Published : 10 Oct 2018 09:29 AM
Last Updated : 10 Oct 2018 09:29 AM
“மோகன், சூரியன் தெரிகிறதா என்று பார்த்துவிட்டு வா!” என்று புத்லிபாய் குரல் கொடுத்தார். மோகன் என்று அழைக்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற சிறுவன் உற்சாகமாய் வெளியில் ஓடினான். அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவனது அக்காவும் அண்ணனும் ஓடிவந்தார்கள். காலையிலிருந்து இப்படிப் பலமுறை ஓடிவந்து வானத்தை வெறித்துப் பார்ப்பதும், சூரியன் தெரியவில்லை என்று அம்மாவிடம் போய்ச் சொல்வதுமாகவே அந்தப் பிள்ளைகள் இருந்தார்கள். அதை ஒரு விளையாட்டு போலவே அந்தப் பிள்ளைகள், குறிப்பாக மோகன், நினைத்ததால் அலுத்துக்கொள்ளாமல் அதைச் செய்தார்கள்.
அது ஒரு மழைக்காலம். மொத்த நாளிலும் மேகங்களின் ஆதிக்கத்துக்கு இடையே சூரியன் நினைத்தால் எப்போதாவதுதான் தென்படும். அப்படி சூரியன் எட்டிப்பார்க்கும் தருணத்தைத் தாங்களும் எப்படியாவது எட்டிப்பார்த்துவிட வேண்டும் என்று அந்தப் பிள்ளைகள் முயன்றுகொண்டிருந்தார்கள்.
கருமேகம் ஒன்றின் பின்னால், மூடிய கோழி ரெப்பைக்கு உள்ளே வெண்விழியின் தடம் தெரிவதுபோல், சூரியன் மறைந்திருப்பது தெரிந்தது. சில நிமிடங்களில், அந்த மேகத்துக்கு இடையே இருந்த சிறு இடைவெளியில் மெலிதாகத் தலையை நுழைத்து, தன்னை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவர்களைப் பார்த்து சூரியன் கண்ணடித்தது. “அம்மா, சூரியன் தெரிகிறது!” என்று விளையாட்டில் தானே வெல்ல வேண்டும் என்ற ஆவலில் வெகுவேகமாக வீட்டுக்குள் ஓடிவந்து அறிவிக்கிறான் மோகன்.
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மரபில் ஊறிய பெண்மணியான புத்லிபாயால் மோகனைப் போல ஓட முடியாது. மெதுவாக வெளியே வந்து பார்க்கிறார். அச்சோ, மறுபடியும் மேகத்தின் பின்னால் சூரியன் மறைந்துவிட்டிருந்தது.
“அதனாலென்ன, இன்று நான் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நினைக்கிறார்போல” என்று சிரித்த முகம் மாறாமல் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் புத்லிபாய்.
சூரியனின் கண்ணாமூச்சி விளையாட்டில் தான் பெற்ற வெற்றி இப்படி வீணாகப் போய்விட்டதே என்ற வருத்தத்தில் மோகனின் முகம் வாடிப்போய்விட்டது.
புத்லிபாய் கடுமையான விரதி. சதுர்மாசம் என்று அழைக்கப்படும், தொடர்ச்சியாக மழை பெய்யும் நான்கு மாதங்களிலும் கடுமையாக உண்ணாவிரதம் இருப்பார். எவ்வளவு உண்ணாவிரதம் இருந்தாலும் அது போதாது என்றே நினைத்துக்கொள்வார். ஒரு நாளைக்கு ஒரு முறை என்பதிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள், சூரியன் தெரிந்தால்தான் சாப்பாடு என்றெல்லாம் விரதம் இருப்பார். மழைக்காலத்தில் சூரியன் எப்போதாவதுதான் தெரியும் என்பதால், குழந்தைகளை வெளியே போய்ப் பார்த்துவிட்டு வரச்சொல்வார். சூரியன் தெரியவில்லை என்பதால் வருத்தப்படவும் மாட்டார்.
காந்தியின் குடும்பம் ‘பனியா’ என்ற சமூகத்தைச் சேர்ந்தது. இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வணிகத்தில் கெட்டிக்காரர்கள். கத்தியவார் சமஸ்தானத்தில் மோகனின் பரம்பரையில் மூன்று தலைமுறையினர் பிரதம மந்திரி பொறுப்பை வகித்திருக்கிறார்கள்.
போர்பந்தரிலுள்ள காந்தி பிறந்த வீடு மூன்று தளங்களைக் கொண்டது. செல்வத்துக்குக் குறைவில்லை என்றாலும், அதை அதிகம் பகட்டிக்கொள்ளாதவர்கள். குறிப்பாக, கரம்சந்த் காந்தி நான்காவதாகத் திருமணம் செய்துகொண்ட புத்லிபாயும் எளிமையானவரே.
அக்டோபர் 2, 1869-ல் கரம்சந்த் காந்தி – புத்லிபாய் தம்பதியருக்குப் புதல்வராகப் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அந்தக் குடும்பத்துக்கு நான்காவது பிள்ளை. கரம்சந்த் காந்தியைவிட 17 வயது இளமையானவர் புத்லிபாய். அதேபோல, அப்பாவுக்கும் மகனுக்குமான வயது வித்தியாசம் 47. பிற்கால காந்தியைப் புரிந்துகொள்ள இந்தப் பின்னணித் தகவல்கள் அவசியம்.
காந்தி தன் வாழ்நாள் முழுவதும் உடலுடனும் உடல் இச்சைகளுடனும் போர் புரிந்துகொண்டிருந்தார் என்றால் அதற்கான உந்துதலை புத்லிபாயிடமிருந்து பெற்றார் என்பதற்கு மேற்கண்ட சம்பவத்தை உதாரணமாகக் கொள்ளலாம். உணவு, பாலுணர்வு போன்ற விஷயங்களில் முழுக் கட்டுப்பாடும், பற்றின்மையும் கொண்டிருந்தால் உடலை அடக்கிவிடலாம் என்றும், தன் உடலின் மீது கட்டுப்பாடு கொண்ட ஒருவரே தனது சமூகத்தின் மீதும் கட்டுப்பாடு செலுத்தலாம் என்றும் காந்தி நம்பியதற்கு புத்லிபாயும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்.
கூடவே, காந்தியின் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது இந்தியாவின் பன்மைத்தன்மையை, முக்கியமாக மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை காப்பாற்றத் துடித்தது. அதற்கும் புத்லிபாயிடம் விதை இருந்திருக்கிறது. புத்லிபாய் தீவிர வைஷ்ணவராக இருந்தாலும் தன் வீட்டுக்கு சமணத் துறவிகளை வரவைத்திருக்கிறார். பிரணமி என்ற இந்து சமயப் பிரிவின் பாலும் புத்லிபாய்க்கு ஈடுபாடு இருந்தது. போர்பந்தரில் உள்ள பிரணமி கோயிலுக்கு புத்லிபாய் அடிக்கடி செல்வார். அங்கே கடவுள் சிலைகளோ சித்திரங்களோ இருக்காது. மாறாக, இந்து மதத்தின் புனித நூல்களிலிருந்தும் குரானிலிருந்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். அந்தப் பிரிவினர், மற்ற மதங்களின் நூல்களில் தங்களுக்கு ஏற்புடையவற்றைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்.
மதங்கள் மீது புத்லிபாய் சற்று விசாலமான பார்வை கொண்டிருந்தாலும் சாதியைப் பொறுத்தவரை அவர் இறுக்கமான பெண்மணியே.
அவர்கள் வீட்டுக்கு வரும் துப்புரவுத் தொழிலாளியின் பையன் உக்காவுடன் மோகன் விளையாடுவது வழக்கம். உக்காவைத் தொடக் கூடாது என்று மோகனை புத்லிபாய் கண்டித்திருக்கிறார். தீண்டாமையை மதம் அனுமதிக்கவில்லை என்று மோகன் கருதினான். “ஏனென்றால், தற்போது ‘தீண்டப்படாதவர்’ என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்த ஒரு படகோட்டிதானே ராமாயணத்தில் ராமன் ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்தார்” என்று தன் தாயிடம் மோகன் கேட்டிருக்கிறான். ‘கடவுள் எல்லோருள்ளும் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று சொல்லப்படும்போது, உக்காவை மட்டும் தொடக் கூடாது என்கிறார்களே?” என்ற கேள்வியும் அவருக்குள் எழுந்திருக்கிறது. தன் தாயிடம் கேட்ட கேள்விதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நோக்கி மோகன் எடுத்துவைத்த முதல் அடி. தாய் மீதான பணிவைப் போலவே அவரிடம் காட்டிய எதிர்ப்பும் மோகனுடைய ஆளுமையைச் செதுக்கியது.
வீட்டுக்குள்ளிருந்த மோகன்கள் உலகு போற்றும் காந்திகளாக இப்படித்தான் ஆகிறார்கள்!
(காந்தியுடன் பயணிப்போம்... )
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT