Published : 19 Jul 2018 09:33 AM
Last Updated : 19 Jul 2018 09:33 AM
பதினான்கு பெரிய தனியார் வங்கிகள், 1969 ஜூலை 19-ம் நாள் தேசியமயமாக்கப்பட்டன. இந்திய அரசியல் -பொருளாதார வரலாற்றில் அது ஒரு சரித்திர நிகழ்வு. சுதந்திரத்துக்குப் பிந்தைய 22 ஆண்டு காலத்தில் 559 தனியார் வங்கிகள் இந்தியாவில் திவாலாகியிருந்தன. சாதாரண மக்கள் சேர்த்து வைத்திருந்த சேமிப்புப் பணம் பறிபோனது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகுதான் மக்களின் சேமிப்புப் பணம் இன்று வரை பாதுகாப்பாக உள்ளது.
1969-க்கு முன்பாக சென்ட்ரல் வங்கி - டாடா, யூகோ வங்கி - பிர்லா, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி - பை குழுமம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி - செட்டியார், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் - தாபர் என்று பல முதலாளிகளின் கட்டுப்பாட்டில்தான் தனியார் வங்கிகள் இருந்தன. அவர்கள் தங்களின் வியாபாரத் தேவைக்குத்தான் வங்கிகளைப் பெரும்பாலும் பயன்படுத்திக்கொண்டனர். 1960-களில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 44% பங்களிப்புசெய்த விவசாயத்துக்குத் தனியார் வங்கிகள் மொத்த கடனில் 2% மட்டுமே வழங்கின.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, ஜனநாயக சக்திகளின் போராட்டத்துக்குப் பிறகே ‘மொத்த கடனில் 40% வரை சாதாரண மக்களுக்கான முன்னுரிமைக் கடனாக வழங்கப்பட வேண்டும். அதில் கட்டாயமாக 18% வரை விவசாயத்துக்கு வழங்கப்பட வேண்டும். இக்கடனெல்லாம் வருடம் 4% - 7% வட்டியில் நீண்டகாலத் தவணையில் வழங்கப்பட வேண்டும்’ என்ற விதி உருவாக்கப்பட்டது.
மக்களின் உணவுத் தேவைக்கே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலிருந்த நமது நாடு, உணவு தன்னிறைவைப் பெற்றதில் பொதுத்துறை வங்கிகளுக்கு மகத்தான பங்கு உள்ளது. நாட்டின் முன்னுரிமைகளான விவசாயம், கேந்திர தொழில், சிறுதொழில், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் வங்கிகளின் கடன் கொள்கை மாற்றியமைக்கப்பட்டது.
ஆயினும், 1969-க்குப் பிறகும் ஏற்கெனவே இருந்த பேங்க் ஆஃப் தஞ்சாவூர், பேங்க் ஆஃப் தமிழ்நாடு, பேங்க் ஆஃப் கொச்சின், பூர்பஞ்சால் பேங்க், குளோபல் டிரஸ்ட் பேங்க் போன்ற 25-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகின. ஆனால், இவ்வங்கிகள் எல்லாம் பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புப் பணம் காப்பாற்றப்பட்டது. இந்தத் தனியார் வங்கிகள் ஏற்படுத்திய நஷ்டத்தை பொதுத்துறை வங்கிகள் சுமந்தன. 2004-ல் ‘குளோபல் டிரஸ்ட் பேங்க்’ என்ற புதிய தனியார் வங்கி ஏற்படுத்திய சுமார் 1,100 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பொதுத்துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் சுமக்க நேரிட்டதை இங்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
1991-க்குப் பிறகு அமலுக்கு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக எந்த நோக்கத்துக்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வங்கித் துறையை மீண்டும் தனியார் கையில் ஒப்படைப்பதற்கான செயலில் மத்திய அரசு இறங்கியது. விளைவாக, பொதுத்துறை வங்கிகளில் 100% ஆக இருந்த மத்திய அரசின் பங்கில் 49% வரை தனியாருக்கு விற்கப்பட்டன. போட்டி என்ற பெயரில் புதிதாகத் தனியார் வங்கிகள் துவக்கப்பட்டன. வெளிநாட்டு வங்கிகள் தாராளமாகக் கிளைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இதையெல்லாம் மீறி இன்றளவும் மொத்தத்தில் 75% வியாபாரத்தையும், 94% வாடிக்கையாளர்களையும் பொதுத்துறை வங்கிகளே தக்க வைத்துள்ளன. இதன் காரணமாகவே 2008-ல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியிலிருந்து மிகப் பெருமளவில் நம் நாட்டுப் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.
ஆனால், இன்றைய மோடி அரசோ மிகத் தீவிரமாக வங்கிகள் தனியார்மயமாக்கத்தைச் செயல்படுத்திவருகிறது. புதிதாக ஐடிஎஃப்சி, பந்தன் என்ற இரு வங்கிகள் துவக்கப்பட்டுள்ளன.
20-க்கும் மேற்பட்ட சிறிய தனியார் வங்கிகள், பேமண்ட் வங்கிகள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல வங்கிகள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுகின்றன. இவ்வங்கிகளில் சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் கடனின் வட்டி விகிதம் வருடம் 14% முதல் 26% என்றாக்கப்பட்டுள்ளன. சேமிப்புக் கணக்கு துவங்குவதற்குக் குறைந்தபட்ச இருப்பாகப் பல வங்கிகளில் ரூ.10,000 என்று விதிக்கப்பட்டுள்ளது. இந்த இருப்புத் தொகை குறைந்தால் அபராதம் விதிக்கப்படும். இவையெல்லாம் சாதனைகளா?
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஒட்டுமொத்த வங்கித் துறையை மீண்டும் பணக்காரர்களுக்கான வங்கித் துறையாக மாற்றுவதில் முனைப்பாக செயல்படுகின்றன. அதன் விளைவாக, வங்கித் துறையின் மொத்த கடனில் 56% பெரிய கடனாளிகளுக்கு (ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேலும்) வழங்கப்படுகின்றன. இவர்கள் மொத்த வராக் கடனில் 88%-க்குச் சொந்தக்காரர்கள். வங்கிகளின் கடன் கொள்கை பெருமுதலாளிகளுக்குச் சாதகமாக மாற்றப்பட்டுவருகிறது. இதன் விளைவாகத்தான் ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெறுவதற்கு
100%-க்கும் மேலான சொத்து அடமானத்தை வற்புறுத்தும் வங்கிகள், 15% / 20% சொத்தை அடமானமாக வைத்துக்கொண்டே ரூ.1,000 கோடி, ரூ.2,000 கோடி கடன் வழங்குகின்றன.
வங்கிக் கடன் வசூல் கொள்கையும் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. கல்விக் கடனையும், விவசாயக் கடனையும் வசூல் செய்ய பொதுத்துறை வங்கிகளே தனியார் ஏஜெண்டுகளையும், கார்ப்பரேட்டுகளையும் நியமிக்கின்றன. இவை சாதாரண சிறு கடனாளிகளை மிரட்டிக் கடன் வசூல்செய்கின்றன. ஆனால், பெருமுதலாளிகளிடமிருந்து கறாராகக் கடனை வசூல்செய்ய 2016-ல் இயற்றப்பட்டுள்ள ஐபிசி (திவால்) சட்டம் வரை எதுவும் பலனளிக்கவில்லை. வராக் கடனாளிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், வராக் கடனாளிகள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
மத்திய பாஜக ஆட்சியில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 90% பெருநிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன். மக்கள் சேவையில் ஈடுபடும் பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்ற வேண்டியது நம் முன்னுள்ள பிரதான கடமையாகும். அதேசமயம், ஒட்டுமொத்த வங்கித் துறையின் கடன் கொள்கை மற்றும் கடன் வசூல் கொள்கையையும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பும் நம் முன் உள்ளது.
- சி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர்,
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு.
தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT