Published : 04 Oct 2018 10:36 AM
Last Updated : 04 Oct 2018 10:36 AM
சமீபத்தில், புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கும் கைதிகளின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. அதையொட்டி குறிப்பிட்ட கைதிகள் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர். பணவசதியும் அரசியல் அதிகாரச் செல்வாக்கும் கொண்ட சில கைதிகள் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. பின்னர், இந்தியச் சிறைகளின் உண்மையான நிலையும் மீண்டும் இந்தியப் பொதுமறதியின் புதைசேற்றுக்குள் புதைந்துவிடுகிறது. ஊருக்கு வெளியே இருக்கும் குடிசைப் பகுதிகளைப் போலவே இந்தியச் சிறைகளின் நிலையும் பொதுவில் அதிகம் பேசப்படாத ஒன்றாகவே இருந்துவருகிறது.
குற்றம்செய்த ஒருவரைச் சிறையில் வைப்பது என்பது தண்டனையாகப் பார்க்கப்பட்ட காலம் போய்விட்டது. ஒரு மனிதனின் குற்ற இயல்பை ஆராய்ந்து புரிந்துகொண்டு நெறிப்படுத்தும் இடமாகச் சிறைகள் இருக்க வேண்டுமென்ற அணுகுமுறை மேற்கத்திய நாடுகளில் தோன்றி வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. இது அங்குள்ள சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. சிறைக் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும்வண்ணம் சிறந்த முறையில் கல்வியும், தொழிற்பயிற்சிகளும் அளித்து சிறையை நடத்தும் செலவுகளைக் கைதிகளே நிர்வகிக்கிறார்கள். அமெரிக்காவில் தனியார் சீர்திருத்த மையங்கள், சிறைகளில் உள்ள கைதிகள் சேர்ந்து 4.8 பில்லியன் மதிப்புள்ள தொழில்துறையின் பங்காளிகளாக உள்ளனர். அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள சிறைகளில் ‘ஃபுட் பார் ஃப்ரீடம்’ என்ற பெயரில் சிறைக்கைதிகள் அங்குள்ள சமையல் கூடங்களில் சப்பாத்தி, பிரியாணி ஆகியவற்றைத் தயாரித்து விற்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.3 கோடி வருவாயை அரசுக் கருவூலத்துக்கு இத்திட்டம் பங்களிக்கிறது.
பொதுவாகவே, இந்திய சிறைகள் தனது கொள்ளளவைவிட ஆறு மடங்கு அதிகமான கைதிகளைக் கொண்டு மூச்சுத்திணறலை ஏற்படுத்துபவையாக உள்ளன. சிறையிலேயே இறந்துபோகும் கைதிகளில் 70% பேர் குணப்படுத்தக்கூடிய டைபாய்ட், மலேரியா, காசநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். குற்றங்களைச் செய்ததாகக் கைதுசெய்யப்பட்ட விசாரணைக் கைதிகளாக இந்தியச் சிறைகளில் இருப்பவர்கள் மட்டும் 67% பேர். இவர்களில் பலர் ஆண்டுக்கணக்காக விசாரணைக்காகக் காத்திருப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்கள், முஸ்லிம்கள், பழங்குடியினர். இடநெருக்கடி, வன்முறை, சித்ரவதையோடு சிறை நிர்வாகத்துக்கு ஆகும் அதிகப்படியான செலவுகளும் இந்தியாவின் குற்ற நீதிமுறைக்குச் சவால் விடுவதாக உள்ளன. சிறையில் உள்ள ஒரு கைதிக்கு அரசு செலவு செய்யும் பணம் ஆண்டுக்கு ரூ.30,000. ஆனால், இந்தியச் சிறைகளோ குற்றம் செய்தவர்களைச் சீர்திருத்தும் இடங்களாக இல்லை.
சிறை நிர்வாகத்தில் தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிப்பது அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பெரும் பலன்களை அளித்துள்ளன. அமெரிக்காவில் 79 சிறைகளில் 88 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ப்ளூசிப் தயாரிப்பு நிறுவனங்களான மோட்டோராலோ, ஐபிஎம், செவ்ரான் போன்ற பெருநிறுவனங்கள் சிறைக்கைதிகளின் சேவைகளை ஊக்குவிக்கின்றன. சாதி, சமயம், பொருளாதார அடிப்படையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் குற்றங்களுக்கும் நேரடியான தொடர்புள்ள இந்தியாவில் சிறைக் கைதிகளின் சுயகௌரவம், மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும் சிறைக்கு வெளியே வரும்போது படைப்பூக்கமும் வேலைவாய்ப்பு சார்ந்த நம்பிக்கையுடன் வருவதற்கும் இது உதவும். சிறைவாசிகள் ஆரோக்கியம், கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும்; சிறைச்சூழலும் மேம்படும். வழக்கறிஞர் கட்டணத்தைக்கூடச் செலுத்த முடியாமல் சிறைக்குள்ளேயே கேட்பாரின்றி மரணமடையும் நிலை சிறைக் கைதிகளுக்கு ஏற்படாது.
- ஷங்கர்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT