Published : 02 Jul 2018 09:14 AM
Last Updated : 02 Jul 2018 09:14 AM
சு
விஸ் வங்கிக் கணக்கில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் தொகை 2017-ல் 50% அதிகரித்திருக்கிறது எனும் செய்தி, இந்தியப் பொருளாதார வட்டாரங்களில் மட்டுமல்ல, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் நேரடியான பாதிப்பை உணரும் சாமானியர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.3,200 கோடி, பிற வங்கிகளின் மூலமாக ரூ.1,050 கோடி, பாதுகாப்பு உத்தரவாதங்கள் மூலமாக ரூ.2,640 கோடி அதிகரிக்கிறது என்கிறது சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை. இந்த மூன்று பிரிவுகளிலும் டெபாசிட் செய்யப்படும் தொகை கடந்த ஆண்டுகளில் குறைந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்திருப்பது எப்படி என்ற கேள்வி இந்திய மக்களிடையே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
உடனடியாக கவனத்தை வேறு பக்கமாகத் திருப்ப முற்படுகிறது அரசு. “சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது அனைத்தையுமே கறுப்புப் பணமாகக் கருத முடியுமா?” என்ற கேள்வியை எழுப்புகிறர் நிதி யமைச்சர் பியூஷ் கோயல். “இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களைப் பற்றிய விவரங்கள் 2019-ல் கிடைக்கும். கறுப்புப் பணம் என்று கண்டறியப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறியிருக்கிறார். “அது சரி, கறுப்புப் பண முதலைகள் மீது ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” என்று கேட்கிற மக்களின் கேள்விக்குப் பதில் அளிக்க யாரும் இல்லை.
கறுப்புப் பணமா, இல்லையா?
2006 நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருந்த தொகை ரூ.23,000 கோடி. கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றிய அச்சத்தின் காரணமாகவே அத்தொகை படிப்படியாகக் குறைந்துவந்து, 2016-ல் ரூ.4,500 கோடியாக இருந்தது. எனவே, சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிற தொகை அனைத்தும் கறுப்புப் பணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவற்றில் பெருமளவு கறுப்புப் பணமாகத்தான் இருக்கிறது என்பதே உண்மைநிலை.
வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டிருக்கும் இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 அன்று இரவு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பயன் என்ன என்ற கேள்வி பிரதானமாக முன்வைக்கப்படுகிறது. கறுப்புப் பணத்தை வேரோடு பிடுங்கி எறியத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நடவடிக்கையின் முடிவில், குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் கோடியாவது கணக்கில் திரும்ப வராது. லாபமாகக் கிடைக்கும் அந்தத் தொகையை இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளிக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. கறுப்புப் பணம் மட்டுமல்ல, கள்ள நோட்டுகளின் புழக்கமும் கட்டுப்படுத்தப்படும், பயங்கரவாதிகளிடம் உலவிக்கொண்டிருக்கும் பணமும் செல்லாததாக்கப்படும் என்று துணைக் காரணங்களும் கூறப்பட்டன. இதற்கிடையே வங்கி வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பரிமாற்றங்களுக்குத் தயார்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பலன் என்ன?
எந்தெந்தக் காரணங்களுக்காகப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டதோ, அந்தக் காரணங்கள் எதுவுமே நடந்தேறவில்லை என்பதையே கடைசியாக வெளிவந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி, ஆகஸ்ட் 30, 2017-ல் அளித்த ஆண்டறிக்கையின்படி, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 தாள்களின் மொத்த மதிப்பு ரூ.15,44,000 கோடி. அந்தத் தாள்களில் ரூ.15,28,000 கோடி மதிப்புடைய தாள்கள் திரும்ப வந்துவிட்டன. அப்படியென்றால், திரும்பி வராத பணம் வெறும் ஒரே ஒரு சத வீதம்தான். இந்த ஒரே ஒரு சதவீத தாள்களை முடக்கி வைப்பதற்காகத்தான் மக்கள் மத்தியான வெயிலில் வரிசையில் நின்றார்கள். முதியவர்களும் நோயாளிகளும் மயங்கி விழுந்துச் செத்தார்கள். சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவசரச் செலவுகளுக்கும் திருமணம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கும் திண்டாடினார்கள்.
கள்ள நோட்டுகளாவது கண்டறியப்பட்டிருக்கின்றனவா என்றால் அதுவும் திருப்திகரமாக இல்லை. திரும்பப் பெறப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகளின் மதிப்பு வெறும் ரூ.41 கோடி மட்டும்தான். அதாவது பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 0.0027%. ஆனாலும், மக்களைத் துயருக்கு ஆளாக்கிய இந்தத் தவறான திட்டம் தோல்வியடைந்துவிட்டது என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவோ அறிவிக்கவோ தயாராக இல்லை. மாறாக, இத்திட்டம் வெற்றிபெற்றுவிட்டதாக மக்களை நம்பவைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு புழக்கத்தில் இருக்கும் தாள்களின் எண்ணிக்கை 17% குறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த நடவடிக்கைக்குப் பிறகு ஏ.டி.எம். இயந்திரங்கள் வழக்கம்போல செயல்படவில்லை. ஒரு நாளில் மிகச் சில மணி நேரங்கள் மட்டுமே இயங்கின. ஒரு செயற்கையான பற்றாக்குறை உருவாக்கப்பட்டது என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் அனைவருமே அறிவார்கள்.
நவம்பர் 2016 முதல் மே 2017 வரை கணக்கில் வராத பணமாகக் கண்டறியப்பட்ட தொகை ரூ.17, 526 கோடி. பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.1,003 கோடி. இந்தத் தொகைக்கான வரியை வாங்குவதற்கு நீதிமன்றம், வழக்குகள், தீர்ப்பு, மேல்முறையீடு என்று இன்னும் வெகுகாலம் காத்திருக்க வேண்டும். எனவே, இந்தப் பறிமுதல் நடவடிக்கைகளாலும்கூட உடனடிப் பயன் ஏதுமில்லை. ‘போலி நிறுவனங்களைக் கண்டறிந்துவிட்டோம், பினாமி பரிவர்த்தனைகளைக் கண்டறிந்துவிட்டோம்’ என்று மத்திய அரசு தனக்குத் தானே பெருமிதப்பட்டுக்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னும் அதன் பயன் என்னவென்று கணக்கிட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சரி, இந்தியாவையே டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றிவிட்டோம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்றால், அதுவுமில்லை. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதே தவிர, பரிவர்த்தனை செய்யப்படும் தொகையில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், இந்த நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து இந்தியா எப்போது மீண்டெழும் என்று தெரியவில்லை. அதற்குள் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு, அதன் பாதிப்புகளும் உணரப்பட்டிருக்கின்றன. தொடர்விளைவுகளாய், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும்சரிவைச் சந்தித்தது. சிறு குறு தொழில்நிறுவனங்கள் முடங்கிவிட்டன. சுய வேலைவாய்ப்புகளுக்கு வழி அடைக்கப்பட்டுவிட்டது. தொழில்முனைவோர் தொழிலாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இதோ, இப்போது ரூபாய் மதிப்பும் சரிய ஆரம்பித்திருக்கிறது. சுவிஸ் வங்கி அறிக்கை பல மாயைகளை உடைத்துப்போட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT