Published : 09 Oct 2018 09:06 AM
Last Updated : 09 Oct 2018 09:06 AM
துணிச்சலும் தீர்க்கமும் நிறைந்த பார்வை. அடர்ந்த கேசத்தை மறைக்கும் தொப்பி. உறைந்திருக்கும் புரட்சிப் புன்னகை. சே குவேரா என்றாலே நினைவுக்கு வரும் ஓவியம் இதுதான். இதை வரைந்தவர் அயர்லாந்து ஓவியர் ஜிம் ஃபிட்ஸ்பேட்ரிக். தனது 16-வது வயதில் சே குவேராவை நேரில் சந்தித்திருக்கிறார் ஜிம். 1962-ல் அயர்லாந்தின் கில்கி நகரில் ஒரு மதுபான விடுதியில் ஜிம் தற்காலிகமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சே குவேரா பயணம் செய்த விமானம், மூடுபனி காரணமாக அயர்லாந்தில் தரையிறக்கப்பட்டபோது, ஜிம் இருந்த மதுபான விடுதிக்கு சே வந்தார். ஜிம்மிடம் உரையாடியபோது, “என் முன்னோர்கள் அயர்லாந்துக்காரர்கள்” என்று சே குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டன் பேரரசை வீழ்த்திய அயர்லாந்துப் புரட்சி குறித்த பெருமிதம் சேவுக்கு எப்போதுமே உண்டு. அந்தப் புரட்சி உலகப் போராட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாகக் கருதப்படுகிறது.
அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பொலிவியக் காடுகளில் பிடிபட்ட சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் காலகட்டத்தில்தான் சேவின் அதிகாரபூர்வ ஒளிப்படக் கலைஞர் ஆல்பெர்டோ கோர்டா எடுத்த சேவின் புகழ்பெற்ற படம் ஜிம் பார்வைக்கு வந்தது. அதை ஓவியமாக்க முடிவெடுத்தார். ‘லைன் டிராப்‘ எனும் ஓவிய முறையின் அடிப்படையில் சே குவேராவின் உருவத்தைக் கறுப்பு நிறத்திலும், சே தன் வாழ்நாள் முழுவதும் முன்னிறுத்திப் போராடிய கம்யூனிசத்தின் நிறமான சிவப்பைப் பின்னணி நிறமாகவும் கொடுத்தார். சே அணிந்திருக்கும் ‘பிரெட்’ வகை வட்டத் தொப்பியில் மஞ்சள் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டிருந்தது.
கோர்டாவின் ஒளிப்படத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்றாலும், மிக நுணுக்கமான மாற்றங்களை அந்த ஓவியத்தில் ஜிம் பிரதிபலித்திருந்தார். ஓவியங்களுக்கே உரிய தனித்தன்மையும் சட்டென்று கவரும் தன்மையும் அந்த ஓவியம் புகழ்பெறக் காரணமாக அமைந்தன. அந்தக் காலத்தின் அடையாளமாக மட்டுமில்லாமல், புரட்சி என்பதன் அடையாளமாகவும் அது திகழ்கிறது. மனித வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய 10 ஓவியங்களில் இந்த ஓவியமும் ஒன்று என்கிறார் ஆக்ஸ்போர்டு கலை வரலாற்றாளர் மார்டின் கெம்ப்.
தன் ஆதர்ச நாயகனின் படத்தை நண்பர்கள் மூலமாக உலகெங்கும் இலவசமாகப் பரப்பினார் ஜிம். இன்றைக்கும் புத்தக அட்டைகள் (புக் மார்க்) முதல் டிஷர்ட்கள்வரை அந்த ஓவியம் பரவிக்கொண்டே இருக்கிறது. எங்கெல்லாம் ஒடுக்குமுறை நிகழ்கிறதோ, அங்கெல்லாம் எதிர்ப்புணர்வு வெளிப்பட வேண்டுமென சே குவேரா நினைத்தார். உலகெங்கும் எதிர்ப்பின் வண்ணங்களாக அடையாளப்படுத்தப்படும் கறுப்பு, சிவப்பு வண்ணங்களால் ஆன அவருடைய ஓவியம் காலங்களைக் கடந்தும் தன் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது!
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
அக்டோபர் - 9
சே குவேரா 51-வது நினைவு நாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT