Published : 10 Aug 2018 09:33 AM
Last Updated : 10 Aug 2018 09:33 AM
சமீபத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரு விசேஷப் பரிசோதனையை நடத்தியது. இதை வைத்துப் பார்த்தால், இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கட்டத்தை எட்டிவிட்டதோ என்று தோன்றும்.
அந்தச் சோதனை என்ன என்று கவனிப்போம். ராக்கெட்டின் செயற்கைக்கோளுக்குப் பதில் இரு விண்வெளி வீரர்கள் அடங்கிய விண்கலம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். உயரே கிளம்ப வேண்டிய நேரத்தில் ராக்கெட்டில் கோளாறு என்றால், அந்த இருவரையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும்.
அக்கட்டத்தில் ஆணை பிறப்பித்தால் விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும் விண்கலப் பகுதி மட்டும் ராக்கெட்டிலிருந்து தனியே பிரிந்து பத்திரமாக வேறு திசையில் பாய்ந்து பாராசூட்டின் உதவியுடன் கடலில் போய் மெல்ல விழும். விண்வெளி வீரர்கள் அடங்கிய விண்கலத்தைக் கடலிலிருந்து மீட்டுவிடலாம். இது விண்வெளி வீரர் மீட்பு ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனையைத்தான் சமீபத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியது. இதில் முக்கிய வித்தியாசம் ராக்கெட்டின் முகப்பில் வைக்கப்பட்ட விண்கல மாடலில் விண்வெளி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. மாறாக, வெறும் காலிக் கூடு மட்டுமே இடம்பெற்றிருந்தது. அது கடலில் போய் விழுந்தது.
ஏற்பாடுகள் முழுமையடையவில்லை
1983-ல் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டில் இப்படிக் கடைசி நிமிடத்தில் கோளாறு ஏற்பட்டபோது ராக்கெட்டின் உச்சியில் இருந்த இரு ரஷ்ய வீரர்கள் இவ்விதம் மீட்கப்பட்டனர். அந்த இருவரும் அடங்கிய விண்கலம் தனியே பிரிந்துசென்ற நான்கு வினாடியில் ராக்கெட் தீப்பிடித்து வெடித்தது.
இஸ்ரோ நடத்திய ஒத்திகை இயல்பாகச் சில கேள்விகளை எழுப்பும். இந்திய விண்வெளி வீரர்களை உயரே அனுப்பும் கட்டத்தை இஸ்ரோ எட்டிவிட்டதன் காரணமாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதா என்று ஐயம் எழும். உண்மையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இந்திய அரசால் தயாரிக்கப்படவில்லை. அதற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இது ஒன்றும் அவசரமான விஷயம் அல்ல என்பதால், மத்திய அரசு இதற்கான திட்டத்துக்குப் பணம் ஒதுக்காமல் உள்ளது என்று கூறலாம்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதானால் அதற்குப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டாக வேண்டும். முதலாவதாக, தகுந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டு அது தயாரிக்கப்பட்டாக வேண்டும். விண்வெளி வீரர்களுக்கான விசேஷ உடை தயாரிக்கப்பட்டாக வேண்டும். அடுத்து தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து விண்வெளிப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்றுவித்தாக வேண்டும். இதெல்லாம் இனி மேல்தான் நடந்தாக வேண்டும். விண்கலத்தை உருவாக்குவது என்பது ஒரு பெரிய பிரச்சினை. அது தயாரிக்கப்பட்ட பின்னர் அதில் முதலில் எலி, முயல், நாய் போன்ற பிராணிகளை வைத்து அனுப்பிச் சோதித்தாக வேண்டும்.
விண்கலமும் தயார், விண்வெளி வீரர்களும் தயார் என்ற நிலை ஏற்பட்ட பின்னர், எடுத்த எடுப்பில் இந்திய வீரர்கள் விண்வெளிக்குச் சென்றுவிட மாட்டார்கள். அதற்கு முன்னதாக அரைச் சுற்று இருக்கும். அதாவது, உயரே சென்றுவிட்டு பூமியை முழுதாகச் சுற்றாமல் பாதி சுற்றிவிட்டுக் கீழே இறங்குவர். எனவே, இந்திய வீரர் விண்வெளிக்குச் செல்ல இப்படியாகப் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். இதற்கு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் பிடிக்கலாம்.
வரிசைக்கிரமம் அவசியமில்லை
இதிலெல்லாம் வரிசைக்கிரமம் இருந்தாக வேண்டும் என்பதில்லை. அப்படியான கொள்கையைத்தான் இஸ்ரோ ஆரம்பத்திலிருந்து பின்பற்றிவந்துள்ளது. இந்தியா சொந்தமாகத் தயாரித்த முதல் ராக்கெட் எஸ்.எல்.வி-3 என்பதாகும். 1979 ஆகஸ்ட் மாதம் அது விண்ணில் செலுத்தப்பட்டபோது அது தோல்வியில் முடிந்தது. அந்த ராக்கெட்டின் முகப்பில் இருந்த செயற்கைக்கோளின் எடை 35 கிலோ. 1980-ல்தான் எஸ்.எல்.வி-3 ராக்கெட் வெற்றி கண்டது.
முதலில் சக்திமிக்க ராக்கெட்டை உருவாக்கிக்கொண்ட பிறகுதான் எடைமிக்க செயற்கைக்கோள்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா காத்திருக்கவில்லை. எஸ்.எல்.வி-3 ராக்கெட் உருவாக்கப்பட்டதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே நாம் 360 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை உருவாக்கி அதை ரஷ்யாவுக்கு எடுத்துச்சென்று ரஷ்ய ராக்கெட் மூலம் உயரே செலுத்தச் செய்தோம். அதாவது, செயற்கைக்கோள் தயாரிப்பு விஷயத்தையும் ராக்கெட்டை உருவாக்கும் விஷயத்தையும் நாம் முடிச்சுப்போடவில்லை.
இப்போது இந்தியாவிடம் இந்திய வீரர்கள் பயணம் செய்வதற்கான விண்கலம் எதுவும் கிடையாது. எனினும், அது தொடர்பான பல ஒத்திகைகளை இஸ்ரோ ஏற்கெனவே நடத்தி முடித்துவிட்டது. பொதுவில், விண்வெளி வீரர்கள் பணி முடிந்து பூமிக்குத் திரும்புகையில் விண்கலப் பகுதியின் வெளிப்பகுதி பயங்கரமாக சூடேறி தீப்பிடிக்கும். இந்தத் தீ உள்ளே இருக்கிற விண்வெளி வீரர்களைத் தாக்காமல் இருக்க விசேஷ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை இஸ்ரோ ஏற்கெனவே வெற்றிகரமாக உருவாக்கிவிட்டது.
தயாராகிவரும் இந்தியா
எனவே, இந்தியா எதிர்காலத்தில் விண்கலத்தை உருவாக்கும்போது இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவிடம் தயாராக இருக்கும். 2007 ஜனவரியில் எஸ்.ஆர்.இ. பரிசோதனை மூலம் இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. இஸ்ரோ 2014-ல் காலியான விண்கலப் பகுதி வங்கக் கடலில் வந்து விழும்படிச் செய்து, அதை மீட்கும் ஒத்திகையை வெற்றிகரமாக நடத்தியது.
மனிதர்களை விண்வெளிக்கு உயரே அனுப்புவதற்கான ராக்கெட் இந்தியாவிடம் இல்லாத நிலையிலேயே இவ்வளவும் நடந்தன. இந்தச் சூழலில், இந்தியா உருவாக்கி வந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3 ராக்கெட் 2017 ஜூன் மாதம் வெற்றிபெற்றது. இது இருவர் அடங்கிய விண்கலத்தை 300 கிலோ மீட்டர் உயரத்துக்குக் கொண்டுசெல்லும் திறன் படைத்ததாகும். இதையடுத்து, இந்தியாவிடம் மனிதர்களை உயரே அனுப்புவதற்கான ராக்கெட்டும் இப்போது தயாராக உள்ளது.
மத்திய அரசு இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்காது என்றே தோன்றுகிறது. அப்படி ஒதுக்கினாலும், அதைத் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் இந்திய வீரர்கள் விண்வெளிப் பயணத்தைத் தொடங்குவார்கள். மொத்தத்தில் நாம் குறைந்தது இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்!
- என்.ராமதுரை, எழுத்தாளர்.
தொடர்புக்கு:
nramadurai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT