Published : 22 Aug 2018 09:32 AM
Last Updated : 22 Aug 2018 09:32 AM
ஆவணி மாதத் திருவோண நாள் - மாவேலிச் சக்ரவர்த்தி தன் குடிகளைக் காண வரும் நாள். தங்கள் மன்னனை பூக்கோலமிட்டுப் புத்தாடை உடுத்தி மலையாளிகள் வரவேற்கும் நாள். ஆனால், மாவேலி நாட்டின் மக்களை மழை வெள்ளம் பெரும் துயரில் ஆழ்த்திச் சென்றிருக்கிறது. கொண்டாட்டத்துக்குப் பேர் போன ஓணம் கொண்டாட்டம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
மழை குறைந்திருப்பதால் வெள்ளம் வடிந்துகொண்டிருக்கிறது. இயல்பு நிலை திரும்ப நீண்ட காலம் வேண்டி வரும். இதற்கிடையே, இந்த வெள்ளத்தின் பாதிப்பை எப்படிக் குறைத்திருக்கலாம் என்று ஊடகங்கள் விவாதித்துவருகின்றன.
பேரிடருக்குக் காரணம் என்ன?
மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியலைப் பாதுகாக்க 2011-ல் காட்கில் குழு வழங்கிய பரிந்துரைகளை, அடுத்தடுத்து வந்த கேரள அரசுகள் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப் பகுதிகளில் வேளாண்மையும், மலைப் பகுதிகளில் குவாரிகளும், வெள்ள வடிகால் பகுதிகளில் கட்டிடங்களும் குறைக்கப்பட்டிருந்தால் மக்களின் வாழிடங்களுக்குக் கடந்துவந்த வெள்ளத்தின் பாதிப்பையும் குறைத்திருக்கலாம். ஆனால், இதற்குக் கேரள அரசை மட்டும் குறை சொல்லிவிட முடியாது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் நீளம் 1,500 கி.மீ. இது குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய ஆறு மாநிலங்களின் வழி நீள்கிறது. எந்த அரசும் காட்கில் அறிக்கையின் எந்தப் பகுதியையும் நடைமுறைப்படுத்த முனையவில்லை. எல்லோரும் தத்தமது பகுதிகளின் வளத்தைப் பெருக்குவதிலும் மென்மேலும் நகர்மயமாக்குவதிலுமே மும்முரம் காட்டுகிறார்கள். எனில், அதற்காகச் சுற்றுச்சூழல் சமநிலையைக் காவு கொடுக்கலாகாது என்பதுதான் இயற்கை இந்த ஆறு மாநிலங்களுக்கும் இப்போது புகட்டியிருக்கும் கசப்பு மருந்து.
படிப்படியான நீர் வெளியேற்றம்
இடுக்கி அணையின் முழுக் கொள்ளளவும் சேகரம் ஆகும்வரை காத்திருக்காமல் முன்னதாகவே மதகுகளைத் திறந்திருக்க வேண்டும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. மழை தொடர்ச்சியாகப் பெய்ய வாய்ப்புள்ள காலங்களில் முழுக் கொள்ளளவை எட்டும் முன்னரே நீரைப் படிப்படியாக வெளியேற்றுவதும், குறைவான மழைக்குச் சாத்தியமுள்ள காலங்களில் கொள்ளளவை எட்டிய பிறகே மதகுகளைத் திறப்பதும் நல்ல நீர் மேலாண்மையாகும்.
ஜூலை மாதம் முதற்கொண்டே படிப்படியாக மதகுகளைத் திறந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அணையின் முழுக் கொள்ளளவும் எட்டிய பின் பேய் மழைக்கிடையே அணை நீரையும் வெளியேற்ற வேண்டிய நிலை வந்திருக்காது.
ஆனால், இதற்காக இடுக்கி அணையின் பொறியாளர்களைக் குற்றம் சொல்லிவிட முடியாது. படிப்படியாக நீரை வெளியேற்றுவதற்கு இடுக்கியில் முன்மாதிரி இல்லை. கடந்த 26 ஆண்டுகளில் அதன் மதகுகள் திறக்கப்பட்டதே இல்லை. இந்தக் காலத்தில் நீர்மட்டம் பல முறை உச்சநிலைக்கு அருகில் உயர்ந்திருக்கும்.
இதற்கு முன்பு 1992-ல் முழுக் கொள்ளளவையும் எட்டிய பிறகுதான் மதகுகள் திறக்கப்பட்டன. நீரைச் சேமிக்காமல் திறந்துவிட்டால் மின்உற்பத்தி பாதிக்கப்படும் என்கிற கவலை பொறியாளர்களுக்கு இருந்திருக்கலாம். இந்த மனப்பான்மை மாற வேண்டும். இது வெள்ளம் புகட்டும் இரண்டாவது பாடம்.
பெரியாறு அணையும் அரசியலும்
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்தை நோக்கித் திறந்துவிடப்பட்ட உபரி நீரைப் பற்றியும் பல விதமான கருத்துகள் பகிரப்படுகின்றன. பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி இருப்பது கேரளம். அணையின் நீரைப் பயன்படுத்துவது தமிழகம். 1979-ல் அணையின் உறுதிப்பாட்டைக் குறித்த அச்சம் கேரளாவில் எழுப்பப்பட்டது. அணையின் பாதுகாப்பை மேம்படுத்த நான்கு விதமான பணிகளை மேற்கொள்ள தமிழகம் முன்வந்தது.
பணிகள் நிறைவுறும் வரை உச்ச நீர்மட்டமான 152 அடியை 136 அடியாகக் குறைத்துக்கொள்ளவும் சம்மதித்தது. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகும் நீர்மட்டத்தை உயர்த்த கேரளம் சம்மதிக்கவில்லை. இரண்டு அரசுகளாலும் சமரசத்தை எட்ட முடியவில்லை. 2016-ல் உச்ச நீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளவும், அருகேயுள்ள சிற்றணை ஒன்றை மேம்படுத்திய பின்னர், 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் ஆணையிட்டது.
ஆகஸ்ட் 15 அன்று நீர்மட்டம் 142 அடியை எட்டியது. உபரி நீர் 13 மதகுகள் வாயிலாகத் திறந்துவிடப்பட்டது. இந்த வெள்ளமும் கேரளத்தின் அபரிமிதமான மழை வெள்ளத்தோடு சேர்ந்துகொண்டது. இந்தப் பாதிப்பை இரண்டு விதமாகக் குறைத்திருக்கலாம். நீர்மட்டம் 142 அடியை எட்டும் முன்னரே தமிழகப் பாசனத்துக்குத் தன்ணீரைத் திறந்துவிட்டிருக்கலாம். ஆனால், மீண்டும் மழை பொழியாவிடில் போராடிப் பெற்ற 142 அடிக்கு நீரைச் சேகரிக்க முடியாமல் போகும் என்ற அச்சம் பொறியாளர்களுக்கு இருந்திருக்கக்கூடும்.
இன்னொரு சாத்தியம் அணையில் நீரை 152 அடி வரை தேக்கியிருந்தால் உபரி நீரை கேரளத்துக்கு வெளியேற்றுவதைத் தவிர்த்திருக்கலாம். அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. பல வல்லுநர்களும் சான்றளித்திருக்கிறார்கள். ஆனால், உச்ச நீதிமன்ற ஆணையின்படி 142 அடிக்கு மேல் நீரைத் தேக்க முடியாது.
ஆக, இரண்டு வழிகளும் அரசியல் காரணங்களால் அடைபட்டுப் போயின. இனியேனும் இரண்டு மாநிலங்களும் அரசியல் கலக்காமல் பொறியில்ரீதியாக இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். இது முக்கியமான இன்னொரு பாடம்.
மழைநீர் வடிகால்
கடைசியாக, மிக முக்கியமான ஒரு காரணம் அதிகம் பேசப்படாதது. இந்தியாவின் பல நகரங்களிலும் மழைநீர் வடிகால்கள் முறையாக வடிவமைக்கப்படவில்லை. நூறாண்டுகளில் பெய்யக்கூடிய அதிக சாத்தியம் உள்ள மழையளவை நீரியல் நிபுணர்கள் ‘நூறாண்டு மழை’ என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே ‘பத்தாண்டு மழை’, ‘ஐம்பதாண்டு மழை’ என்பனவும் உண்டு.
ஒரு நகரத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மழையளவைக் கொண்டு இவற்றைக் கணக்கிடுவார்கள். இந்த வடிகால்கள் போய்ச்சேரும் பிரதான வாய்க்கால்கள் இருநூறாண்டு-மழையைக் கடத்திவிடக்கூடியவை. நகரமைப்பு என்பது இயற்கையின் போக்கில் மனிதன் மேற்கொண்டிருக்கும் ஒரு குறுக்கீடு. இதற்குத் தக்கதாக மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும்.
இன்றைய தினம் மாவேலி வருத்தத்துடன் திரும்பக்கூடும். ஆனால், தங்கள் மன்னனைப் போலவே பாதாளத்திலிருந்து மீண்டு வரக்கூடிய ஆற்றல் மலையாளிகளுக்கு உண்டு. கல்வி-கேள்வியில், நிர்வாகத்தில், மானுட வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலம் கேரளா.
நிவாரணப் பணிகள் நடைபெறும்போதே வெள்ளத்திலிருந்து பெற்ற பாடங்களை மலையாளிகள் பரிசீலிப்பார்கள், தக்கவற்றை நடைமுறைப்படுத்தவும் செய்வார்கள். அடுத்த திருவோண தினத்தில் மாவேலி விஜயம் செய்வார். பூக்கோலமிட்டுப் புத்தாடை உடுத்தி ஓண விருந்துடன் அவரை வரவேற்பார்கள் மலையாளிகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT