Published : 15 Aug 2018 09:03 AM
Last Updated : 15 Aug 2018 09:03 AM
கோடைகாலக் காற்றின் நுழைவாயில் கேரளம். சொல்லி வைத்ததுபோல, ஆண்டுதோறும் ஜூன் முதல் தேதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு நான்கு நாட்கள் முன்கூட்டியே தொடங்கியது பருவமழை. வழக்கத்துக்கு மாறாகக் கொட்டித் தீர்த்த மழையால் கடவுளின் சொந்த தேசமே வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
கேரளத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் மழை படிப்படியாகக் குறைந்துகொண்டிருந்தது. அதற்கு மாறாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்துக்கொண்டிருந்தது. இது கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சிக்கொண்டிருந்தார்கள் வேளாண் பொருளாதார அறிஞர்கள். ஆனால், இந்த ஆண்டு முந்திக்கொண்ட மழை, மொத்தத்தையும் நட்டக் கணக்கில் எழுதவைத்துவிட்டது.
நீர்சூழ் நிலவெளி
கேரளத்துக்கு இயற்கை அளித்த பெருங்கொடை மேற்குத் தொடர்ச்சி மலை. அதையொட்டி வனங்கள், ஆறுகள் என்று இயற்கையின் வலைப்பின்னல் இன்னமும் அங்கு பாதுகாக்கப்பட்டுவருகிறது. மலைத்தொடரையொட்டி வடக்கு தெற்காகவே கேரளா அமைந்திருப்பதால் தென்மேற்குப் பருவக்காற்றால் பருவமழையின் முழுப் பயனையும் அந்த மாநிலம் பெறுகிறது. வடக்கிலிருந்து தெற்காக வளபட்டணம், சாளியாறு, கடலுண்டிபுழா, பாரதபுழா, சாலக்குடி ஆறு, பெரியாறு, பம்பை, அச்சன்கோயில் ஆறு, கல்லாடையாறு என்று மாநிலம் முழுவதும் நதிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கிழக்கே உயரமான மலைப்பகுதிகள், நடுவே மேடான நிலப்பகுதி, மேற்குப் பகுதியில் சமவெளி என்று மூன்று வகையான நிலப்பரப்புகள். எனவே, கேரளத்தில் சிறிதும் பெரிதுமான 44 ஆறுகளில் மூன்றைத் தவிர மற்ற அனைத்தும் மேற்குத் திசை நோக்கி ஓடி அரபிக்கடலில் கலந்துவிடுகின்றன. ஆறுகளில் சரிபாதி 50 கிலோமீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டவை. இந்த ஆறுகளின் குறுக்கே 40 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 27 அணைகள் தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக கொள்ளளவு நிரம்பி, திறந்துவிடப்பட்டுள்ளன.
கேரளத்தின் வருடாந்திர மழையளவு 1,250 மில்லிமீட்டர் தொடங்கி 5,000 மில்லிமீட்டர் இருக்கும். இந்தியாவின் சராசரி மழையளவு 1,197 மில்லிமீட்டர் என்றிருக்கும் நிலையில் கேரளத்தின் சராசரி மழையளவு 3,107 மில்லிமீட்டராக இருக்கிறது. ஆண்டுக்கு 120-140 நாட்கள் கேரளத்தில் மழைப் பொழிவு இருக்கும். இடுக்கி மாவட்டத்தின் மலைப்பகுதிகள்தான் அதிக மழைப் பொழியும் பகுதிகள்.
மின்சக்தியின் ஆதாரம்
ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆர்ச் அணையான இடுக்கி அணை, கடல் மட்டத்திலிருந்து 2,043 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பெரியாற்றின் குறுக்கே செறுதோணி அருகே 36,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணைதான் கேரள நீர்மின்சக்தியின் ஆதாரம். இடுக்கி அணையின் நீர்மின் திட்டங்களிலிருந்துதான் கேரளத்தின் மூன்றில் இரண்டு பங்கு மின்தேவை பூர்த்திசெய்யப்படுகிறது. கனடா உதவியுடன் கட்டப்பட்ட இந்த அணையில் 1976 முதல் நீர் தேக்கப்பட்டுவருகிறது. தற்போது பெய்துவரும் கன மழையால், கொள்ளளவை எட்டியிருக்கும் இந்த அணையிலிருந்து முதன்முறையாக ஐந்து மதகுகளிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரே வெள்ளத்துக்குக் காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. 2015-ல் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து போதிய திட்டமிடலும் முன்னறிவிப்பும் இல்லாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதுபோலவே இடுக்கி அணையிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்ற அபாயத்தைக் காட்டிலும் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுமோ என்று அதிகாரிகள் கருதியிருப்பார்களேயானால் அது துரதிருஷ்டவசமானதுதான்.
‘99 வெள்ளம்’!
1924-ல் பெரும் வெள்ளத்தைச் சந்தித்தது கேரளம். அப்போது மூணாறுக்கு அருகிலிருந்த கரிந்திரி என்ற மலைக்குன்றே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 6,000 அடி உயரத்திலிருக்கும் மூணாறு பகுதி வெள்ளத்தில் மிதந்தது. கேரள நாட்காட்டியின்படி ‘99 வெள்ளம்’ என்று அழைக்கப்படும் வெள்ளப் பாதிப்பு அது. 94 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோன்ற வெள்ளம் கேரளத்தைப் புரட்டிப்போட்டிருக்கிறது.
எட்டு நாட்களாகக் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக, இடுக்கியில் மட்டுமின்றி எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் என்று வட பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. 40-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் உயிரிழந்திருக்கிறார்கள், 20,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருக்கின்றன, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடிழந்து நிற்கிறார்கள். காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், வீடுகளுக்கும் விளைநிலங்களுக்கும் ஏற்பட்ட சேதம் என்று எங்கெங்கும் இழப்புகள். தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் என்று 10,000 கிலோமீட்டர் அளவில் சாலைகள் பழுதடைந்துள்ளன.
வெள்ளப் பாதிப்புகளால் தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயமும் இருக்கிறது. அதற்கும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிபா வைரஸ் ஏற்படுத்திவிட்டுப் போன பீதியிலிருந்து இப்போதுதான் மீண்டுவந்திருக்கிறது கேரளம். அதற்குள் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்வது பெரும் சுமை.
உதவிக்கரம் நீட்டுவோம்
மீட்புப் பணிகளுக்கும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கும் ரூ.3,000 கோடி தேவைப்படும் என்று தெரிவித்திருக்கிறார் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக். மத்திய அரசு உடனடியாக ரூ.100 கோடியை நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறது. மேலும், ரூ.100 கோடி வழங்குவதாகவும் உறுதியளித்திருக்கிறது. தமிழக அரசு ரூ.5 கோடி அளித்திருக்கும் நிலையில், திமுக ரூ.1 கோடி நிதியை வழங்கியிருக்கிறது. தமிழகத்தின் மற்ற அரசியல் கட்சிகளும் தனியார்த் துறை நிறுவனங்களும் அதைத் தொடர வேண்டும்.
கனமழைக்கு இன்னும் சில நாட்கள் தொடரும் என்றே வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளத்தின் அருகமை மாநிலம் தமிழ்நாடு. ஒரு மொழியில் கிளைத்த ரத்த சொந்தம். உணவைப் பகிர்ந்துகொள்ளும் நாம், துயரத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நேரமிது. கேரளத்தின் மறுகட்டமைப்புப் பணிகளில் தமிழக அரசு தோளோடு தோள் நிற்க வேண்டும். அரசு மட்டுமல்ல நாமும்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT