Published : 17 Aug 2018 09:13 AM
Last Updated : 17 Aug 2018 09:13 AM
இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் அடல் பிஹாரி வாஜ்பாய் தன்னிகரற்றவர். கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயல்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரையும் அரவணைத்த ஆட்சியாளர், பெரிய மக்கள் தலைவர்.
இளமைக் காலம்
பள்ளிக்கூட ஆசிரியர் கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவிக்கு 1924, டிசம்பர் 25 அன்று குவாலியரில் புதல்வராகப் பிறந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். சகோதர, சகோதரிகள் உண்டு. பூர்விகம் உத்தர பிரதேசத்தின் பாதேஷ்வர் என்றாலும் தாத்தா பண்டிட் ஷியாம்லால் வாஜ்பாய் காலத்திலேயே மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு இடம்பெயர்ந்துவிட்டது வாஜ்பாய் குடும்பம். சரஸ்வதி சிசு மந்திரில் பள்ளிப்படிப்பு. இந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் மூன்றையும் இளம் வயதிலேயே ஆர்வமாகப் பயின்றார் வாஜ்பாய்.
கல்லூரி காலத்தில் வாஜ்பாய் முதலில் படித்தது அரசியல் அறிவியல். அதில் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். என்றாலும் சட்டப் படிப்பை அவர் முடிக்கவில்லை. 1939-ல், தன்னுடைய 15-வது வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார் வாஜ்பாய். 1944-ல், ஆரிய சபையின் இளைஞர் பிரிவுப் பொதுச் செயலாளரானார். பின்னர் உத்தர பிரதேசத்துக்கு இயக்கப் பணிக்காக அனுப்பப்பட்டார். அங்கு தீன்தயாள் உபாத்யாயா நடத்திவந்த ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பாஞ்சஜன்யா’, ‘ஸ்வதேஷ்’, ‘வீர் அர்ஜுன்’ ஆகிய பத்திரிகைகளை அவர் கவனித்துக்கொண்டார்.
சுதந்திரப் போராட்டம்
சுதந்திரப் போராட்டத்தைப் பொருத்த அளவில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களின் வரலாறு இரட்டைத்தன்மையுடையதாகவே இருந்தது. வாஜ்பாயும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் வாஜ்பாய் அவருடைய அண்ணன் பிரேமுடன் பங்கேற்றார். கைதுசெய்யப்பட்டு 23 நாள்கள் சிறையில் இருந்தார். ‘இனி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் பங்கேற்க மாட்டோம்’ என்று பிரிட்டாஷாரிடம் எழுதிக்கொடுத்ததைத் தொடர்ந்து விடுதலையானார்.
மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் இயக்கம் 1948-ல் தடைசெய்யப்பட்டது. பிறகு தடை நீங்கியது என்றாலும், நேரடியாக தமக்கென ஒரு அரசியல் அமைப்பு தேவை என்று அது கருதியது. விளைவாக தீன்தயாள் உபாத்யாய, சியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்டோர் பாரதிய ஜன சங்கம் என்ற கட்சியை 1951-ல் தொடங்கினர். வாஜ்பாய் அதன் தேசியச் செயலாளரானார். 1957-ல் மதுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வாஜ்பாய்க்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், அதே ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்குள் அவர் நுழைந்தார். அதன் பின் அவருடைய வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாததாக மாறியது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை வாஜ்பாய்க்கு உண்டு. 1968-ல் ஜனசங்கத்தின் தேசியத் தலைவரானார் வாஜ்பாய். கட்சியின் நிர்வாக வேலைகளை அத்வானியும் மக்கள் தொடர்பு, மாநாடு, நாடாளுமன்ற விவாதம் போன்றவற்றை வாஜ்பாயும் கவனித்தனர். அத்வானியும் வாஜ்பாயும் அறைத்தோழர்களும்கூட. பெரும்பாலும் வாஜ்பாய்தான் சமையல். “கிச்சடி பிரமாதமாகச் செய்வார்” என்று அத்வானி பல முறை பாராட்டியிருக்கிறார். இந்தக் கிச்சடி அனுபவம் அரசியல் தளத்திலும் அவருக்கு உதவியது என்று சொல்ல வேண்டும். வலதுசாரி கட்சியான பாஜகவை முதல் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்த உதவிய ‘தேசிய ஜனநாயக கூட்டணி’யை வெற்றிகரமாக உருவாக்கினார் வாஜ்பாய்.
நாடு போற்றிய நாடாளுமன்றவாதி
நல்ல ஜனநாயகவாதி, நாடாளுமன்றவாதி வாஜ்பாய். மக்களவையின் இளம் உறுப்பினராக இருந்த வாஜ்பாயின் பேச்சாற்றலை ரசித்த பிரதமர் நேரு அவரை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். அண்ணா தன்னுடைய உரையில் வாஜ்பாயைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அப்போது தொடங்கி இறுதிவரை எதிர்க்கட்சிகள் மதிக்கும் ஆளுமையாகவே வாஜ்பாய் இருந்தார். காங்கிரஸ் அவருக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் பல சமயம் காங்கிரஸை வெளிப்படையாகப் பாராட்டியிருக்கிறார் வாஜ்பாய். அதேபோல, கட்சிக்குள் விமர்சனங்களை முன்வைத்தவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் கட்சிக்கும் இடையிலான எல்லையைப் பராமரிப்பதில் இன்றைக் காட்டிலும் மேம்பட்ட நிலையைக் கையாண்டவர்.
பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, வங்கதேசம் என்ற புதிய நாடு விடுதலை பெறக் காரணமாக இருந்த அந்நாளைய பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய தீரத்துக்காக ‘துர்கை’ என்று வாஜ்பாய் பாராட்டிப் பேசியதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். அதேபோல, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற முழக்கத்தோடு ரத யாத்திரையை அத்வானி தொடங்கியபோது, அவரை வழியனுப்பும் விழாவில் பேசிய வாஜ்பாய், “நீங்கள் போவது அயோத்திக்கு, கிஷ்கிந்தைக்கு அல்ல” என்று தொண்டர்களை ஜாடையாக எச்சரித்ததும் இங்கு குறிப்பிட வேண்டியது.
நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் அபாரமாக பணியாற்றினார் வாஜ்பாய். எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் இந்திரா காந்தி அடைத்தபோது, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் வாஜ்பாய். பிரகாஷ் சிங் பாதல், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருடன் சிறையில் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும் விடுதலைக்குப் பிறகு ஜனதா கட்சி ஆளுங்கட்சியாகவும் அந்த நாட்களையும் பயன்படுத்திக்கொண்டார்.
வலதுசாரி அரசியலின் தொடக்கம்
1977-ல் ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். வாஜ்பாய் வெளியுறவு அமைச்சரானார். காங்கிரஸ் முன்னெடுத்த கொள்கைகளுக்குப் பெரிய குந்தகம் ஏதும் நேராமல் செயலாற்றினார். இதுவே பின்னாளில் அவர் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படவும் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறவும் வழிசெய்தது. வெறுமனே வடநாட்டு கட்சியாகவும், பல கட்சிகளால் புறக்கணிப்படுவதாகவும் இருந்த பாஜகவை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான கட்சியாகவும் கூட்டணிக்கான தலைமைப் பண்பு கொண்டதாகவும் உருமாற்றிக்காட்டியது வாஜ்பாய்தான். பாஜகவைப் பிடிக்காதவர்கள்கூட ‘தவறான கட்சியில் உள்ள சரியான நபர்’ (right person in wrong party) என்று கூறுவர். 1998, 1999 தேர்தல்களில் இதுவே ஒரு முக்கியமான பேச்சாகவும் இருந்தது.
1995-ல் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாஜக, கர்நாடகத்திலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தென்னகத்திலும் கால் ஊன்றியது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே, “வாஜ்பாய்தான் எங்கள் தரப்புப் பிரதமர் வேட்பாளர்” என்று அத்வானி முன்கூட்டியே அறிவித்தார். 1995-ல் பாஜக மட்டும் அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்க அழைக்கப்பட்டது. என்றாலும், பிற கட்சிகள் ஆதரிக்க முன்வராததால் பதவியிலிருந்து விலகினார் வாஜ்பாய். பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கட்சிகளை இணைத்தார்.
பொதுச் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி கட்சிகளை ஒரு குடைக்குள் கொண்டுவந்து ஒரு புதிய கூட்டணியைச் சாத்தியப்படுத்தினார் வாஜ்பாய். ‘காஷ்மீருக்கு தனி அந்தஸ்து ரத்து, அனைவருக்கும் பொது சிவில் சட்டம், அயோத்தியில் ராமருக்குக் கோயில்’ போன்ற பாஜகவின் அடிப்படையான கொள்கைகளை விலக்கி வைத்துவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் பிறகட்சிகளுடன் விவாதித்து ஒப்புக்கொள்ளப்பட்ட பொது செயல்திட்டத்துக்கு மட்டுமே முன்னுரிமை தந்தார். கூட்டணித் தலைவர்களைச் சமமாக நடத்தினார். வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக இருந்தார். முதல் முறை 1996-ல் 13 நாட்கள். அப்போது பெரும்பான்மைக்கான இடங்கள் இல்லாமல் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. பாஜக 161 இடங்களிலும் தோழமைக் கட்சிகள் 26 இடங்களிலுமாக மொத்தம் 187 இடங்களை மட்டுமே பிடித்தன. பிற கட்சிகள் ஆதரிக்க முன்வரவில்லை. இரண்டாவது முறை 1999 -ல். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக தன்னுடைய ஆதரவைத் திரும்பப் பெற்றதால் அவருடைய ஆட்சி கலைந்தது. மூன்றாவது முறை 1999 -ல். இம்முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தவர் ஐந்து ஆண்டுகளும் ஆட்சியில் இருந்தார்.
ஆட்சிக் காலம்: மறுபார்வை
தனது ஆட்சிக் காலத்தில் கிராமங்களுக்குச் சாலை வசதிகளைச் செய்து தருவதை முக்கியமான பணியாகக் கருதிச் செய்தார். தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி, விரிவுபடுத்தினார். சர்வ சிக்ஷா அபியான் திட்டம் முலம் நாடு முழுக்க ஆரம்பக் கல்வி விரிவடைய நடவடிக்கை எடுத்தார். தொழில், வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டுவந்தார். அவருடைய ஆட்சியில் ஜிடிபி வளர்ச்சி 6% முதல் 7% வரை இருந்தது.
வங்கதேசம், சீனம், பாகிஸ்தான் ஆகிய பக்கத்து நாடுகளுடன் உறவுகளைச் சீராக்க முன்னுரிமை தந்தார். பாகிஸ்தானுடனான பகைமையைக் குறைத்து நட்பை வளர்க்க லாகூருக்கு தில்லியிலிருந்து பஸ்ஸில் பயணம் சென்றார். நவாஸ் ஷெரீபைச் சந்தித்தார். பிறகு ஆக்ரா உச்சி மாநாடு மூலம் புதிய சமரச உடன்பாட்டுக்கும் கடைசி அடி வரை நடந்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் தலையீடு காரணமாக அதிபர் பர்வேஸ் முஷாரப் பின்வாங்க அந்த முயற்சியில் தோல்வி கண்டார். கார்கில், திராஸ் மலைப் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவியபோது எதிர் தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் ராணுவத்தைப் பின்வாங்கவைத்தார். 2003-ல் சீனத்துக்குச் சென்று நட்புறவை வளர்த்துக்கொண்டார். திபெத்தைச் சீனத்தின் பகுதியாக அங்கீகரித்தார். பதிலுக்கு சிக்கிமை இந்தியப் பகுதியாக சீனமும் அங்கீகரித்தது. தன்னுடைய அரசியல் காலத்தில் மூன்று பெண் தலைவர்களால்தான் மிகப் பெரிய மன உளைச்சலை எதிர்கொண்டார் வாஜ்பாய். அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி. கூட்டணிக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் குடைச்சலைக் கொடுத்துக்கொண்டே இருந்தனர் மூவரும்.
காலம் தாண்டியும் வாஜ்பாய் மீது நீடிக்கவல்ல முக்கியமான விமர்சனங்கள் என்பது, பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்கு அவர் அனுமதி தந்ததும், தனி மனித உரிமைகளை மிகவும் நசுக்கிய ‘பொடா’ சட்டத்தைக் கொண்டுவந்ததும் என்று சொல்லலாம். அவருடைய ஒட்டுமொத்த ஆட்சிக் காலத்திலும் அவருக்கு நேர்ந்த பெரும் அவப்பெயர், 2002-ல் குஜராத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நடந்த மதக்கலவரம். வாஜ்பாயால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. “இது ராஜநீதி அல்ல” என்றுஅப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியைத் தன் அருகில் வைத்துக்கொண்டே கண்டித்தார் வாஜ்பாய். முதல்வர் பதவியிலிருந்து மோடியை அகற்றிடவும் அவர் விரும்பினார். ஆர்எஸ்எஸ் மற்றும் அத்வானியின் துணையுடன் வாஜ்பாயை எதிர்கொண்டார் மோடி.
அரசியலிலிருந்து ஓய்வு
கட்சிக்கு வெளியில் ஜனநாயகத்தைப் பராமரிப்பது என்பது வேறு. அது அந்தந்த நாட்டின் அரசியலமைப்பு, அரசியல் கலாச்சாரம், அப்போதைய காலச் சூழல் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அப்படி வெளியில் ஜனநாயகத்தை அனுமதிக்கும் தலைவர்களும்கூட உட்கட்சிக்குள் ஜனநாயகத்தை ஓரளவுக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே நம் நாட்டின் அனுபவம். வாஜ்பாய் விதிவிலக்கானவர். பிரதமராக அவர் இருந்த காலத்தில் கட்சியின் அசைக்க முடியாத இன்னொரு மையமாக அத்வானி இருந்தார். அடுத்தவரிசை தலைவர்கள் இருந்தனர். புதிய தலைமுறை தலைவர்களை ஊக்குவித்தார். இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று அடுத்தடுத்த நிலைத் தலைவர்கள் வளர்வதை அவர் ஊக்குவித்தார். மாநிலங்களில் தலைவர்கள் உருவாக இடம் கொடுத்தார்.
2004 தேர்தலை ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தை முன்வைத்து எதிர்கொண்டது பாஜக. அது எடுபடவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. முன்பே மூட்டுவலியால் அவதிபட்டுவந்த வாஜ்பாய்க்கு இந்தத் தேர்தல் தோல்வி மேலும் ஒரு அடியாக விழுந்தது. கட்சியைப் புனரமைக்க முடிவெடுத்திருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பும் வாஜ்பாயின் விலகலை எதிர்பார்த்தது. தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வாஜ்பாய், “இனி கட்சியை அத்வானியும் பிரமோத் மகாஜனும் ராம-லட்சுமணர்களாக இருந்து வழிநடத்துவார்கள்” என்றார். மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தார். நிதித் துறைச் செயலர், ரிசர்வ் வங்கி ஆளுநர், அரசின் நிதி ஆலோசகர், நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சர், பிறகு 10 ஆண்டுகள் பிரதமர் ஆகிய பதவிகளை வகித்த டாக்டர் மன்மோகன் சிங், வாஜ்பாய் மீது மிகுந்த மதிப்பும், அன்பும் கொண்டிருந்தார். ஆண்டுதோறும் வாஜ்பாயின் பிறந்த நாளன்று அவருடைய வீட்டுக்குச் சென்று நேரில் வாழ்த்து தெரிவிப்பவர்களில் மன்மோகனும் ஒருவர்.
நிதியமைச்சராக மன்மோகன் பதவி வகித்தபோது மூத்த பாஜக தலைவர் ஒருவர் பங்குச்சந்தை மோசடிக்காக மன்மோகனைக் கடுமையாகச் சாடி, அவர் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் மன உளைச்சல் அடைந்த மன்மோகன் பதவியிலிருந்து விலக விரும்பினார். இதுகுறித்து அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் வாஜ்பாயைத் தொடர்புகொண்டு பேசியபோது, மன்மோகனின் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார் வாஜ்பாய். உடனே மன்மோகனைத் தொடர்புகொண்டார். “மிகச் சிறந்த நிர்வாகியான நீங்கள் பதவியில் தொடர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
2001-ல் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இரு கால் மூட்டுகளையும் மாற்ற அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். பிறகு நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமானது. பக்கவாதம் ஏற்பட்டது. பேசும் ஆற்றலை இழந்தார். நினைவிழப்பு நோயும் தொற்றிக்கொண்டது. திருமணம் செய்துகொள்ளாதவரான வாஜ்பாய், தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவியின் மகளை வளர்ப்பு மகளாக ஏற்றார். அவருடைய பராமரிப்பில்தான் இருந்துவந்தார்.
1992-ல் பத்மவிபூஷண் விருதும் 1994-ல் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி விருதும் வழங்கப்பட்ட வாஜ்பாய்க்கு2015-ல் ‘பாரத ரத்னா’ விருதை வழங்கியது இந்திய அரசு. வங்கதேச விடுதலைக்கு உதவியவர் என்ற உயரிய விருதையும் அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது. வாஜ்பாயின் கவிதைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. மேரி இக்யாவன் கவிதாயே(ன்) (1995), சிரேஷ்ட கவிதா (1997), நயி திஷா -ஜகஜீத் சிங்குடன் ஆல்பம் (1995), கியா கோயா - கியா பாயா (1999), சம்வாத்னா - ஜகஜீத் சிங்குடன் ஆல்பம் (1995), 21 கவிதைகள் (2003) ஆகியவை கவிதைத் தொகுப்புகள். ஆட்சியாளர் என்பதைத் தாண்டி தன்னை ஒரு கவிஞன் என்று காட்டிக்கொள்வதில் வாஜ்பாய்க்குப் பெரும் விருப்பம் இருந்தது. ஆட்சியாளர்கள் நாடுகளை ஆள்கிறார்கள். கவிஞர்கள் காலத்தை ஆள்கிறார்கள். எப்படியும் காலம் உள்ளவரை வாஜ்பாய் நினைவுகூரப்படுவார்!
- வ.ரங்காசாரி,
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT