Published : 12 Oct 2018 09:48 AM
Last Updated : 12 Oct 2018 09:48 AM
ஒரு கட்டுரைக்காகத் திடீர் கைது, முன்னுதாரணம் அற்ற நிகழ்வாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 பிரயோகம், ஊடகங்களின் ஒட்டுமொத்த எதிர்க்குரல், நீதிமன்றத்தின் குறுக்கீடு, விடுவிப்பு என்று மீண்டும் பரபரப்பு எல்லைக்குள் வந்திருக்கிறார் ‘நக்கீரன்’ கோபால். ஆளுநர் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரைக்காகக் கைதுசெய்யப்பட்ட விதம் அவரைப் புண்படுத்தியிருந்தாலும், அவரது துணிச்சலை அது துளியும் பாதிக்கவில்லை. ஊடகங்கள் இன்று எதிர்கொள்ளும் மோசமான சூழலை விரிவாகப் பேசினார்.
ஒருவேளை நீதிமன்றம் தங்களை விடுவிக்காமல் இருந்திருந்தால், ‘நக்கீரன்’ முடங்கியிருக்குமா? ஏனெனில், ‘நக்கீரன்’ ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மீது எஃப்ஐஆர் போடப்பட்டிருக்கிறதே?
ஒருவேளை நான் விடுவிக்கப்படவில்லை என்றால், ‘நக்கீரன்’ இதழ் மறுநாள் காலையிலேயே வெளியாகியிருக்கும். அடுத்த இதழ் அதேநாள் மாலையோ, அடுத்த நாள் காலையிலேயோ வந்திருக்கும். இதுபோன்ற பல அடக்குமுறைகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஒருகாலத்தில் தமிழகம் முழுக்க ‘நக்கீரன்’ இதழ்களை ஆட்சியாளர்கள் வாங்கி எரித்ததெல்லாம் உண்டு. நாங்கள் மறுபடியும் இதழ்களை அச்சிட்டு வெளியிட்டோம். மீண்டும் எரித்தார்கள். அவர்கள் எரிக்க எரிக்க, நாங்கள் மீண்டும் மீண்டும் வெளியிட்டுக்கொண்டே இருந்தோம். ஏற்கெனவே ‘பொடா’ வழக்கு வரை நாங்கள் சந்தித்திருக்கிறோம். எனவே, இது கடுமையான தாக்குதல் என்றாலும், புதிதல்ல.
இந்தியாவிலேயே முதன்முறையாக 124-வது சட்டப் பிரிவு உங்கள் மீது போடப்பட்டிருக்கிறது. இது மிகக் கடுமையான நடவடிக்கை அல்லவா?
இந்த சட்டப் பிரிவை – ராஜவிரோதக் குற்றத்துக்கான சட்டப் பிரிவு என்கிறார்கள். ஒரு ஆளுநர் அல்லது உயர் பதவியில் இருப்பவரைப் பணிசெய்யவிடாமல் தடுப்பது - அதாவது, அவரை நேருக்கு நேர் சந்தித்துச் செயல்பட விடாமல் தடுப்பது. கையில் கத்தியுடன் சென்று ‘கொலை செய்துவிடுவேன்’ என்று அவரை மிரட்டுவது, அடிப்பது போன்ற குற்றத்தில் ஈடுபட்டால்தான் இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்த முடியும் என்கிறார்கள். வாய்மொழியாக மிரட்டினால்கூட இந்த சட்டப் பிரிவு பொருந்தாது என்று சொல்கிறார்கள். என்ன கொடுமை என்றால், இன்று வரை ஆளுநர் பன்வாரிலாலை நேரில் ஒருமுறைகூடப் பார்த்திராதவன் நான். விமான நிலையத்தில் என்னை நடத்திய விதமும் ஒரு பயங்கரவாதியை நடத்துவதுபோலவே இருந்தது. கழிப்பறையிலிருந்து வெளியில் வந்த என்னைச் சுற்றிவளைத்துக் கைதுசெய்தார்கள். என் செல்பேசியைப் பறித்துக்கொண்டார்கள். இவ்வளவு கடுமையான சட்டப் பிரிவைப் பிரயோகிப்பது, இந்தக் கைது இவையெல்லாம் ‘நக்கீரன்’ கருத்துச் சுதந்திரத்துக்கு மட்டும் எதிரானது அல்ல. ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களுக்கும் எதிரான, ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல் இது. இந்த விஷயத்தில் ‘இந்து’ ராம் வெகுண்டெழுந்து நீதிமன்றம் வந்து நிற்க இதுதான் முக்கியமான காரணம். இந்த விஷயத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளோடு பொதுச் சமூகமும் நீதிமன்றமும் தார்மிகமாக ஒரே நேர்க்கோட்டில் நின்றதுதான் பெரிய பலம்.
இதுபோன்ற வழக்குகள் பத்திரிகைகளுக்குப் பொருளாதாரரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
ரொம்ப சிரமம். பிரச்சினை என்னவென்றால், ஒரு வழக்கு ஒரு பத்திரிகை நிறுவனத்தைப் பொருளாதாரரீதியாக எப்படி முடக்கும் என்பது நம் பொதுச் சமூகத்துக்குத் தெரியவே தெரியாது. நெல்லை மாவட்டம், வள்ளியூரில் பத்தாண்டுகளாக நடந்தது ஒரு வழக்கு. ஒவ்வொருமுறையும் சென்னையிலிருந்து வள்ளியூர் சென்றுவரும் செலவு, வழக்கறிஞர் கட்டணம் என்று எவ்வளவு செலவாகும் என்று யோசித்துப்பாருங்கள். நூற்றுக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறது ‘நக்கீரன்’. ஒரே விஷயம் மக்களுடைய ஆதரவு. பொருளாதாரரீதியாக நான் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை வழக்குகளில்தான் விட்டிருக்கிறேன்.
இந்த விவகாரத்தைத் தாண்டியும், ‘நக்கீரன்’ பத்திரிகையின் செய்திக் கட்டுரைகள் தனிநபர் எல்லைக்குள் நுழைவதான குற்றச்சாட்டு உண்டு. புலனாய்வு இதழியல் என்றாலும், தனிப்பட்ட விவகாரங்களை எழுதுவதற்கு என்று ஒரு எல்லை இருக்கிறதல்லவா?
எதைத் தனிப்பட்ட விவகாரம் என்கிறீர்கள்? ‘நம்மை ஆளுகின்ற அரசில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும்; திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்’ என்று காந்தி சொல்கிறார். சமூகத்தில் ஒரு தனிமனிதன் தவறிழைப்பதும், பொறுப்பில் இருப்பவர் தவறிழைப்பதும் ஒன்றா? நித்யானந்தா தன்னை முற்றும் துறந்த துறவியாக வெளியே காட்டிக்கொள்கிறார். அவர் ஒரு நடிகையுடன் இருக்கும் வீடியோவை எப்படித் தனிப்பட்ட விவகாரம் என்று சொல்ல முடியும்?
நிர்மலாதேவி ஒரு பேராசிரியை. தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் அவர் பாலியல் பேரம் பேசுகிறார். பெரிய மனிதர்களுக்கு இதில் தொடர்பிருப்பதாகப் பேசுகிறார். இது தனிப்பட்ட விவகாரமா? தமிழ்நாட்டின் கல்வி, தமிழ் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விவகாரம் இல்லையா இது?
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 8 இதழில் முதலில் எழுதினோம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆளுநர் மாளிகைக்கு ஏன் கோபம் வருகிறது? “ஆளுநரை நான்கு முறை சந்தித்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் நிர்மலா தேவி. அதனால், மின்சார வயரைக் கடித்து ராம்குமார் இறந்ததாகச் சொல்லப்பட்டதைப் போல், ஒருநாள் நிர்மலாதேவிக்கும் நடக்கும்” என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. எழுதினோம். இது எப்படி தனிப்பட்ட ஒருவரின் விவகாரம் ஆகும்?
திமுக ஆதரவு நிலை கொண்ட பத்திரிகை ‘நக்கீரன்’ - அதனால்தான் அதிமுக அரசையும் ஆளுநரையும் விமர்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எங்கு தவறு நடந்தாலும் அதை வெளிக்கொண்டுவருவதே ‘நக்கீரன்’ வரலாறாக இருந்திருக்கிறது. தாமிரபரணி படுகொலையைப் பெரிய அளவில் வெளிக்கொண்டுவந்தது யார்? ‘நக்கீரன்’. அன்றைய அரசாங்கத்தையே அது அசைத்தது. அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் மட்டும் எங்கள் மீது 22 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த தூதராக என்னை கருணாநிதி அனுப்பியபோதும்கூட திமுக அரசு போட்ட வழக்குகள் நிலுவையில்தான் இருந்தன. ஒரு பத்திரிகை செய்தி வெளியிடுகிறது என்றால், தவறு நடந்திருக்கிறதா இல்லையா, அதில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பதுதான் பேசப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாட்டு மக்களிடம் இன்றைய ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பேசுங்கள். அவ்வளவு கொந்தளித்திருக்கிறார்கள். அப்படியென்றால், அவர்கள் எல்லாம் திமுககாரர்களா?
ஊடகங்களை அணுகும் விஷயத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் அணுகுமுறையும் ஒன்றுதான் என்று சொல்லலாமா?
அப்படிச் சொல்ல முடியாது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசை எதிர்த்து எழுதினால், பதிலுக்கு அவரும் ‘முரசொலி’யில் எழுதுவார். அப்படித்தான் பெரும்பாலும் நடக்கும். நாங்கள் எதிர்கொண்ட பெரும்பாலான வழக்குகள் அமைச்சர்கள், அந்தந்தத் துறைகள் சம்பந்தப்பட்டவை. அப்படியே வழக்குகள் போடப்பட்டாலும்கூட இப்படி தேச விரோத வழக்கு, ‘பொடா’ வழக்கு என்றெல்லாம் திமுகவினர் போட மாட்டார்கள். தவிர, அதிமுக ஆட்சியில் திரைமறைவுத் தாக்குதல்களும் நடக்கும். அலுவலகத்துக்கு ஆட்டோவில் குண்டர்களை அனுப்புவது, அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவது, பத்திரிகை விற்பனையை முடக்குவது என்று அதற்கெல்லாம் எல்லையே கிடையாது. ஒருகாலத்தில் என் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத அளவுக்குகூட அச்சுறுத்தல் இருந்தது. பத்திரிகைத் தொழில் என்பது இந்நாட்டில் அவ்வளவு எளிதானது அல்ல.
இந்தச் சம்பவம் உங்களை அச்சுறுத்தியிருக்கிறதா?
கூடுதல் துணிச்சலைத்தான் தந்திருக்கிறது. பத்திரிகையாளன் வாயை மூடவே முடியாது. ஏனென்றால், அவன் சமூகத்தின் குரல். நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான், ஒரு சமூகத்தில் ஊடகங்கள் குரல் எவ்வளவு சுதந்திரமாக வெளிப்படுகிறதோ, அவ்வளவுக்கு அந்தச் சமூகம் ஜனநாயகத்தில் முன்னிற்கும். பிரான்ஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு, பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டபோது ஒட்டுமொத்த பிரான்ஸும் ஊடக சுதந்திரத்துக்காகத் திரண்டு நின்றதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஊடகங்களோடு மக்கள் கைகோத்து நின்றால், எவ்வளவு பலமிக்க சக்தியாலும் ஊடகங்களை வீழ்த்த முடியாது.
- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT