Last Updated : 11 Jul, 2018 08:51 AM

 

Published : 11 Jul 2018 08:51 AM
Last Updated : 11 Jul 2018 08:51 AM

எனக்கென ஒரு கடவுள்!

இவர் பங்காரய்யா. மடிப்பாக்கத்தில் காலணிக் கடை வைத்திருப்பவர். தலை குனிந்திருக்க, எதையாவது தைத்துக்கொண்டே இருக்கும் விரல்கள். கடை முழுக்க தானே தைத்த காலணிகளை மாட்டி வைத்திருப்பார். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் செருப்பு தைப்பதற்காகப் போனேன். தைத்துக் கொடுத்தவரிடம் ‘‘எவ்வளவு?” என்றேன். ‘‘இப்ப நான் என்னத்த கிழிச்சிட்டேன்? அடுத்த தடவை பெருசா கிழிஞ்சத எடுத்தா. இப்ப ஒண்ணும் வேணாம் போ’’ என்றார் வெற்றிலை - பாக்கு வாய் மணக்க. இரண்டு, மூன்று மாதம் கழித்து பெரிதாக கிழிந்து தொங்கிய அலுவலகப் பையுடன் போனேன். ‘‘நெசமாத்தான் கேக்குறேன். இதெல்லாம் ஒரு பேக்குன்னு வேலைக்கு தூக்கிட்டு போறியே, உனக்கு மனசாட்சியே இல்லியா?’’ என்று தைக்க மறுத்துவிட்டார். கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பென.. தைக்கக் கொடுத்துக்கொண்ட நட்பு. அடிக்கடி போய் உட்காருவேன். நேற்றும் போயிருந்தேன். ‘‘இப்பல்லாம் ஷோ ரூம்க்கு போய்தானே மக்கள் வாங்குறாங்க. நீங்கபாட்டுக்கு தெச்சித் தெச்சி மாட்டி வெக்கிறீங்களே. யாரு வாங்குவா?’’ என்றேன். ‘‘என்னை மட்டும் கவனிச்சிக்க ஒரு கடவுள் இருக்கான். அவன் பாத்துக்குவான். எல்லாருக்கும் உள்ள கடவுளுக்கு நெறைய வேல இருக்கும். என் கடவுளுக்கு என்னைக் கவனிக்கிறது மட்டும்தான் வேல’’ என்றார். சிலரால் கடவுள் ஆசிர்வதிக்கப்படுகிறார்!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x