Last Updated : 22 Oct, 2018 09:34 AM

 

Published : 22 Oct 2018 09:34 AM
Last Updated : 22 Oct 2018 09:34 AM

டாக்ஸிக்காரரை ‘ஏ டாக்ஸி…’ என்று கூப்பிடக் கூடாது ஏன்?

சமஸ்களங்கமற்ற மாலை. வைரத்தில் ஊடுருவி சிதறுண்டு வெளிவரும் கதிர்கள்போல, நகரத்தின் கட்டிடங்களில் மோதிச் சிதறி வீதிகளில் வந்து விழுந்திருந்தது சூரிய ஒளி. இன்னும் இரண்டு நாட்கள். மூன்றாவது நாளன்று இந்தியா புறப்பட வேண்டும். அதற்குள் இன்னும் மூன்று விஷயங்கள் தொடர்பில் தெரிந்துகொண்டுவிட விரும்பினேன்: பிரிட்டனில் தொழிலாளர் நிலை, பிரிட்டன் கிராமங்களின் இன்றைய சூழல், பிரிட்டனில் தமிழ் மக்கள் வாழ்க்கை.

இதற்கு லண்டனுக்கு வெளியே கொஞ்சம் பயணிக்க வேண்டும். விடுதி வாழ்க்கையைத் தாண்டி, வீட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். யாரேனும் ஒரு தமிழ் நண்பர் உடனிருந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று. நண்பர் ஷங்கரிடம் பேசினேன். அவருடைய நண்பர் ராஜை அறிமுகப்படுத்தினார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ராஜ். லண்டனில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். ஹால்போன் பகுதியில் அவர் அலுவலகம் இருந்தது. புறநகர்ப் பகுதியில், பிரஸ்டனில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார். விடுதிக்கு என்னை அழைக்க வந்திருந்தார்.

“வீட்டுக்குப் புறப்படும் முன் என்னுடைய அலுவலகத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பக்கத்தில்தான் செயின்ட் பால் பேராலயம். லண்டன் வந்துவிட்டு அதைப் பார்க்காமல் நீங்கள் நாடு திரும்பக் கூடாது. அப்படியே தேம்ஸ் நதியோரம் கொஞ்சம் நடக்கவும் செய்யலாம். இரவு உணவை முடித்துவிட்டு நாம் வீட்டுக்குச் செல்லலாம்.”

வெளியூர் செல்லும்போது கூடுமானவரை பயணத்தின் போக்கை நண்பர்கள் கைகளில் ஒப்படைத்துவிடுவது என்னுடைய வழக்கம். அறையைக் காலிசெய்துவிட்டு இருவரும் புறப்பட்டோம். இருவருக்குமே நடப்பதில் ஆசை இருந்ததால் நடந்தே அவர் அலுவலகத்துக்குச் செல்வது என்று முடிவெடுத்து நடந்தோம்.

“இங்கிருந்து ஐந்து மைல் தொலைவு என்னுடைய அலுவலகம். ஊரில் இருந்தால் இப்படியெல்லாம் நடக்க மாட்டேன். இங்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற சௌகர்யம் பத்து மைல் என்றாலும் அலுக்காமல் நடக்கச் சொல்கிறது. அப்புறம், இது முடிவே இல்லாத வேடிக்கை நகரம். அதுவும் சாயங்காலம் ஆகிவிட்டால், உற்சாகத்தைக் கேட்கவே வேண்டாம்.”

பிரதான சாலையைத் தவிர்த்து, குறுக்கு நெடுக்காக அழைத்துச் சென்றார் ராஜ். நகரின் சந்து பொந்துகள் அவருக்கு சகஜமாக இருந்தன. ஒரு புராதன அழகு அந்தச் சந்துகளில் கவிந்திருந்தது. இரு பக்கங்களும் உயர்ந்து நின்ற கட்டிடங்களைத் தாண்டி உள்ளே வந்த வெளிச்சம் குறைவு என்பதால், வேறு ஒரு காலகட்டத்தின் ஒளி அங்கே புகுந்ததுபோல் இருந்தது. கடந்து சென்ற பெண்கள் யாவரும் அழகாகத் தெரிந்தார்கள். நம்மூரில் டீக்கடைகள் முன் நின்று கூட்டமாக டீ குடிப்பதுபோல மதுக் கடைகளின் முன் நான்கைந்து பேராகப் பேசியபடி பீர் குடித்துக்கொண்டிருந்தார்கள். நுரை ததும்பும் பெரிய பீர் கோப்பை ஒன்றைக் கையில் ஏந்தியிருந்த பெண் சிரித்தபடி கையை ஆட்டினாள்.

“நான் ஊர் திரும்புவதற்குள் ஒரு துப்புரவுத் தொழிலாளியைச் சந்திக்க விரும்புகிறேன். முடியுமா?”

பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாகப் பார்த்தார் ராஜ்.

“இங்குள்ள உயர்மட்ட உலகத்தை ஓரளவுக்குப் பார்த்துவிட்டேன். என்னுடைய ஆர்வம் இங்குள்ள சாமானிய வாழ்க்கையைப் புரிந்துகொள்வதிலேயே இருக்கிறது. முடிந்தால், இங்கே பதுங்கி வாழும் அகதிகளையும்கூடச் சந்திக்க நினைக்கிறேன்.”

“நீங்கள் அவர்களைச் சந்திப்பதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால், அவ்வளவு சீக்கிரம் இங்கு யாரும் பேச மாட்டார்கள்.”

பேசிக்கொண்டே நடந்தோம். ஒரு மணி நேர நடையில் ஹால்போனை வந்தடைந்திருந்தோம். அது அலுவலகப் பணி முடிவடையும் நேரம். அலுவலக வரவேற்பறையின் மையப் பகுதியை காபி-மதுவிடமாக வைத்திருந்தார்கள். ஆண் – பெண் இருபாலரும் தானியங்கி இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி, நீண்ட குவளைகளில் பீரை நிரப்பிப் பருகியபடி சென்றனர்.

“பிரிட்டனில் தண்ணீரைக் காட்டிலும் பீர் அதிகம். நல்ல தரமான பீர். இந்தக் குளிருக்கு இதமாக இருக்கும். கொஞ்சம் குடிக்கிறீர்களா?”

நான் ரெட் ஒயின் கேட்டேன். அலுவலகத்தில் பணியிடம் ஒவ்வொருவருக்கும் பரந்து விரிந்திருந்தது. நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார் ராஜ். கொஞ்ச நேரம் அளவளாவினோம். “நாம் கிளம்பலாம்” என்றார். செயின்ட் பால் பேராலயம் நோக்கி நாங்கள் நடந்தோம். “நாளெல்லாம் அலுவலகத்திலேயே குடிக்க வாய்ப்புள்ள இந்த நாட்டில், யாரும் வீதியில் போதையடித்துக் கிடப்பதை நாம் பார்க்க முடியாது. குடி அவர்களுக்கு ஒரு கிக். நாம் காபி குடிப்பதுபோல. நம்மூர் சூழலை நினைத்தால் வேதனைதான் மிகுகிறது.”

“எல்லாவற்றையும்போல குடிக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ஏழைகள் – பணக்காரர்கள் என்பதையெல்லாம் தாண்டி, இங்கே குடிக் கலாச்சாரம் கொண்டாட்டத்துடன் இணைந்திருக்கிறது; நாம் அதைக் குற்றத்துடன் இணைத்து வைத்திருக்கிறோம்.”

“நீங்கள் துப்புரவுப் பணியாளர் ஒருவரைப் பார்க்க வேண்டும் என்றீர்கள் அல்லவா, அங்கே ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள்.”

உணவு விடுதியின் வெளியே சாலையைப் பார்த்தபடி போடப்பட்டிருந்த மேஜை – நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்தச் சீருடை மனிதர் பீட்ஸா சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் அன்றைய பணியை முடித்திருக்க வேண்டும். முகத்தைக் களைப்பு போர்த்தியிருந்தது. ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். தாடி முழுக்க நரைத்திருந்தது. தாட்டியமான உடல். காலையில் நான் பிரதமர் வீட்டின் முன் பார்த்த ராணுவ வீரரை நினைவூட்டுவதுபோல இருந்தது அவருடைய கூரிய பார்வை. அவர் சாப்பிடும் வரை காத்திருந்து, பின்னர் நாங்கள் அவரை அணுகினோம். ராஜ் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னைப் பற்றி கூறினார். சினேகப் பார்வையுடன் கை குலுக்கியவர் பேட்டியை மட்டும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மீண்டும் நடக்கலானோம்.

“பொதுவாகவே பிரிட்டிஷார் எடுத்த எடுப்பில் ஊடகங்களிடம் பேச மாட்டார்கள். ஆனாலும், நாம் முயற்சிப்போம்.”

“துப்புரவுப் பணியிலும் துப்புறவுப் பணியாளர்களிடத்திலும் ஒரு அரசாங்கம் வெளிப்படுத்தும் அக்கறையையே அந்தச் சமூகம் கொண்டிருக்கும் மனிதத்தன்மைக்கான அளவுகோலாக நான் நினைக்கிறேன். அதனாலேயே ஒரு துப்புரவுத் தொழிலாளியையேனும் இங்கு பேட்டி கண்டுவிட நினைக்கிறேன்.”

ராஜ் ஆமோதித்தார். “கொஞ்சம் உங்கள் கண்களை மேல் நோக்கி எதிரே பாருங்கள். உலகின் மகத்தான கட்டிடங்களில் ஒன்றின் முன் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்…”.

செயின்ட் பால் பேராலயம் வானுயர நின்றது. மனித குலத்தின் ஆற்றல்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து நிற்பதுபோல இருந்தது அதன் கட்டுமானம். பிரம்மாண்டம். பேரழகு. பிரமிப்பு. வலி. ஆழமான துயரம்.

“ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு இதற்குண்டு. மீண்டும் மீண்டும் அழிபட்டு, மீண்டும் மீண்டும் எழுந்த பேராலயம் இது. இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது 1666-ல் லண்டனில் ஏற்பட்ட பெருந்தீவிபத்துக்குப் பிறகு கட்டப்பட்டது. அந்த விபத்துக்குப் பிறகு லண்டன் நகரை உயிர்ப்பித்த கட்டிடக் கலைஞர் கிறிஸ்டோபர் ரென்தான் இந்தப் பேராலயத்தையும் கட்டினார். அவரது சமாதி உள்ளேயே இருக்கிறது. இங்கே புதைக்கப்படுவதை மனிதப் பிறவியின் பேறுகளில் ஒன்றாகப் பேசுவார்கள் பிரிட்டிஷார். ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், வில்லியம் பிளேக், அலெக்ஸாண்டர் பிளம்மிங், வின்சென்ட் சர்ச்சில் என்று உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு மட்டுமே அந்தப் பெருமை வாய்த்திருக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய குவிமாடக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. 366 அடி உயரம். ‘முழு வாழ்க்கையின் மூன்று பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் இங்கே மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய சொற்பொழிவு உலகப் பிரசித்தம்” என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார் ராஜ்.

பிரிட்டன் வந்தது முதலாக மனதின் அடியாழத்தில் படர்ந்துகொண்டிருந்த அந்த இனம் புரியாத வலி இன்றைக்கு நெஞ்சின் மேல் பரப்புக்கு வந்திருந்தது. அது இப்போது இனம் புரிந்தது. “பிரிட்டனை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது ராஜ். இங்குள்ள குடிமைக் கலாச்சாரம், பன்மைக் கலாச்சாரம் ரொம்பவே பிடித்திருக்கிறது. ஆனால், இந்தப் பிரம்மாண்டம், உடலைக் குத்திக் கிழிக்கும் இந்தக் குளிர், கொட்டும் பனி, மழை இடையே நிறுவப்பட்டிருக்கும் இந்தப் பிரம்மாண்டம்.. அது பெரிய வலியையும் துயரத்தையும் தருகிறது. யோசித்துப்பார்த்தால், ஒவ்வொரு பிரம்மாண்டத்துக்கும் பின் எவ்வளவு பெரிய சுரண்டல், மனித ரத்தம், மானுடத் துயரம் இருக்கிறது?”

இருவருமே சிறிது நேரம் பேச்சற்றவர்களாகிப்போனோம். பின்னர், ஒவ்வொரு இடமாகச் சுட்டி விளக்கினார் ராஜ். இருட்டு பரிபூரணமாக இறங்கியிருந்தது. வீட்டுக்கு காரில் போய்விடலாம் என்றார். சாலையின் மறுபக்கம் நின்ற டாக்ஸிக்காரருக்கு சமிக்ஞை காட்டினார். டாக்ஸிக்காரர் கவனிக்கவில்லை. கூப்பிட்டிருக்கலாம். ராஜ் சாலையைக் கடந்து சென்று டாக்ஸியை அழைத்து வந்தார். “இங்கே டாக்ஸிக்காரர்களை ‘டாக்ஸி’ என்று கூவி அழைக்க முடியாது” என்றபடி சிரித்தவர், டாக்ஸிக்குள் என்னை உள்ளடக்கிக்கொண்டு, “சகோதரரே, லண்டனின் டாக்ஸி கலாச்சாரத்தைப் பற்றி என் நண்பருக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று ஓட்டுநரிடம் சொன்னார்.

“லண்டன் மாநகரின் கலாச்சாரச் சின்னங்களில் ஒன்று இந்தக் கறுப்பு டாக்ஸி. இங்கே டாக்ஸியைக்கூட பணம் கொடுத்து வாங்கிவிடலாம், டாக்ஸி ஓட்டுநர் உரிமம் வாங்குவது எளிதல்ல. ஓட்டுநராக விரும்புபவர் லண்டன் சாலைகளைக் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். நகரின் மையத்தில் சாரிங் கிராஸ் என்று ஒரு பகுதி இருக்கிறது, அந்த ஆறு மைல் சுற்றுவட்டாரத்தில் உள்ள 320 வழித்தடங்கள், 25,000 வீதிகள், 20,000 பொது அடையாளச் சின்னங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நகரில் இன்றைக்கு 21,000 கறுப்பு டாக்ஸிகள் ஓடுகின்றன. இந்த வண்டிகளை இங்கே ‘ஹேக்நே’ என்று சொல்வார்கள். லண்டன் மக்களுக்கு பொதுப் பயன்பாட்டுக்கான தனி வாகனம் 1639-ல் உருவானது. அப்போது பயன்பட்ட குதிரை கோச்சுகளுக்கு ‘ஹேக்நே’ என்று பெயர். பிரெஞ்சு மொழி வார்த்தை அது. 1908-ல் குதிரைகளுக்குப் பதில் மோட்டார் இன்ஜின் பொருத்தப்பட்ட வண்டிகள் வந்தன. என்றாலும் அந்தப் பெயர் அப்படியே நீடிக்கிறது” என்றார்.

ஓட்டுநரிடம் “நீங்கள் எந்த ஊர்?” என்றேன். “ஆப்கன். இப்போது இதுவே என் நாடாகிவிட்டது” என்றார். “ஆறு பேர் உட்காரலாம்போல் இருக்கிறதே… இட வசதி நல்ல தாராளமாக இருக்கிறது” என்றேன். “என் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்தால் ஏழு பேர் உட்காரலாம். இந்த கோச்சின் கேபின் எப்படி செய்யப்பட வேண்டும், எவ்வளவு நீள, அகலம், உயரம் இருக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் உண்டு. வெள்ளையர்கள் ‘பவ்லர் ஹேட்’ என்று ஒரு தொப்பி போடுவார்கள்.  அதைக் கழற்றாமல், தலை இடிக்காமல் அப்படியே உள்ளே உட்கார்கிற அளவுக்கு கோச்சின் உயரம் இருக்க வேண்டும். அதேபோல, 25 அடிக்குள் வண்டி சக்கர வட்டமாகத் திரும்பும் வகையில் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் லண்டனில் சவாய் ஹோட்டல் முன் திரும்பும் இட அகலம் அவ்வளவுதான். அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் விதிகளைப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நல்லதுதான். லண்டன் டாக்ஸியில் பயணிக்கும் ஒருவர் தனிப் போக்குவரத்தை விரும்ப மாட்டார்” என்றார். ராஜ் பேசலானார்.

“டாக்ஸிக்காரர்களைப் பெயரிட்டு அழைக்க முடியாது என்றேனே ஏன் தெரியுமா?”

“ம்ஹூம்…”

“உடலுழைப்புத் தொழிலாளர்களைத்தான் நாம் இப்படிப் பெயரிட்டு அழைக்கிறோம். உடலுழைப்பைக் கீழானதாகக் கருதும் மனோபாவம்தான் காரணம். பிரிட்டனைப் பொருத்தளவில் இங்கே தொழிலின் பெயரால் யாரும் யாரையும் அவமானப்படுத்திவிட முடியாது. அதைச் சுட்டுவதுபோலவே டாக்ஸிக்காரர்களை ‘ஏ... டாக்ஸி’ என்றழைப்பதைச் சட்ட விரோதமாக்கி வைத்திருக்கிறார்கள்.”

கறுப்பு டாக்ஸி வேகம் பிடித்தது. நான் இந்திய நினைவுகளில் ஆழ்ந்தேன்.

பயணிப்போம்…

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x