் காலப்போக்கில் மீண்டும் பெயர்ப் பலகைகளில் சாதிப் பெயர்கள் முளைத்துவிட்டன.
இப்படிப்பட்ட சூழலில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களின் பெயர்ப் பலகைகளில் இடம்பெற்றிருந்த சாதிப் பெயர்களை நீக்குமாறு தொடரப்பட்ட வழக்கில் 1978 அரசாணையை உடனே நடைமுறைப்படுத்துமாறு ஆட்சியாளர்களுக்கு அது உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், சாதிப் பின்னொட்டுகள் நீக்கப்பட்ட புதிய பெயர்ப் பலகைகளை தேசூர் பேரூராட்சி நிர்வாக அலுவலர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு தேசூருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஊர்களுக்கும் பொருந்தும். சமூக நலச் செயல்பாட்டாளர்கள் இந்தத் தீர்ப்பின் நகலை இணைத்து ஒவ்வொரு ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அலுவலர்களிடமும் மனு அளிக்கலாம். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்குத் தொடரலாம்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படும் இன்றைய சூழலில், தமிழக அரசு ஒரு காரியம் செய்ய வேண்டும். எம்ஜிஆர் முன்னெடுத்த சாதி ஒழிப்பு அரசாணையை விரிவாக்கி, கல்வி நிறுவனங்களின் பெயர்களிலும் சாதிப் பெயர்களை நீக்குவதற்கான அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும். ஏனைய அரசியல் கட்சிகள் இதை வலியுறுத்த வேண்டும்!
-ரவிக்குமார், எழுத்தாளர்,
வழக்கறிஞர்.
தொடர்புக்கு: adheedhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT