Last Updated : 28 Jul, 2018 10:29 AM

 

Published : 28 Jul 2018 10:29 AM
Last Updated : 28 Jul 2018 10:29 AM

காதல் மனப்பாடப் பகுதி

அப்போது எல்லாம்… இப்போது மாதிரி செல்போன் இல்லை. காதல் பண்றவங்க மணிக்கணக்காப் பேச முடியாது. கடிதம்தான். மாறி மாறி எழுதி மனசை சொல்ல வேண்டியிருக்கும். அப்படி எனக்கு வந்த கடிதங்களப் பத்தித்தான் உங்கள்ட்ட பேசப் போறேன்.

மூணு வகையான  காதல் கடிதம் உண்டுங்க. காதல் ரசம் சொட்டச் சொட்ட  இருப்பது ஒரு ரகம். மாணிக்கவாசகர் செய்யுள் எல்லாம் வரக் கூடிய காமெடி  காதல் கடிதம் இன்னொரு ரகம். இந்த ரெண்டுக்கும் நடுவுல வரக்கூடிய   சன்ன ரகம் 3-வது ரகம்.

நண்பனுக்குத் தெரியாம காதல் பண்ணவே முடியாது. ஏன்னா,  அவன்தான்  `டே அவ உன்னயவே பாக்குறாடா..'  என எவளையாவது காமிச்சு, காதல் அத்தியாயத்தை ஆரம்பிச்சு வைக்கிறவன். மொத மொத காதலிகிட்ட பேசப் போகும்போது, அடி விழுந்தாலும் பரவாயில்லனு கூடவே வந்து நிக்கிறவனும் அவன்தான். அப்புறம் அவன் இல்லாம எப்படி...?

இதில் என்ன  பிரச்சினைன்னா, எல்லாத்தையும் கேப்பாய்ங்க. `என்னடா பாத்தியா, என்ன சொன்னா ஒங்காளு?  லெட்டர் கொடுக்கலயா..' என ரொம்ப ஆர்வமா விசாரிப்பாய்ங்க.

லெட்டர காட்டி பழகிட்டம்னா அவ்வளவுதான்.. நாம படிக்குறதுக்கு முன்னாடியே அவிங்க படிக்கணும்னு துடிப்பாய்ங்க. அதுலயும் காதலே பண்ணாம (காதலி கிடைக்காத காரணத்தால) இருக்கிறாய்ங்க பாருங்க...  அவிங்க ஆர்வம் சொல்லி மாளாது. ஒருநாள் லெட்டர படிக்கலைனா கூட தூங்க மாட்டாய்ங்க. வர்ற வரைக்கும் தூங்காம காத்திருந்து படிச்சுப் பாத்துட்டுத்தான் போவாய்ங்க.

ஒரு நாள் காலேஜுக்குப் போற அவசரத்துல லெட்டர வாங்காம போயிட்டம்னா ரொம்ப கோவிச்சுக்கு வாய்ங்க. `லெட்டர கூட வாங்காம அப்படி என்ன அவசரமா காலேஜுக்கு வந்து படிக்கப் போற...' அப்டினு திட்டுவாய்ங்க. அந்த அளவுக்கு லெட்டர்லாம் சூப்பரா இருக்கும். வீட்ல வச்சிருந்தா, பிரச்சினை ஆயிரும்னு ரூம்லதான் லெட்டரெல்லாத்தையும் போட்டுவெச்சிருப்பேன். ரூம்ல இருக்குற எவனாவது எடுத்து படிச்சுக்கிட்டு இருப்பாய்ங்க. நானும் ஒண்ணும் சொல்றதில்ல.

கடிதங்கள்ல காதல் மட்டும் இல்லாம பக்தி ரசம்லாம்  சொட்டும். அதுலயும் மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை விளக்கி, ஒரு செய்யுள் எழுதியிருப்பார். எப்போதும் உன்னய காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்கணும்னு வேண்டி உருகி எழுதுன அந்தப் பாடல் 9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்துல இருக்கும். என்ன எழுதுறனு தெரியாம ஒருத்தி அதையே 3 பக்கத்துல எழுதி, அதுமாதிரி, உன்னய பாத்துக்கிட்டே இருக்கணும்னு முடிச்சிருந்தா. இத வெச்சே என்னய ஓட்டுனாய்ங்க.

`காதலன, கடவுளா பாக்குற ஒரு மனநிலை காதலிக்கு வந்தா அது எவ்வளவு பெரிய பாக்கியம் தெரியுமா..' அப்படினு நானும் எவ்வளவோ சமாளிச்சுப் பாத்தேன். ம்ஹூம் முடியல. ஒரு வாரம் ஓட்டிட்டுத்தான் ஓய்ஞ்சாங்க...

ஒருவழியா காலேஜ் எல்லாம் முடிச்சு அவனவன் வேலைக்குப் போக ஆரம்பிச்சோம். நான் மட்டும் எம்.ஃபில். படிச்சுக்கிட்டிருந்தேன். ஒருநாள் நண்பன் செல்வராஜ் வீட்டுக்கு வந்தான்.

`அந்த லெட்டர எல்லாம் எட்றா. மனசே சரியில்ல..' அப்படின்னான்.

`அட நாயே... இதுக்கா 12 கிலோ மீட்டர் டிவிஎஸ் பிஃப்டில பயணம் செஞ்சு வந்த. உனக்கு மனசு சரியில்லைனா, எனக்கு வந்த லெட்டர படிப்பியா..' என மனசுக்குள் திட்டியபடி, எடுத்துக் கொடுத்தேன். ஒரு அரை மணி நேரம் உக்காந்து எல்லாத்தையும் படிச்சான். `இப்பத்தான்டா நிம்மதியா இருக்கு..' என சொல்லியபடி கிளம்பினான். `இருடா, டீ குடிப்போம்..' என டீ வாங்கிக் கொடுத்து அனுப்பி வெச்சேன். அப்படி என்னதான் இருக்கு லெட்டர்ல அப்படினு நானும் ஒரு ரவுண்ட் படிச்சேன். நல்லாத்தான் இருந்துச்சு.

சென்னைல வேல கெடைச்சு கெளம்புனேன். மறக்காம எல்லா லெட்டரையும்  `ஹாஜிமூசா’ மஞ்ச கலரு  துணிப்பைல போட்டு எடுத்துக்கிட்டேன். ஊர்ல பொழுது போகணுமே... மொதல்ல ஆலந்தூ ருல ஜாகை.  அப்புறம் மேற்கு சைதாப்பேட்டைல ரெண்டு இடத்துல ரூம் மாறினோம். ஏறக்குறைய 10 வருஷமா வேதாளத்தை சுமந்த விக்கிரமாதித்தன் மாதிரி, லவ் லெட்டர்ஸ் எல்லாத்தையும் சுமந்து கிட்டே திரிஞ்சேன்.

கல்யாணம் ஆச்சு. ரூம்மேட் பாலு கிட்ட சொல்லி, பத்திரமா இருக்கட்டும்டானு பரண் மேல போட்டிருந்தேன். அதுக்கு அப்பறம் அவிங்க 3 ரூம் மாறிட்டாய்ங்க. கூடவே அந்த லெட்டர்ஸும் பயணம் போச்சு.

ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்ல போரடிக்குதுனு பையன கூட்டிக்கிட்டு பாலு ரூமுக்குப் போனேன். கால் மேல கால் போட்டுக்கிட்டு எதையோபடிச்சுக்கிட்டிருந்தான் பாலு.  பக்கத்துல  `ஹாஜிமூசா’  ஜவுளிக் கடல்  துணிப்பை கெடந் துச்சு. இத எங்கேயே பாத்திருக்கனே அப்படினு  நெனச்சேன். அதுக்

குள்ள, `எல்லாம் உங்க  லெட்டர்ஸ் தான். பொழுதுபோகல..அதான் படிச்சுக்கிட்டிருந்தேன். சும்மா சூப்பரா  இருக்கு..'ன்னான்.

 அடப்பாவிகளா...  படிச்சு படிச்சு மனப்பாடமேபண்ணிருப்பாய்ங்களோ  என தலையில  அடிச்சுக்கிட்டேன்.  மறுநாளே அத்தன லெட்டர்ஸையும்  ஆபிஸுக்கு எடுத்துட்டுப்  போனேன். அங்க உள்ளவய்ங்களும் படிச்சு  புளகாங் கிதப்  பட்டாய்ங்க.

ஆபிஸுல ஒரு டூர் ஏற்பாடு பண்ணியிருந்தாய்ங்க. கோவளம்  பீச்ல.  கையோட அத்தனை லெட்டரை யும்  எடுத்துட்டுப்  போனேன்.  கடைசியா ஒரு முறை படிச்சுட்டு  கடல்ல கிழிச்சுப்  போட்டுட்டேன்.

அதுக்கப்புறம்தான் ஒரு இனம் புரியாத ஒரு கவலை  வந்துச்சு.  எத்தனை வருஷமா,  எத்தனை பேருக்கு சந்தோஷத்தை கொடுத்த லெட்டர்ஸ்... இப்படி கிழிச்சுப்  போட்டுட்டமே என வருத்தமா இருந்துச்சு.

 கடல் தண்ணி பட்டு  காகிதத்துல  இருந்த மை அழியஆரம்பிச்சுச்சு. கனத்த  இதயத்தோட வீடு திரும்பி னேன். லெட்டர் போனா என்ன... அத்தனையும் அப்படியேதான் ஞாபகம் இருக்கே. அப்படியே மறந்தாலும் எத்தனை பயலுக படிச்சிருக்காய்ங்க. ஒரு போன் போட்டா சொல்லிட்டுப் போறாய்ங்கனு மனச தேத்திக்கிட்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x