Published : 23 Oct 2018 09:28 AM
Last Updated : 23 Oct 2018 09:28 AM
சிறு வயதில் கொல்கத்தா நகரில் வாழ்ந்தேன். வீதியில் நடந்து செல்லும் வியாபாரிகளின் குரலைக் கொண்டே அவர்கள் யார் என்று அடையாளம் காண்பேன். துணி விற்பவர், சுண்டல்காரர், துடைப்பம் விற்பவர், கத்திக்கு சாணை பிடிப்பவர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராகத்தில் கூவிக்கொண்டே செல்வார்கள்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரம் என்றால் ஐஸ்கிரீம் விற்பவரின் குரல் ஈர்த்துவிடும். அப்படி வீதியில் போனவர்களில் ஒரு பிச்சைக்காரரின் குரல் மட்டும் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தும். ‘ஒரு ரூபாய் கொடுத்தால், சாயா குடிப்பேன்’ என்பதை வங்க மொழியில் ஏற்ற - இறக்கத்துடன் மந்திரத்தைப் போல அடிக்கடி சொல்லிக்கொண்டே வருவார். யாராவது காலணா (25 பைசா) கொடுத்தால், அவர்களைப் பார்த்தே விட்டெறிவார். அவர் பிச்சை எடுக்கவில்லை அதிகாரமாக மிரட்டிக் கேட்பார். யாரிடம் காசு கேட்கிறாரோ அவர்களுடைய கண்களைப் பார்த்துத்தான் பேசுவார். அது எனக்கு அச்சத்தை ஊட்டும்.
எங்கே கற்றார்கள்?
அன்றைக்கு அவர் என்ன செய்தார் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. சமூகத்தின் அடித்தட்டில் இருந்தாலும், தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையானதைப் பெற மற்றவர்களைத் தனது செயலாலும் வார்த்தைகளாலும் மிரட்டியே சம்பாதித்துக்கொண்டார். யாரும் அவருக்கு ஒரு ரூபாய்க்குக் குறைவாகத் தர மாட்டார்கள். இப்போது நாடு முழுவதும் ‘நானும் இயக்கம்’ (மீடூ) பெரிய அளவில் பேசப்படுகிறது. பெரிய பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்தவர்கள், சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்கள் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி எப்படிப் பெண்களைப் பயமுறுத்திப் பணியவைக்கப் பார்த்தார்கள் என்ற விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
பல கதைகள் வெளியே வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் உடன் படிக்கும் மாணவர்கள், நண்பர்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ள சகாக்கள், நெருங்கிய உறவினர்கள் எப்படியெல்லாம் தங்களை மிரட்டினர், வேலை போய்விடுமோ, படிக்க முடியாதோ என்ற அச்சமே இல்லாத நிலையிலும்கூட, வெளியில் சொல்ல வழியில்லாமல் எப்படியெல்லாம் பெண்கள் அவமானப்பட்டனர் அல்லது வேதனைகளைத் தாங்கினர் என்கிற கதைகள் வெளியே வருகின்றன. பதவி, பணம், அதிகாரத்தில் இல்லாதவர்களும்கூடப் பெண்களை மிரட்ட முடிந்திருப்பதை நாம் கேட்கிறோம். எப்படி அவர்களால் இதைச் செய்ய முடிந்தது? இதை அவர்கள் எங்கே கற்றார்கள்? இதற்கான பதில், ‘இந்தச் சமூகமே பெண்களை மட்டம்தட்டும் அமைப்பில்தான் இருக்கிறது’ என்பதுதான்!
மகளிடமிருந்து கற்றுக்கொள்கிறேன்
ஆணாதிக்கச் சமுதாய வளர்ப்பில் ஒருபுறம் ஆண் பிள்ளைகளுக்குச் சலுகைகளும் உரிமைகளும் அதிகம் தரப்படுகின்றன. மறுபுறம் பெண் பிள்ளைகள் வார்த்தைகளாலும் செயல்களாலும் அடக்கப்படுகின்றனர். சிறு வயது முதலே பெண்களை, ‘கடும் வார்த்தை சொல்லாதே, உரக்கப் பேசிப் பழகாதே, எல்லோரிடமும் பொறுமையாகப் பேசு, அன்பாக இரு’ என்று திரும்பத் திரும்பக் கூறி மூளைச் சலவை செய்துவிடுகின்றனர். விளைவாகவே பெண்கள் மோதவும், மோதல்களை எதிர்கொள்ளவும் அச்சப்படுகிறார்கள். பெண்கள் மனதளவில், ‘தாங்கள் அதிகாரமற்றவர்கள், பலமற்றவர்கள்’ என்று நம்பத் தொடங்கிவிடுகின்றனர். சம உரிமையும் சுதந்திரமும் பெற வேண்டிய இடங்களில்கூட தங்களுக்கான அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறியாதவர்களாகவும், செயல்படுத்த விரும்பாதவர்களாகவும், செயல்படுத்த முடியாதவர்களாகவும்கூட இருக்கின்றனர். தங்களை அச்சுறுத்தும் ஆணுக்குப் பணமோ, அதிகாரமோ, செல்வாக்கோ இல்லையென்றாலும்கூட, எதிர்வினையாற்றத் தயங்குகின்றனர்.
என்னுடைய பெண் 1990-களில் பிறந்தவள். இப்போது வீசும் அலை தொடர்பாக அவளிடமிருந்து சிலவற்றை நான் கற்றுக்கொள்கிறேன். இப்போதெல்லாம் இளம் பெண்கள் எப்படிக் கோபப்படுகிறார்கள் என்று அவள்தான் எனக்குத் தெரிவித்தாள். ஆண் நண்பர்கள் எப்படி அவமரியாதையாக நடந்துகொள்கிறார்கள், ஆபாசமான அருவருக்கத்தக்க பேச்சுகளை நகைச்சுவை என்று வாதிடுகிறார்கள், பாலியல் வக்கிரத்துடன் தாங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலை எதிர்பார்க்கிறார்கள், தங்களைப் போலவே பாலியல் சிந்தனைகளைப் பதிலுக்கு எழுதுமாறு தூண்டுகிறார்கள், நிர்வாண அல்லது கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பெறுவது தங்களுடைய உரிமை என்பதைப் போல நடந்துகொள்கிறார்கள் என்று அவள் எனக்குக் கூறினாள்; அனுப்பாவிட்டால் குற்றமோ என்ற உணர்ச்சியில் பெண்கள் அனுப்புகிறார்கள் என்றெல்லாமும் விவரித்தாள்.
போதும் நிறுத்து
இப்படிப்பட்ட வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து வெளியே செல்வது மட்டுமல்ல, வகுப்புத் தோழியாக இருப்பதுகூட இயலாத செயல். பெண்களை அடிமைகளாகவும் போகப் பொருளாகவும் பார்க்கும் இத்தகைய சுயமோகி ஆண் நண்பர்களைத் தாங்கள் வெறுப்பதாகத் தெரிவித்தாள். இந்த வெறுப்பை உள்ளுக்குள் வைத்துக்கொள்ளாமல் உரையாடலின்போது முகத்துக்கு நேராகவே தெரிவித்துவிடுவதாகவும், முடியாது என்று மறுத்துவிடுவதாகவும் கூறினாள். தொல்லை தர ஆரம்பித்தால் நாலு பேர் அறிய பகிரங்கமாக அதைச் சொல்லி எதிர்ப்புத் தெரிவித்து, அவர்களை வழிக்குக் கொண்டுவருவதாகக் கூறினாள். ‘முடியாது’, ‘போதும் நிறுத்து’ என்ற வார்த்தைகளைப் பெண்கள் உறுதியாகவும் உரக்கவும் சொல்லப் பழக வேண்டும் என்றாள். ‘இப்படிச் சொல்லும்போது தயக்கமோ, குற்றஉணர்வோ பெண்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. தங்களிடம் அத்துமீறும் ஆண்களைத் திருத்துவதாக இருந்தாலும், மன்னிப்புக் கேட்குமாறு உரத்துக் குரல் கொடுத்துவிட வேண்டும். அதைவிடுத்து, நம்மை அவமதித்துவிட்டான் என்று மனதுக்குள் மருகக் கூடாது என்றாள்.
நண்பர்களோ, அத்தை மகன், மாமன் மகன் போன்றவர்களோ அத்துமீறும்போது இப்படி நடப்பது எளிதல்லதான்; புரட்சி என்பது சுலபமாக நடப்பதல்ல. பெண்களைக் கண்ணியமாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் பணியிடம் அல்லது சூழல் கிடைத்துவிடும் என்று பெண்கள் நினைத்தால் அது முட்டாள்தனம். அதிகாரத்தை யாரும் நன்கொடையாக மற்றவர்களுக்குத் தர மாட்டார்கள். பெண்கள்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். நிறுவனரீதியாகவும் சமூகரீதியாகவும் ஆணாதிக்க உணர்வுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் அதே வேளையில், ஒவ்வொரு பெண்ணும் தனிப்பட்ட முறையிலும் போராடத் தயாராக வேண்டும். தங்களுக்காக மட்டுமல்ல, வலிமையற்றும் விவரம் இல்லாமலும் கிடக்கும் பிற பெண்களுக்காகவும் போராடித்தான் தீர வேண்டும்.
ஒரு ‘ரோசா பார்க்’ (சம உரிமைக்காகப் போராடிய அமெரிக்கக் கறுப்பினப் பெண்), தன்னைப் போல பத்து பெண்களை உருவாக்க முடியும். ஒரே மாதிரியான வேலையில் அல்லது நிலையில் இருக்கும்போது, நமக்கு அதிகாரம் இல்லை என்று பெண்கள் நினைக்கத் தேவையில்லை.
பெண்களுடைய சுயத்தை இழக்கும் வகையில் கோரிக்கைகள் அல்லது கட்டளைகள் வருமென்றால் (அந்த நட்பிலிருந்து) வெளியேறுங்கள், தடுத்து நிறுத்துங்கள், நட்பைக் கைவிடுங்கள், பழகுவதைக் கைவிடுங்கள், உரக்கக் கத்துங்கள், தேவைப்பட்டால் கன்னத்தில் அறையுங்கள். எதிர்த்தரப்பிலிருந்து வருவதற்கு ஏற்ப, எதிர்வினையாற்றுங்கள். ஒருவர் ரொம்பப் பிரபலமாக இருக்கிறார் என்பதற்காகவோ, அதிகாரத்தில் இருக்கிறார் என்பதற்காகவோ அஞ்சிவிடாதீர்கள் - கொல்கத்தா நகர பிச்சைக்காரரைப் போலத் துணிவோடு செயல்படுங்கள்.
‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT