Published : 06 Jul 2018 09:31 AM
Last Updated : 06 Jul 2018 09:31 AM
வி
மானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கும் சூரியனை நோக்கி ‘உனக்குப் பக்கத்தில் வருவேன் நான்’ என்ற மானுடத்தின் குரலை அவை சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
நீண்ட பயணங்களில் விமானத்தின் ஜன்னலோடு ஒன்றிவிடுகையில் ஏதோ ஒரு கணத்தில் ஜன்னல் வழியே வெளியே நீட்டியிருக்கும் கைகளாக இறக்கைகள் மாறிவிடுவதை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். மேகக் கூட்டங்களுக்குள் விமானம் நுழையும்போதெல்லாம், வான் வெளியில் அளையும் விரல் இடுக்குகளில் மேகம் சிக்கிச் செல்வதான உணர்வைத் தருகின்றன இறக்கைகள்.
என் பக்கத்து இருக்கையில் ஒரு இளம் சீக்கியர் அமர்ந்திருந்தார். நல்ல உயரம். வெளுப்பு. அவருடைய இரு கைகளையும் பச்சை டாட்டூக்கள் ஆக்கிரமித்திருந்தன. காதில் இயர்போன் மாட்டியபடி வந்தவர் இசையிலேயே வெகுநேரமாக மூழ்கியிருந்தார். விமானம் மேலெழும்பியபோது ஒரு ஹாய் சொன்னார். இருக்கையில் முதுகை வசதியாகச் சாய்த்துக்கொண்டவர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். நான் மேகக் கூட்டத்துடனான சுவாரஸ்யமான விளையாட்டில் மூழ்கினேன்.
இந்தப் பயணத்தில் அபூர்வமான மேகக்காட்சி ஒன்றைக் கண்டேன். ஐரோப்பிய கண்டத்துக்கு மேல் விமானம் பறந்தபோது, அந்த மேகக் கூட்டத்தினுள் விமானம் நுழைந்தது. மிக நீண்ட வெண்பஞ்சுப் படலம். விமானத்தின் இறக்கைகள் அதைக் கிழித்து முன்னகர்ந்த நீண்ட நேரம் விமானம் தடதடத்துக்கொண்டே இருந்தது. நிலத்திலிருந்து பார்க்க அந்த மேகம் எவ்வளவு பெரிதானதாக, என்ன வடிவிலானதாக, என்ன நிறத்திலானதாக இருக்கும் என்று தோன்றியது.
மேகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைமைகள் உண்டு. மேகத்தின் தோற்றம் – அதன் அடர்த்தி, வடிவம், வண்ணம், அமைப்பு என்று பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் இந்த வகைமைப்படுத்தலை மேற்கொள்கிறார்கள். மேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் பிரிடோர் பின்னி நினைவுக்குவருவார்.
பிரிடோர் பின்னி ஒரு பிரிட்டிஷ்காரர். புதிய வகை மேகம் ஒன்றை அவர் அடையாளம் கண்டார். மேகங்களை வகைமைப்படுத்தும் சர்வதேச வானிலை அமைப்பு இதற்கென மேக அட்லஸ் ஒன்றை வெளியிடுகிறது. தன்னுடைய மேகத்தையும் அது அங்கீகரிக்க வேண்டும் என்று நீண்ட காலம் போராடிவந்தார் பிரிடோர் பின்னி. இயற்கையை அர்த்தப்படுத்துவது என்பது மனித இனம் தன்னையே அர்த்தப்படுத்திக்கொள்வதுதான். நீண்ட காலமாக புதிய வகைமை எதையும் அங்கீகரிக்காத சர்வதேச வானிலை அமைப்பு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ல் புதிய மேக அட்லஸை வெளியிட்டது. 11 புதிய வகை மேகங்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. பிரிடோர் பின்னி கண்டறிந்த வகைமையும் அதில் இடம்பெற்றதா என்பது தெரியவில்லை.
விமானப்பெண் வந்தார். “என்ன உணவு வேண்டும்?” என்றார். எல்லாப் பயணங்களிலும் கேட்பதுபோல “மீனுணவு” என்றேன். எல்லாப் பயணங்களிலும் சொல்லப்படுவதுபோல “அது மட்டும் இல்லை” என்றார். விமான நிறுவனங்கள் இணையத்தில் காட்டும் சாப்பாட்டுப் பட்டியலில் ‘மிதப்பன, நடப்பன, பறப்பன’ என எல்லாம் இடம்பெற்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்களுக்குத் தோதான ஜீவன் கோழி. ஊரில் உள்ள உணவகம் என்றால், நாட்டுக்கோழி வேண்டும் என்பேன். நடுவானில் இந்த அட்டூழியம் எல்லாம் நடக்காது என்பதால் “உங்கள் விருப்பம்” என்றேன்.
சீக்கிய இளைஞர் இப்போது கண் விழித்தார். முன்னதாக மது பரிமாறப்பட்டபோது பிரெஞ்சு ஒயினுக்காக அவர் கண் விழித்தார். மூன்று மடக்கில் கோப்பையைக் கவிழ்த்துவிட்டு அப்படியே சாய்ந் துகொண்டார். இப்போது இயர்போனைக் கழற்றிவிட்டு பேசலா னார். அவருடைய பெயர் சரண்ஜித் சிங். லண்டனில் அவருடைய குடும்பம் இரு தலைமுறைகளுக்கு முன் குடியேறியிருக் கிறது. மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார். பாட்டியாலாவிலுள்ள உறவினர் திருமணத்துக்கு வந்துவிட்டு லண்டன் திரும்புகிறார்.
அவருடைய அறிமுகம் உற்சாகம் தந்தது. உலகம் முழுக்க விரவியுள்ள இந்தியர்களில் இன்று செல்வாக்கான சமூகம் பஞ்சாபிய சமூகம். பிரிட்டனிலும் அவர்களுடைய எண்ணிக்கை அதிகம் – பிரிட்டிஷ் இந்தியர்களில் கிட்டத்தட்ட சரிபாதி. இந்தியாவுக்கு வெளியே கனடாவுக்கு அடுத்து, பஞ்சாபிகள் அதிகம் வாழும் நாடு இன்று பிரிட்டன். அவருடனான உரையாடல் பிரிட்டனிலுள்ள இந்தியச் சமூகத்தின் உள் முகங்களை அறிந்துகொள்ள உதவும் என்று தோன்றியது.
“பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்திலேயே பஞ்சாபிகள் பிரிட்டனில் குடியேறுவது தொடங்கிவிட்டது அல்லவா, பிரிட்டனைப் பொறுத்தமட்டில் இன்றைக்கு நாங்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் எல்லாம் சொந்த ஊர்ச் சூழலை உருவாக்கியிருக்கிறோம். லண்டனில் இருக்கும்போது சவுத்தால் பகுதிக்குப் போய் வாருங்கள். பஞ்சாப் சூழல் இருக்கும்.
“1853-ல் மகாராஜா துலீப் சிங் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அது தொடங்கி பஞ்சாபிகள் வருகை இங்கே அதிகரித்தது. பிரிட்டிஷ் ராணுவத்தில் நியமிக்கப்பட்ட பஞ்சாபிகள் இங்கே குடியேறியபோது கூடவே வீட்டு வேலைக்காக ஒரு பெரும் கூட்டம் வந்தது. அப்புறம், மாணவர்கள் படிக்க வந்தார்கள்.
“1940 -1950 காலகட்டம் இதில் முக்கியமானது என்று சொல்லலாம். உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் பெரிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்தியாவில் பிரிவினை நடந்தது. ஒரு பெரும் தொகுதி பஞ்சாபிகள் இங்கே வர இது வழிவகுத்தது. அடுத்து, 1970-1980 காலகட்டத்தில் கென்யாவும் உகாண்டாவும் சுதந்திரம் அடைந்ததை அடுத்து, கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்த பஞ்சாபிகள் பெருமளவில் குடிபெயர்ந்தார்கள்.
“கீழ்நிலை வேலைகளிலிருந்து கஷ்டப்படுவது என்ற நிலையி லிருந்து கடந்த மூன்று தலைமுறைகளில் வேகமாக வெளியேறி மேல் நோக்கி வருகிறது பஞ்சாபிய சமூகம். இன்று பிரிட்டனில் உள்ள முக்கியமான வணிகச் சமூகங்களில் பஞ்சாபிய சமூகமும் ஒன்று. சொந்த நாட்டு உணர்வுடேனேயே என்னைப் போன்றவர்கள் இன்று பிரிட்டனில் இருக்கிறோம்.”
எந்த விஷயத்தையும் துல்லியமான எண்ணிக்கை விவரங்களோடு அவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. “நீங்கள் உள்ளூரில் வரலாற்றை மறந்துவிட்டு இருக்கலாம். வெளியூரில் வரலாறுதான் உங்களை வடிவமைக்கும்” என்றார்.
“உங்களுடைய இன்றைய நினைப்பில் இந்தியா என்னவாக இருக்கிறது?”
“நான் நினைப்பதை அப்படியே சொல்லலாமா?”
“தாராளமாக.”
“பிரிட்டனிலிருந்து யோசிக்கையில் ஒரு நெருக்கம் தோன்றும். இந்தியா பக்கம் வந்தால் இனி இந்தப் பக்கமே திரும்பக் கூடாது என்றாகிவிடும். இப்போதும் அதே நினைப்பில்தான் திரும்பு கிறேன். சக மனிதர்களைப் பற்றிய அக்கறையே இல்லாதவர்களைக் கொண்ட நாடாக அது இருக்கிறது என்னுடைய பிரதான மான கவலை. உங்களைச் சங்கடப்படுத்தும் இந்தப் பதிலுக்காக நீங்கள் மன்னிக்க வேண்டும்.”
நான் புன்னகைத்தேன். “எனக்கு ஒரு சந்தேகம், இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்தியச் சமூகத்தைப் பெயரளவில் ஒன்றாகக் குறிப்பிட்டாலும் அதில் பல பிளவுகள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணமாக, புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்பது இந்தியத் தமிழர் – ஈழத் தமிழர் என்ற வகைமைப்பாட்டில் இயங்குகிறது. இரண்டுக்கும் இடையில் அதிகம் உறவாடல் இல்லை. மிக ஒற்றுமையானதாகக் கருதப்படும் ஈழத் தமிழ்ச் சமூகத்திலும் சாதிப் பிளவுகள் உண்டு. பஞ்சாபி சமூகம் எப்படி?”
“சீக்கியர் – சீக்கியரல்லாதோர் என்ற பிளவுண்டு. சீக்கியருக்குள்ளுமேகூட ஏராளமான சாதிப் பிரிவினைகள் உண்டு. ஓரளவுக்குக் கடக்க முற்படுகிறோம். பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்த பஞ்சாபியரில் பெருமளவினர் முஸ்லிம்கள். ஆனால், வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு பஞ்சாபி அடையாளத்தை வளர்க்க விரும்புகிறோம். மொழிதான் இங்கே இணைப்புச் சங்கிலி. பிரிட்டனில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இன்று பஞ்சாபி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆங்கிலம் நமக்கு பிழைப்பு மொழி. பஞ்சாபியே அடையாள மொழி - உயிர் உறவு மொழி என்பதை வலிறுத்துகிறோம்.”
“இப்போது எனக்கு ஒரு சந்தேகம். சொந்த நாட்டு உணர்வுடன் உலகுணர்வுக் கலாச்சாரத்துக்கும் பிரிட்டன் போன்ற நாடுகள் இடம் அளிக்கும் சூழலில், ஏன் பிரத்யேக சமூக அடையாளம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது?”
“இது சிக்கல்தான்…” அவர் வாய் விட்டு சிரித்தார். அடுத்தச் சுற்று மது வந்துகொண்டிருப்பதை தள்ளுவண்டி சத்தம் சொன்னது. அவர் மீண்டும் இசைக்குள் ஆழ்ந்தார்.
லண்டன் வான் பரப்பில் நுழைந்த விமானம், உலகின் பரபரப் பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரோவில் தரையிறங்க ஆயத்தமானது. ஒரு நகரத்தைக் கொத்தாகப் பார்க்க அருமையான தருணம் இதுதான். தூரத்தில் லண்டன் நகரம் ஜொலித்தது. பிரம்மாண்டம், பிரம்மாண்டம், பிரம்மாண்டம். ஹோவென இரைச்சலோடு இறங்கியது விமானம். ஒரு ஆழ்ந்த துயர் படர்ந்தது. இதுவரை எந்த நகரமும் முதல் முறை தந்திராத ஒரு வலியை நெஞ்சத்தின் ஆழத்தில் உணர்ந்தேன்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் நுழைந்ததுமே ஒரு நீளமான வரிசை நோக்கி வழிகாட்டினார் காவலாளி. பிரிட்டிஷ் கடவுச்சீட்டர்கள், ஐரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டர்கள், ஏனைய நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டர்கள் என்று நீண்ட அந்த வரிசையில், சீக்கிய இளைஞன் முதல் வரிசை நோக்கிச் செல்ல நான் மூன்றாவது வரிசையில் நின்றேன். எனக்கு முன் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரின் ஆவணம் சிக்கலுக்கு உள்ளாகிறது. போலியான ஆவணங்களுடன் பிரிட்டனுக்குள் நுழைய முற்பட்ட அகதி அவர். மனைவி, இரு குழந்தைகள் மிரட்சியுடன் பார்த்திருக்க, அவர் போலீஸாரால் தனித்து அழைத்துச் செல்லப்படுகிறார். சற்று நேரத்தில் அவர்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆவணங்கள் சோதனையிடப்படுகின்றன. விசாரித்தவர் கருப்பின அதிகாரி. கடவுச்சீட்டைச் சரிபார்த்து வாஞ்சையோடு கை குலுக்குகிறார்.
விமான நிலையத்தில் நான் கடந்துவந்த சுவரோர தட்டிகளை அப்போதுதான் கவனித்தேன். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டிருக்கும் அந்த ‘நல்வரவுப் பதாகைகள்’ ஒவ்வொன்றிலும் புன்னகை பூரிக்க இரு கைகளையும் விரித்தபடி மனிதர்கள் நிற்கிறார்கள். வெவ்வேறு மனிதர்கள். நான் அவற்றின் அருகே சென்று பார்த்தேன்.
ஒவ்வொரு படத்தின் கீழும் சம்பந்தபட்டவரின் பெயர், பணி விவரம். ‘டிம் பீக் - விண்வெளி வீரர்; ராகுல் - வாடிக்கையாளர் சேவை முகவர்; தான்யா மூடி - நடிகை; ஜோ ஹவுஸ்டன் - விமானி; ஸ்டீபன் வில்ட்ஷிர் - இசைக் கலைஞர்;ஆலன் மியாட் - தண்டோராக்காரர்; விக்கி ஃபைஸன் - விலங்குப் பராமரிப்பாளர்; கிறிஸ் ஓ நைல் - பூக்கடைக்காரர், டாம் வின்ஸி - டாக்ஸி ஓட்டுநர்.’
ஒவ்வொரு முகமும் ஒரு நகரம் எத்தனை உயிர்களால் உயிரூட்டப்படுகிறது என்கிற பணிநிலைகளை மட்டும் அல்லாமல், லண்டன் வந்து பிரிட்டன் சமூகத்தின் அங்கமாகிவிட்ட அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களின் வெவ்வேறு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நம்மூர் விமான நிலையங்களில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருக்கும் டெல்லி தலைவர்கள், இந்தி நடிகர்களின் முகங்கள் மனதுக்குள் தோன்றி மறைந்தன. நம் விமான நிலையங்களில் என்றைக்கு ஒரு தமிழ் விவசாயி, காஷ்மீர் படகுக்காரர் முகத்தைப் பார்க்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
இதற்குள் இந்தப் பயணத்தில் டெல்லியிலிருந்து வந்து என்னைக் கோத்துக்கொள்ளவிருக்கும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரி யும் நண்பருமான ஆஸாத் என்னைப் பார்த்துவிட்டார்.
“வந்ததும் வராததுமாக என்ன இப்படி இந்தத் தட்டிகளைப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்?”
“ஆஸாத், எத்தனை விதமான முகங்கள்! இந்தத் தட்டிகளில் எழுதப்பட்டிருக்கும் ‘நல்வரவு’ எழுத்து வடிவங்களைக் கவனித்தீர்களா? ஒவ்வொருவர் ஆகிருதிக்கும் ஏற்றபடியான பிரத்யேகமான எழுத்து வடிவங்கள். பன்மைத்துவம் – கூடவே தனித்துவம்.”
ஆஸாத்துடன் நின்றிருந்த இன்னொரு அதிகாரி சொன்னார், “நண்பரே, நீங்கள் விரும்பினால், அதை எழுதிய ஓவியருடனேயே உங்களைப் பேசவைக்கிறேன். நிறைய ஆச்சரியங்கள் உங்களுக்கு இங்கு காத்திருக்கின்றன. சாமுவேல் ஜான்சனின் பிரபலமான மேற்கோள் இது, ‘லண்டன் ஒருவருக்கு அலுத்துவிட்டது என்றால் வாழ்க்கையே அலுத்துவிட்டது என்று பொருள். வாழ்க்கையில் ஒருவருக்குத் தேவைப்படும் அனைத்தும் லண்டனில் உண்டு.’ லண்டன் உங்களை வரவேற்கிறது!”
(வெள்ளிதோறும் பயணிப்போம்…)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT