Published : 07 Aug 2018 02:15 PM
Last Updated : 07 Aug 2018 02:15 PM

அடிப்படைகளை மாற்றினால்தான் தேர்வு மோசடிகளை நிறுத்த முடியும்! - முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தின் மதிப்புக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்திருக்கும் தேர்வுத் துறை மோசடிகள் அதிர்ச்சிதருகின்றன. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சில மாணவர்களிடமிருந்து 10,000 ரூபாய் வரையில் லஞ்சம் வாங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பல மாணவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கல்வித் துறைக்குக் களங்கம் விளைவிக்கும் இந்த முறைகேடுகளுக்குக் காரணம் என்ன? இவற்றை எப்படிக் களைவது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் மு.அனந்தகிருஷ்ணனிடம் பேசியபோது...

தேர்வுத்தாள்கள் சரியான முறையில் திருத்தப்பட்டால் மறுமதிப்பீட்டுக்கான அவசியங்களே இருக்காது இல்லையா?

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு என்பது பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, பள்ளிக்கல்வியிலும்கூட இருக்கிறது. எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் தேர்வுகள் முடிந்த பிறகு, ‘எனக்கு இவ்வளவு மதிப்பெண்கள் வந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் வரவில்லை. மறுகூட்டல் செய்யுங்கள் அல்லது மறுமதிப்பீடு செய்யுங்கள்’ என்று பள்ளிக்கூட மாணவர்களும் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான வழிமுறைகள் சிபிஎஸ்இ-யிலும் உண்டு.

மாநில பாடத்திட்டத்திலும் உண்டு. அதைப் போலவே மற்ற கல்லூரிகளிலும் இருக்கிறது. மறுகூட்டல் என்ற நடைமுறையில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. மறுகூட்டல் செய்வதன் மூலமாக மாணவர்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்திலிருந்து நாமும் எப்படிப் பயன்பெறலாம் என்று சில ஆசிரியர்களும் அலுவலர்களும் குறுக்குவழிகளைச் சிந்திக்கிறபோதுதான் பிரச்சினை வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அதில் அங்கம் வகிக்கும் கிண்டி, எம்.ஐ.டி, அழகப்பா ஆகிய கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மறுகூட்டல் செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. காரணம், அந்த மாணவர்கள் உடனே மற்ற பேராசிரியர்களிடம் ‘நான் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளேன், அதற்காகப் பணம் கேட்கிறார்கள்’ என்று சொன்னால் உடனே அது எல்லோரது காதுகளையும் எட்டிவிடும்.

தவறுசெய்பவர்கள் மாட்டிக்கொள்வார்கள். ஆனால், பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பெற்ற உறுப்புக் கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களுக்கு எங்கு போய் சொல்வது என்று தெரியாது. குறிப்பாக, அப்படி இணைக்கப்பெற்ற கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைவாகவும் இருந்திருக்கும். எப்படியாவது மதிப்பெண் பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களுக்கு இருக்கும். எல்லா உறுப்புக் கல்லூரி மாணவர்களும் தவறுசெய்ய மாட்டார்கள். அப்படிச் செய்யும் சிலரும் இருக்கிறார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு பேராசிரியர்களோ கல்லூரி முதல்வர்களோ மற்ற அலுவலர்களோ எப்படிப் பணம் செய்வது என்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு முயற்சிதான் தற்போது நடந்திருக்கிறது.

இனிமேல் இப்படியொரு முறைகேடு நடக்காமல் எப்படித் தவிர்ப்பது?

முதலாவதாக, தற்போது அண்ணா பல்கலைக்கழக முறைகேட்டில் யார் யாரெல்லாம் பங்கேற்றிருக்கிறார்கள் என்று உறுதிசெய்யப்பட்ட பிறகு, அவர்களைப் பணிநீக்கம் செய்வதோடு விட்டுவிடாமல், சிறைத் தண்டனையும் அளிக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோலச் செய்தால் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று அறிவுறுத்த வேண்டும்.

இரண்டாவதாக, முறைகேடு எப்படியெல்லாம் நடந்தது, எந்தெந்த மாதிரியான உறுப்புக் கல்லூரி மாணவர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள், இந்த மோசடியை யார் யார், எப்படிப்  பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதையெல்லாம் கண்டறிவதற்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழு ஆய்வுசெய்து இனிமேல் இதுபோல் மீண்டும் நடக்காமலிருக்கப் பரிந்துரைகளைச் செய்ய வேண்டும். அந்தப் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக நடைமுறைகளின்படி தேர்வுத் துறைக் கட்டுப்பாட்டாளர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவரது பணிகளைக் கண்காணிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு இருக்கிறது அல்லவா?

அண்ணா பல்கலைக்கழக முறைகேட்டைப் பொறுத்தவரை நாம் முக்கியமாகக் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம் இது. இதற்கு முன்பு பதவியிலிருந்த துணைவேந்தர் ஒருவர்,  எக்கச்சக்கமாகப் பணம் வாங்கிக்கொண்டு ஆசிரியர்களையும் அலுவலர்களையும் நியமித்திருந்தார். அவரால் அப்படி நியமிக்கப்பட்டவர்கள் அந்தப் பணத்தைத் திரும்ப எடுப்பதற்காக, எந்தெந்த வழிகளில் எல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அதையெல்லாம் பயன்படுத்திக்கொண்டார்கள்.. துணைவேந்தர் இல்லாத காலத்தில், ஒருங்கிணைப்புக் குழுவில் இருக்கும் அரசு உயர் அதிகாரிகளும்கூட நேர்மையற்றவர்களாக நடந்துகொள்கிறார்கள். எனவே, அவர்களையும் கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொண்டு முறைகேடுகள் தொடர்ந்து நடக்கின்றன.

பல்கலைக்கழகத் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகளாக இருப்பதால்தான் இந்தப் பிரச்சினைகள் வருகின்றன என்று எடுத்துக்கொள்ளலாமா?

தேர்வுகளை எந்த முறையில் நடத்தினாலும் சரி, சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் ‘அப்ஜெக்டிவ்’ முறையில் நடத்தினாலும் சரி, ஊழலுக்கான வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எனவே, அடிப்படைக் காரணங்களைத்தான் மாற்றியமைக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவிவகித்தவர் நீங்கள். அப்போதைய காலகட்டத்தில் மறுமதிப்பீடு முறைகள் எப்படி இருந்தன?

நான் துணைவேந்தராக இருந்தபோது மறுமதிப்பீடு என்ற நடைமுறையே இல்லை. அப்போது உறுப்புக் கல்லூரிகளும் கிடையாது. தேர்வு முடிவு வெளிவந்தவுடன் திருத்தப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று ஆசிரியர்களிடம் அறிவுறுத்தியிருந்தேன். அரை மணி நேரம் மாணவர்களிடம் விடைத்தாள்களைப் படிக்கக் கொடுத்து, எங்கெல்லாம் அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.. மதிப்பீட்டாளர் தவறு செய்திருந்தாலும் அதைச் சுட்டிக்காட்டும் வாய்ப்பாகவும் அது இருந்தது.

மாணவர்கள் திரும்பவும் தவறு செய்யக் கூடாது என்பதுதான் தேர்வின் நோக்கமாக இருக்க வேண்டும். அவர்கள், தேர்வில்  வெற்றிபெறுகிறார்களா, தோல்வியடைகிறார்களா என்பதல்ல தேர்வின் நோக்கம். மாணவர்கள் தேர்வை எழுதி முடித்த பிறகு, தனக்குத் தெரிந்திருக்க வேண்டியது என்ன, தெரியாதது என்ன, எந்த இடத்தில் தவறு நேர்கிறது என்று அவர்களுக்குப் புரிய வேண்டும். அதை அவர்களே தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் பிரதிகளைப் பெறுவதுதானே சரியான முறையாக இருக்க முடியும்?

இப்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவ்வளவு பேருக்கும் பிரதி எடுத்துக்கொடுக்கிற அளவுக்குத் தொழில்நுட்பமும் இப்போது வளர்ந்திருக்கிறது. திருத்தப்பட்ட விடைத்தாள் தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கென்று ஒரு கட்டணத்தை விதிக்கலாம். திருத்தப்பட்ட விடைத்தாளின் பிரதியை இணையதளத்திலேயே ‘பிடிஎஃப்’ வடிவத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள வகைசெய்யலாம்.

மாணவர்கள் தேர்வின்போது தாங்கள் செய்யும் தவறுகளைத் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக உடனடியாக ஒரு குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, உடனடியாக அதை நடைமுறைப்படுத்த வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x