Published : 24 Aug 2018 10:17 AM
Last Updated : 24 Aug 2018 10:17 AM

குல்தீப் நய்யர்: எல்லைக் கோடுகளுக்கு நடுவே ஒரு நல்லெண்ணத் தூதுவர்

பத்திரிகையாளர் என்பதற்கு முன்னுதாரணங்களாக மனதில் ஒளிவிடுபவர்களில் ஒருவரான குல்தீப் நய்யர் தன்னுடைய 95-வது வயதில் இயற்கை எய்தினார்.

தற்போதைய பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பிறந்த பஞ்சாபியரான நய்யர், “எனது நகரம் என்று சியால்கோட்” என்றே தனது இறுதிக்காலம் வரையிலும் கூறிவந்தவர்.

தேசப் பிரிவினையின் காரணமாகத் தனது பிரியத்துக்குரிய நகரத்திலிருந்து வெளியேற நேர்ந்த வலியும், அப்போது அவர் கண்டு மனம் பதறிய துயரங்களும் கடைசிவரைக்கும் அவரைவிட்டு நீங்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவுத் தூதுவராகவே அவர் இருந்தார்.

அவரின் பத்தி எழுத்துகள் இந்திய நாளிதழ்களிலும் பாகிஸ்தான் நாளிதழ்களிலும் ஒரே நேரத்தில் பிரசுரமாயின. இரு நாடுகளின் அரசியல் உறவுகளுக்கு அப்பால், அவரைப் போன்ற அறிவாளர்களின் நல்லெண்ணங்களே பதற்றங்களைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.

வெளிப்படை ஜனநாயகம்

லாகூரில் சட்டம் படித்த நய்யர், அமெரிக்காவுக்குச் சென்று இதழியல் கல்வி பயின்றவர். உருது மொழிப் பத்திரிகையில் செய்தியாளராகத் தனது இதழியல் பணியைத் தொடங்கினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த்தின் செய்தி அதிகாரியாகவும் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் ஊடக ஆலோசகராகவும் பணியாற்றினார். அரசு அலுவலராகப் பணியாற்றினாலும், இதழியல் மீதுதான் அவருக்கு அதிகம் ஈடுபாடு இருந்தது.

1969-ல் இந்திய அரசியலின் முக்கியமான அரசியல் நிகழ்வுகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள்  ‘பிட்வீன் தி லைன்ஸ்’ என்ற தலைப்பில் புத்தகமானது.  இந்தியாவில் புனைவல்லாத வகையில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் அதுவும் ஒன்று. தொடர்ந்து அவர் எழுதிய பத்திகள் அந்தப் பெயரிலேயே வெளிவந்தன. மத்திய அரசு முக்கியமான முடிவுகளை எடுத்தபோது ஒரு அரசு அலுவலராக, அதைப் பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு நய்யருக்குக் கிட்டியது. அத்தகைய நிகழ்வுகளைப் பற்றியும் தனது கட்டுரைகளில் அவர் எழுதத் தவறவில்லை.

அதன் காரணமாக அரசாங்க ரகசியங்களைப் பகிரங்கப்படுத்துகிறார் என்று உள்துறை அமைச்சகத்தால் வழக்குகளையும் சந்தித்தார். ஆனால், அதற்கு அவர் அஞ்சிவிடவில்லை. அடுத்து, 1960-70 காலக்கட்டத்தைப் பற்றி அவர் எழுதிய ‘தி கிரிட்டிகள் இயர்ஸ்’ (1971) புத்தகத்தின் முன்னுரையிலேயே தான் இன்னொரு வழக்கைச் சந்திக்கவும் தயாராக இருப்பதாகவே அவர் எழுதினார். ஜனநாயகம் என்பது மூடிய அறைகளில் அல்ல, வெளிப்படையாகத்தான் வளர்கிறது என்பது அவரது வாதம்.

நெருக்கடி கால சிறைவாசம்

அரசின் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து விரிவாக எழுதி வெட்டவெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார் குல்தீப் நய்யர். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட உடனே சிறைக்குள் தள்ளப்பட்ட பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையில் டெல்லி பதிப்பின் ஆசிரியராகப் பொறுப்புவகித்தார். நெருக்கடிநிலைக்கு எதிரான ஜெயப்ரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டார்.

அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால், பரபரப்பான அரசியல் சூழல்களில் அனைவரையும் முந்திக்கொண்டு முக்கியச் செய்திகளை முன்கூட்டியே ‘ஸ்கூப்’ அடிக்கவும் அவரால் முடிந்தது. அத்தகைய செய்தி அனுபவங்களையே ‘ஸ்கூப்’ என்ற தலைப்பில் அவர் தனிப் புத்தகமாகவே  எழுதியிருக்கிறார். அப்புத்தகத்தில் தான் செய்த தவறுகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட வற்றைப் பத்திரிகைகள் பிரசுரிக்கக் கூடாது என்பது விதி. அந்த விதியைக் காட்டி, 1955-ல் நாடாளுமன்றக் குழுவில் ஆட்சிமொழி பற்றி விவாதிக்கப்பட்டதைப் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவராமல் தவிர்த்தார், உள்துறை அமைச்சரின் செய்தித் துறை அதிகாரியாக அப்போது பணியாற்றிய குல்தீப் நய்யர். ஆனால், அந்தச் சிறப்புரிமை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மட்டும்தான்; நாடாளுமன்றத்தின் மற்ற குழுக்களுக்கு அல்ல.  தன்னுடைய தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார் நய்யர்.

இந்தியத் தூதர்

பின்னாட்களில் ஐநா சபையின் இந்தியப் பிரதிநிதியாகவும் , பிரிட்டனுக்கான இந்தியத் தூதராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவமும் நய்யருக்கு உண்டு. எத்தனைப் பதவிகள், பட்டங்கள் வந்தாலும் பத்திரிகையாளர் என்பதுதான் அவருடைய அடையாளமாக இருந்திருக்கிறது. ஆனால், அந்த அடையாளத்தைச் சுமப்பது எப்போதும் முள்முடி கிரீடம்தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்னால், பாஜக தலைவர் அமித் ஷா,  குல்தீப் நய்யரின் வீட்டுக்குச் சென்றார். அதைக் கண்டித்து குல்தீப்பின் நண்பர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்தார்கள்.   ‘அமித் ஷாவை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்’ என்று ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் அவருக்கு அனுப்பப்பட்டன.  அதுகுறித்து அவர் எழுதிய கட்டுரை, ‘மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றுபவர்களும்கூட மற்றவர்களைப் போல வெறியர் களாகத்தான் இருக்கிறார்கள்’ என்று தொடங்கியது.

“யார் வேண்டுமானாலும் எனது வீட்டுக்கு வரலாம்” என்றார் நய்யர். அரசியலையும் மதத்தையும் ஒன்று கலக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது கொள்கை என்பதைத் தெளிவுபடுத்தினார்.  “உங்களை எதிர்க்கக்கூடியவர்களையும் பேச அனுமதியுங்கள்” என்று வலியுறுத்திய அவர்,  “கருத்து வேற்றுமைகள் எந்த உரையாடலுக்கும் தடையாக இருக்கக் கூடாது, ஜனநாயகம் என்பதே விவாதங்களும் வாதங்களும்தான்” என்று கூறினார். தனது வீட்டுக்கு வரும் அமித் ஷாவை வரவேற்பதில் தவறில்லை என்று சொன்ன அதே நய்யர், அவர் சார்ந்திருக்கும் அமைப்பு முன்னெடுக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலானது இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று விமர்சிக்கவும் தவறவில்லை.

தன்னை முன்னிறுத்தாதவர்

ஒன்றுக்கொன்று முரண்பாடான கொள்கைகளைக் கொண்ட அரசியல் தலைவர்கள் பலரையும் நய்யர் சந்தித்திருக்கிறார். எப்போதும் அவர் ஒரு பத்திரிகையாளராகவே நடுநிலை தவறாமல் தனது பணியைச் செய்திருக்கிறார்.

மவுன்ட்பேட்டனிடம் ‘நீங்கள் நினைத்திருந்தால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைத் தவிர்த்திருக்கலாமே’ என்று கேட்டவர் அவர்.  அதேசமயத்தில், பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய மவுன்ட்பேட்டனின் அனுபவங்களையும் பதிவுசெய்திருக்கிறார். அவர் எழுதிய ‘இந்தியா ஆஃப்டர் நேரு’ புத்தகம், நேருவின் மறைவுக்குப் பிறகு, இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.  காமராஜரின் கண்ணியத்தை உணர்த்தும் வரலாற்று ஆவணமும்கூட அப்புத்தகம்.

ஆளுமைகளுடனான சந்திப்புகளைப் பற்றி எழுதும்போது தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொள்ளாதவர் நய்யர்.  குறிப்பாக, அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை ஒரு பள்ளி மாணவர்கூட எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். சிக்கலான மொழிநடையும் சுயமோகமும் பொங்கி வழியும் பத்தி எழுத்தாளர்களுக்கு மத்தியில் குல்தீப் நய்யரின் எளிமைக்குக் காரணம் அவர் சொல்லவந்த செய்தி அனைவரையும் சென்றுசேர வேண்டும் என்ற நோக்கம்தான்.

ஆகஸ்ட் 15 அன்று குல்தீப் நய்யர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுதந்திர தினத்தையொட்டி எழுதியதுதான் அவரது கடைசிக் கட்டுரை. பிரிவினையின் வலியைப் பேசும் அந்தக் கட்டுரை, பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடன் நல்லிணக்கம் பேண வேண்டும் என்ற வேண்டுகோளுடன்தான் முடிந்திருந்தது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x