Published : 08 Oct 2018 09:06 AM
Last Updated : 08 Oct 2018 09:06 AM
ஆசிய சிங்கக் குடும்பத்தில் 23 சிங்கங்கள் 20 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களையும் வனவிலங்கு ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. குஜராத் மாநிலத்தின் கிர் காடுகளின் அடையாளங்களில் ஒன்று அங்கு வாழும் ஆசிய சிங்கங்கள். ஆப்பிரிக்க சிங்கங்களின் துணைக் குடும்பமாகக் கருதப்படும் ஆசிய சிங்க இனம், ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள் விலங்கியல் நிபுணர்கள். எனவே, இந்த சிங்கக் குடும்பத்துக்கு இந்திய சிங்கங்கள், பாரசீக சிங்கங்கள் என்ற பெயர்களும் உண்டு. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை காலப்போக்கில் வெகுவாகக் குறைந்து, அபாயகரமான அளவை எட்டியதைத் தொடர்ந்து, அவை அழிந்துகொண்டிருக்கும் விலங்கினங்களில் ஒன்றாக,
2000-ல் அட்டவணைப்படுத்தப்பட்டது.
கேனைன் டிஸ்டம்பர் வைரஸ், பாப்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகியவற்றின் தாக்குதலே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று தெரிகிறது. கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் என்பது நாய்களின் குடல் பகுதி, சுவாச மண்டலம், நரம்பு மண்டலம் மற்றும் கண்களின் வெண்படலத்தைப் பாதிக்கும் நோய்க்கிருமியாகும். பாப்ஸியா ஒட்டுண்ணிகள் ரத்த சிவப்பணுக்களில் பாதிப்புகளை ஏற்படுத்துபவை.
2015-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிர் காடுகளில் 523 சிங்கங்கள் இருந்தன. 2018-ல் அந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்திருக்கிறது என்று கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி. அரசு எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள், வனவிலங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள், திறமையான ஊழியர்கள் என்று எண்ணிக்கை உயர்ந்ததற்குக் காரணங்களையும் அடுக்கியிருந்தார். இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 2016-ல் 104 சிங்கங்களும் 2017-ல் 80 சிங்கங்களும் இறந்துவிட்டன.
2011-லேயே ஒரு சிங்கத்தின் மரணத்துக்கு ஆடுகளைத் தாக்கும் பி.பி.ஆர்.எஸ். என்ற வைரஸின் தாக்குதலே காரணம் என்று விலங்கின நோய்கள் ஆராய்ச்சி மற்றும் நோயறிதலுக்கான மையம் (சி.ஏ.டி.ஆர்.ஏ.டி), இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.வி.ஆர்.ஐ) ஆகியவை எச்சரித்தன. அந்த எச்சரிக்கைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதையே தற்போதைய தொடர் மரணங்கள் காட்டுகின்றன.கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் தாக்குதலிலிருந்து சிங்கங்களைப் பாதுகாப்பதற்காக ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் செரெங்கேட்டி தேசியப் பூங்காவில் 30 ஆயிரம் நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. கிர் காடுகளில் அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை. மேலும் சிங்கங்களின் இரையான ஆடுகளையும், சக விலங்கினங்களான சிறுத்தைப் புலிகள், கழுதைப் புலிகள் ஆகியவற்றையும்கூட நோய்க் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
மிகப் பெரிய ஒரு செயல்திட்டத்தை உடனடியாக மேற்கொண்டால்தான் அரிய வகை சிங்கங்களைப் பாதுகாக்க முடியும். முதற்கட்டமாக, சிங்கங்களைக் காடுகளிலிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான தொலைவில் அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள். சிங்கங்களின் மரணத்துக்குக் காரணம் வைரஸ் தாக்குதல்கள் என்றாலும் மிக முக்கியமான காரணம் பருவநிலை மாறுதல்களும் அவற்றை எதிர்கொண்டு வாழும் ஆற்றலை வனவிலங்குகள் இழந்துகொண்டிருக்கின்றன என்பதும்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT