Published : 06 Aug 2014 09:14 AM
Last Updated : 06 Aug 2014 09:14 AM

ஆங்கிலமா தாய்மொழியா?

இந்திய மொழிகளில் நிலவும் போதாமையைப் பற்றி அலசும் கட்டுரை.

ஆங்கிலம்தான் அறிவு என்று பெரும்பாலான இந்தியர்கள் கருதுவது மடமையே. அதே நேரத்தில், ஆங்கில மொழியறிவின் அவசியத்தை, முக்கியத்துவத்தை மறுப்பதும் புறக்கணிப்பதும் இந்தியர்கள் தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ளும் பெரும் தீமை என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

2011-ல் குடிமைப் பணி தேர்வில் புதிதாகச் சேர்க்கப் பட்ட ‘சி.எஸ்.ஏ.டி.’ என்ற திறனறித் தேர்வுத்தாள் இந்தி மற்றும் பிற மாநில மொழிகளில் தேர்வெழுதும் மாணவர் களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாள் ஆங்கிலத்தில் கல்வி பயின்ற, குறிப்பாக பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்வி பயின்ற நகர்ப்புற மேட்டுக்குடி மாணவர்களுக்குச் சாதகமானது, தாய்மொழியில் கல்வி பயின்ற கிராமப்புற மாணவர் களுக்குப் பாதகமானது என்று இந்தத் தாளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் கூறுகின்றனர். இந்த வாதத்தில் உண்மை இருக்கிறது என்பதைக் கடந்த மூன்று ஆண்டுகளின் தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. தங்கள் அறிவுத் திறன் தங்கள் தாய்மொழியிலேயே சோதிக் கப்பட வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயம்தான்.

செய்ய வேண்டியது…

ஆனால், பல்வேறு காரணங்களால் இந்திய அதிகார வர்க்கத்தின் உயர் பதவிகளை வகிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் உயர் கல்வி கற்பவர் களுக்கும் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அளவுக்கேனும் ஆங்கில மொழித்திறன் இருந்தாக வேண்டும். இந்நிலையில் அரசாங்கம் செய்யக்கூடியது இரண்டு விஷயங்கள். முதலாவது, உடனடியானது. இரண்டாவது, நீண்ட கால அடிப்படையிலானது. ஆங்கில மொழித்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தாளைத் திரும்பப்பெறுவது என்பது உடனடியாகச் செய்யப்பட வேண்டியது: நீண்ட கால அடிப்படையில் செய்யப்பட வேண்டியது நகரம்/கிராமம், ஆங்கிலவழி/தாய்மொழிவழி என எல்லாப் பிரிவினருக்கும் ஆகச் சிறந்த தரத்திலான கல்வி கிடைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்படுவதுடன், அவற்றைக் கற்பிப்பதற்குத் தகுதியான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். அத்துடன் தாய்மொழியில் கல்வி பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்றாம் வகுப்பு முதலே ஆங்கிலம் ஒரு பாடமாக வைக்கப்படுவதுடன் 12-ம் வகுப்பில் தேர்ச்சிபெறும் ஒரு மாணவர், உயர் கல்வியை எந்தச் சிரமமும் இன்றி ஆங்கிலத்தில் தொடரும் வகையில், ஆங்கில மொழியறிவு கொண்டவராகத் திகழும் விதத்தில் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் (11 அல்லது 12 வயதுக்குட்பட்ட குழந்தை களால் சூழலும் வாய்ப்பும் அமையும் பட்சத்தில் ஐந்து மொழிகளை எளிதில் கற்க முடியும் என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள்). அத்துடன் அறிவியல், சமூக அறிவியல் உட்பட அனைத்துப் பாடங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்கமே இலவசமாக வழங்க வேண்டும்.

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்), அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) போன்ற உலகத்தரமான கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் மாநில அரசுப் பள்ளிகளில் படிக்கும், குறிப்பாக தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒருசிலர் கூட வெற்றிபெறுவதில்லை. இதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று, சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. போன்ற பாடத் திட்டங்களோடு ஒப்பிடும்போது, மாநில அரசுகளின் பாடத் திட்டங்கள் தரம் குறைந்தவை. இரண்டு, நுழைவுத் தேர்வு களும் நுழைவுத் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி வகுப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகின்றன.

இந்திய மொழிகளில் ஆய்விதழ்கள் உண்டா?

பள்ளிக் கல்வியை மட்டுமல்ல, உயர் கல்வியையும் தமிழிலேயே கற்க முடியும், உதாரணத்துக்கு ஜப்பானை, ரஷ்யாவை, ஜெர்மனியை, பிரான்ஸைப் பாருங்கள் என்று சொல்கிறவர்கள் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்வதேயில்லை. வரலாறு, பொருளாதாரம், இயற்பியல் என எந்தத் துறையாக இருந்தாலும் சரி, உயர் கல்வி என்று வருகிறபோது அவற்றுக்குரிய புத்தகங்களும், மதிப்பீடு செய்யப்பட்ட ஆய்விதழ்களும் (ரெஃப்ரீட் ஜர்னல்- சக நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு, ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் ஆய்விதழ்கள்) மிக அவசியமானவை. உதாரணமாக, உயர் கல்வித்துறை ஒன்றில், ஆங்கிலத்தில் 1,000 புத்தகங்கள் வெளியாகின்றன என்றால், ஜெர்மன் மற்றும் ரஷ்ய மொழிகளில் 100 முதல் 200 புத்தகங்கள் வெளியாகின்றன. இது போதுமானது.

ஆனால், இந்தி உட்பட எந்த இந்திய மொழியிலும் அநேகமாக ஒரு புத்தகம்கூட வெளியாவதில்லை. மிக அதிகமாக விற்கும் சில பட்டப்படிப்புப் பாடப்புத்தகங்கள் மட்டுமே இந்திய மொழிகளில் வெளியாகின்றன. இத்தகைய புத்தகங்களைத்தான் குடிமைப் பணி தேர்வுகளைத் தாய்மொழியில் எழுதும் மாணவர்கள் நம்பியிருக்கின்றனர். இத்தகைய தேர்வுகளுக்குப் போதுமானவைதான் அவை.

ஆனால், ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் முன்னேற்றங்களையும் விவாதங்களையும் உள்ளடக்க மாகக் கொண்டுள்ள புத்தகங்கள் இந்திய மொழிகள் எதிலும் வெளியாவதில்லை. அத்துடன் உயர் கல்வியின் அடிப்படை அங்கமான மதிப்பீடு செய்யப்பட்ட ஆய் விதழ்கள் அநேகமாக இந்திய மொழிகள் எதிலும் கிடையாது. மேலும், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் அறிவியலுக்காக வெளியாகும் மதிப்பீடு செய்யப்பட்ட ஆய்விதழ்கள் பலவும்கூட கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்தில் தருகின்றன இந்நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் பெரும் பாலானவர்கள் தங்கள் தேவைக்கேற்ப ஆங்கிலத்தை அறிந்திருக்கிறார்கள். இவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அவமானகரமான உண்மை

மதிப்பீடு செய்யப்பட்ட ஆய்விதழ்கள் இந்திய மொழிகளில் இல்லாததற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று, பொருளாதாரம். இரண்டு, முயற்சியின்மை. ஜெர்மன், பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகவும், ஆராய்ச்சி இதழ்களை நடத்துவதற்காகவும் மிகப் பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், மக்கள்தொகையில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில், எந்தப் பல்கலைக்கழகமும் உலகின் தலைசிறந்த நூறு பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அவமானகரமான உண்மை. தமிழ், கன்னடம் போன்றவை ஒருபுறமிருக்கட்டும், சுமார் 40% இந்தியர்கள் பேசுவதும், மத்திய அரசின் ஆட்சிமொழியாக இருப்பது மான இந்தியில் சர்வதேச அளவில் மதிக்கப்படும் ஆய்விதழ்கள் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? இந்நிலையில், ஆங்கிலம் தேவையில்லை, தாய்மொழியே போதுமானது என்று சொல்வதைப் போன்ற பேதைமை ஏதுமில்லை.

கடந்த 200 ஆண்டுகளாக உலகின் ஆகப் பெரிய ஏகாதிபத்தியங்களாக விளங்கும் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் மொழியும் ஆங்கிலமாக இருக்கிறது. அதனால், நாம் விரும்புகிறோமோ வெறுக்கிறோமோ இன்று உலகின் முதன்மையான இணைப்பு மொழியாக இருப்பதும் ஆங்கிலமே. இந்தியாவில் ஆங்கிலம் நன்கு வேரூன்றியிருந்த காரணத்தாலேயே நம்மால் மென்பொருள்துறையில் இந்த அளவுக்காவது உயர முடிந்திருக்கிறது. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் தங்கள் சேவைத் துறை அலுவலகங்களை இந்தியாவில் நிறுவியிருக்கின்றன.

இந்திய மொழிகளில் உயர் கல்வியின் அனைத்துத் துறைகள் சார்ந்த புத்தகங்களும், ஆய்விதழ்களும் போதுமான அளவுக்கு வெளியாகும் வரை ஆங்கிலம் நமக்கு அத்தியாவசியமானது, தவிர்க்க முடியாதது. போதுமான அளவுக்கு ஆங்கில அறிவின்றி உயர் கல்வி கற்பதென்பது காலில் காயப்பட்டிருக்கும் ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்வதைப் போன்றது. இன்றைய நிலையில், தாய்மொழி நமக்கு வீடு போன்றதென்றால் ஆங்கிலம், ஜன்னலையும் வாசலையும் போன்றது.

- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x