Last Updated : 20 Aug, 2014 09:44 AM

 

Published : 20 Aug 2014 09:44 AM
Last Updated : 20 Aug 2014 09:44 AM

வணக்கம் வைகுண்டராஜன்!

கார் புறப்படுகிறது, உலகின் கனிமச் செழிப்பான கடற்கரைப் பகுதியை நோக்கி. கன்னியாகுமரி மாவட்டத்தின் மிடாலத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வரையிலான சுமார் 150 கி.மீ. நீளக் கடற்கரையும் அதை ஒட்டியுள்ள கிராமங்களையும் தொடும் பயணம் இது.

பொதுவாக, இப்படிச் செல்லும்போது பகலில், வரிசையாக ஒவ்வொரு ஊராகச் சென்றுவிட்டு இரவில் திரும்பிவிடுவது வழக்கம். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து மறுநாள் பயணம் தொடங்கும். இந்தப் பயணத்தைப் பொறுத்த அளவில் வேறு மாதிரி திட்டமிட வேண்டியிருந்தது. முதல் நாள் அனுபவங்கள் அப்படி.

ஏ... யாருப்பா நீயீ?

ஊரில் உள்ளவர்கள்தான் கூப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வந்து உள்ளே அழைத்துச் செல்ல அஞ்சுகிறார்கள். "நீங்க எப்படியாச்சும் வீட்டுக்கு வந்துடுங்க... அங்கென எல்லாரையும் கூட்டி வெச்சிருக்கோம்."

பகலில் ஊருக்குள் நுழைவது அத்தனை எளிதாக இல்லை.

"அண்ணாச்சி, கார் கண்ணாடியை ஏத்திவிட்டு, தலையைக் கொஞ்சம் குனிஞ்சுக்குங்க. அங்கம் மரத்தடியில வண்டியை வெச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்குப் பாருங்க... அந்த ஆள் கண்ணுல பட்டோம்... தகவல் போயிடும்... அஞ்சு கிலோ மீட்டருக்கு ஒரு ஆள்னு இப்பிடி நிக்கும். ஊருக்குள்ளேயும் சலூன் கடையில, டீக்கடையிலேன்னு பேசிக்கிட்டு இருக்கற மாதிரி உட்கார்ந்திருக்கும். குனிஞ்சிக்கிடுங்க, குனிஞ்சுக்கிடுங்க..."

இப்படியெல்லாம் குனிந்து, மறைந்து சென்றும் பகல் பயணம் வேலைக்கு ஆகவில்லை. "ஐயா, எங்க ஊருல எந்தப் பிரச்சினையும் இல்ல; நீ ஒம் சோலியைப் பாத்துக்கிட்டுப் போய்யா... வெத்து மண்ணை எடுத்து வித்து, பொழப்பு கொடுக்குற மவராசனைப் போட்டுக்கொடுக்க வந்துட்டியளா?"

கூப்பிட்டுச் சென்றவர்கள் கும்பிட்டு, மீனவர்கள் வாழ்க்கைபற்றி எழுத வந்திருப்பதாகவும் மணல் விவகாரத் துக்கும் என் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லி, அங்கிருந்து திரும்ப அழைத்து வருகிறார்கள்.

"அண்ணாச்சி, இங்கெ எல்லாம் ஒண்ணோட மண்ணா கெடக்கு பாத்துக்கிங்க. அரசு அதிகாரிங்கள்ல ஆரம்பிச்சி ஊருல கொஞ்சம் வாயுள்ளவன் வரைக்கும் எல்லாத்துக்கும் காசு, காசு, காசு... அட, கரண்டு லைனுல எதாச்சும் பிரச்சனைன்னா கூட்டியார்ற லைன்மேனுக்கு கார் சவாரி, பிரியாணி, ஆயிரம் ரூவா ரொக்கம்னா பார்த்துக்குங்க. வாங்குற காசுக்குக் கொஞ்சமாச்சும் கூவணுமில்லா? அதாம் நடக்கி. இப்பிடி வரிச்சிக்கிட்டு வர்றவங்களைப் பார்த்துதான் ஊரே பயந்து கெடக்கு. போலீஸு கீலீஸு எல்லாம் ஒண்ணும் செல்லாது பார்த்துக்குங்க. மக்க பாவம் என்ன செய்யிம்? நமக்கு எதுக்குடா பொல்லாப்புனு நடுங்கிக் கெடக்கு."

ஆக, இப்போது பயணத் திட்டங்கள் வகுப்பது ஊர் மக்களின் பொறுப்பானது. "அண்ணாச்சி, இருட்டத் தொடங்கையில இங்கெருந்து கார்ல புறப்படுவோம். அங்கன போற வழியில ஒரு எடம் கெடக்கு. அங்கன எறங்கி, காரைத் திருப்பிவுட்டுட்டு, பாலத்தை ஒட்டி ரெண்டு மைல் நடந்தோம்னா, கிராமத்தைப் பின்னால போய்ச் சேர்ந்துடலாம். ‘......’ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துட்டோம்னா, அங்கன ஊர்ல உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருங்க. பொறவு பொறப்பட்டோம்னா கடக்கரையோட நடக்கலாம்."

இது இந்தியாதானா?

கடற்கரையில், புதர்க்காடுகள் நடுவே புகுந்து இருட்டில் பயணம் தொடங்குகிறது. நிலா வெளிச்சம் மட்டுமே வழிகாட்டி. மண்ணில் கால் வைத்தால் பொதக் பொதக் என்று உள்வாங்குகிறது. தூரத்தில், ராட்சத இயந்திரங்கள் மணலை வாரி வாரி எடுத்து, டிரக்குகளை நிரப்புவதும் டிரக்குகள் வரிசையாகச் செல்வதும் தெரிகிறது. அலை சத்தத்தைத் தாண்டி மடேர் மடேர் என இயந்திரங்களின் சத்தம் காதை அறைகிறது. பெரியவர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. "ஒரே பாதையில போவாதீய. குறுக்க மறுக்க நடந்து கடந்து கொழப்பிவிட்டுப் போங்க. கால் தடம் காட்டிக்கொடுத்துடும்..."

கொஞ்ச தூரம் நடந்து கடக்க, எனக்கு சத்தீஸ்கர் பயண ஞாபகம் வந்தது. ‘இந்தியாவின் வண்ணங்கள்' தொடருக்காகச் சென்றிருந்தபோது அங்கே இதே போன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருபுறம் சுரங்கங்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்கள் சூறையாடிக் கொண்டிருக்கும் பகுதியில், நாம் கால் வைக்கவே முடியாது.

இன்னொருபுறம் மாவோயிஸ்ட்டுகள் பகுதியிலும் வெளியாட்கள் சாமானியமாக நுழைய முடியாது. இங்கெல் லாம் காவல் துறை, நிர்வாகம் எல்லாம் ஒரு பெயருக்குத்தான். வல்லான் வகுத்ததே வாய்க்கால்.

தனி சாம்ராஜ்ஜியம்

நம் சமூகம் எந்த அளவுக்குக் கனிம மணல் விவகாரத் தையும் இந்தப் பகுதிகளில் நிலவும் சூழலையும் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. உள்ளபடி இது ஒரு தனி சாம்ராஜ்ஜியம். ஒரு தனிமனிதன் உருவாக்கியிருக்கும் சாம்ராஜ்ஜியம். இன்றைக்குத் தென் தமிழகக் கடற்கரை முழுக்க அந்த மனிதரின் பெயரைத்தான் உச்சரிக்கிறது: வைகுண்டராஜன்.

ஒரு பெயரின் சக்தி

தமிழகக் கடற்கரையில் வைகுண்ட ராஜன் என்கிற பெயருக்கும் அவர் பிடியின் கீழ் இருக்கும் பகுதிக்கும் சர்வதேச அளவில் இன்றைக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன? அவருடைய ‘விவி மினரல்ஸ்' நிறுவனத்தின் இணைய தளம் சொல் லும் தகவல்கள் இவை:

"உலகில் அதிகமான கனிமப் பொருட்களும் மணலும் இந்தியாவில் கிடைக்கின்றன. உலகமெங்கும் கிடைக்கும் 46 கோடி டன் வள ஆதாரங் களில், இந்தியாவின் பங்கு 27.8 கோடி டன்கள். இவற்றில் உலகத் தரம் கொண்ட கனரக கனிமங்கள் 20 முதல் 30% இருப்பதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா கொடை

இந்தியாவிலேயே, 15 கி.மீ. நீள கடற்கரைப் பகுதியைக் கொண்டு அமைந்த ஒரே நிறுவனமான வி.வி.மினரல்ஸ், 40 ஆண்டுகள் சுரங்கக் குத்தகையின் கீழ் செயல்படுகிறது. மன்னார் வளைகுடாவின் நிலவியல் பண்புகள், தொடர்ந்து வீசும் அலை கள் மற்றும் கடற்கரை அமைப்பு ஆகியவற்றின் காரணமாக கார்னெட், இல்மனைட், ருடைல் மற்றும் ஜிர்கான் போன்ற கனிமப் பொருட்கள் அதிக அளவில் கிடைக்கும் பகுதியாக இது உள்ளது.

குறி: உலகின் முதலிடம்

இந்தியாவின் மிகப் பெரிய சுரங்க நிறுவனமான வி.வி. மினரல்ஸ் நிறுவனம், கார்னைட் மற்றும் இல்மனைட் கனிமங்களின் உற்பத்தி, ஏற்றுமதியிலும் முன்னணி நிறுவனம். உலக அளவில், இரண்டாம் இடத்தில் உள்ள எங்கள் நிறுவனம் மேலும் உயர்ந்த இடத்துக்குச் செல்வதில் முனைப்புடன் உள்ளது. இந்தியாவில் இல்மனைட் ஏற்றுமதி செய்யும் முதல் தனியார் நிறுவனம் வி.வி.எம். மேலும், நாட்டிலேயே, இல்மனைட் சுரங்கப் பணிகள் மற்றும் ஏற்றுமதிக்கான அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற முதல் தனியார் நிறுவனமும் இதுதான்.

ராட்சத பலம்

வி.வி.எம். நிறுவனத்தில், வெட்டியெடுக்கப்பட்ட தாதுக் களைத் தரப்படுத்த, சுரங்கப் பகுதிகளுக்கு அருகிலேயே ஐந்து ஈர ஆலைகளும் ஆறு உலர் ஆலைகளும் அமைக் கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் எரீஸ், ரோடெக்ஸ் ஸ்க்ரீன்ஸ், ஆஸ்திரேலியாவின் லினெடெக்ஸ், கோரோனா ஸ்டாட், ஜெர்மனியின் மினாக்ஸ் நிறுவனங்களிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரச் சாதனங்கள், மாதம் ஒன்றுக்கு 14,000 மெட்ரிக் டன் கார்னெட், 20,000 மெட்ரிக் டன் இல்மனைட், 1000 மெட்ரிக் டன் ஜிக்ரான், 500 மெட்ரிக் டன் ருடைல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப வெவ்வேறு வகையான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ட்ரக்குகள், டிப்பர்கள், புல்டோசர்கள் மற்றும் ட்ரெய்லர் வண்டிகள் யாவும் சொந்தமாக உள்ளன. இவை, கச்சாப் பொருட்களையும், உற்பத்திப் பொருட்களையும் குறித்த நேரத்தில் கொண்டுசெல்கின்றன.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக் குள், கனிமப் பொருட்களை மிகப் பெரிய அளவில் சேமித்துவைக்கும் மூன்று பெரிய சேமிப்புக் கிடங்குகளையும் வி.வி.எம். நிறுவனம் கொண்டுள்ளது. சுமார் 3,00,000 முதல் 4,50,000 மெட்ரிக் டன் வரை கனரக கனிமப் பொருட்களை இந்தக் கிடங்குகளில் வைத்திருக்க முடியும்.

இலக்குகள்

ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் கார்னெட் கற்கள் மற்றும் 2,25,000 மெட்ரிக் டன் இல்மினைட் ஆகியவற்றை, வி.வி.எம். நிறுவனம் உற்பத்திசெய்கிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் முதன்முதலாக ஒரேநாளில் 4,700 மெட்ரிக் டன் இல்மினைட் கனிமத்தை ஏற்றுமதி செய்த நிறுவனம் வி.வி.எம். முந்தைய சாதனையை விட 60% அதிகம் இது. எதிர்காலத்தில், இதுபோன்ற சாதனைகளை இன்னும் அதிவேகத்தில் வி.வி.எம். நிறுவனம் இரட்டிப்பாக்கும்!"

இணையதளத்திலுள்ள இந்த ஒவ்வொரு வார்த்தைகளைப் படிக்கும்போதும் இருளில் கடலும், ராட்சச இயந்திரங்களின் ‘மடார் மடார்' சத்தமும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

(அலைகள் தழுவும்…)

-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x