Published : 19 Jul 2018 09:35 AM
Last Updated : 19 Jul 2018 09:35 AM

ஏன் பொதுத்துறை வங்கிகள் பாதுகாக்கப்பட வேண்டும்?

“அடுத்த தேர்தல் அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவோம் என அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும்” என்கிறார் முன்னாள் நிதி ஆயோக் தலைவர் அர்விந்த் பனகாரியா. “பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். தனியார் வங்கிகள் அதிகரிக்கப்பட வேண்டும்” என்கிறார் மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து விலகியிருக்கும் அரவிந்த் சுப்பிரமணியம். ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலின் கருத்தும் இதுதான். ‘எல்லையைப் பாதுகாக்கும் பணியை மட்டும் அரசு செய்தால் போதும், மற்ற எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்கள் திறமையாகச் செயல்படுவார்கள்’ என்பதுதான் இப்படிப் பேசுபவர்களின் கருத்து.

இது மிகத் தவறான வாதம் என்பதற்கு நாம் அமெரிக்காவையே உதாரணம் காட்ட முடியும். அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன் வங்கிகள், நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடியால் பொருளாதாரச் சீர்குலைவு வந்ததற்கு முக்கியக் காரணம், தனியார் மயமாக்கலே. கடைசியில், நிதித் துறையைக் காப்பாற்ற அரசு பல பில்லியன் டாலர்களைச் செலவிட வேண்டிவந்தது.

அளப்பரிய பலன்கள்

“வங்கிகள் தனியார் தொழில் முதலாளிகளின் கைகளில் உள்ளன. அவர்களிடமிருந்து வங்கிகளை எடுக்கவில்லை என்றால், பொருளாதாரம் - குறிப்பாக, கிராமப்புற மக்களின் பொருளாதாரம் வளராது. ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்’’ என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக 1969 முதல் 1977 வரை பதவி வகித்த ஆர்.கே.ஹஸாரி கூறினார். எனவேதான் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க, பெரும்பான்மை மக்களுக்கு வங்கி சேவை சென்றடைய 1969 ஜூலை 19-ல் 14 வங்கிகளும் பின்னர் 1980-ல் ஆறு வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.

தொலைநோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை ஏற்படுத்திய நன்மைகள் அளப்பரியவை. 10 ஆண்டுகளில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 8,200-லிருந்து 65,000 ஆக அதிகரித்தது. கடன் - சேமிப்பு விகிதம் 40%- லிருந்து 70% ஆக அதிகரித்தது. பின்தங்கிய பகுதிகளாகக் கருதப்பட்ட வட கிழக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதி மாநிலங்களில் கிடைத்த கடன் மொத்த கடனில் 25%-லிருந்து 48% ஆக 1984-ல் அதிகரித்தது. கிராமப்புறக் கடன் 3%-லிருந்து 15% ஆக அதிகரித்தது. சிறு தொழில் கடன் 11% லிருந்து 18% ஆக 1980-ல் அதிகரித்தது. ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு வங்கி தத்தெடுத்துக்கொண்டு மாவட்ட வளர்ச்சிக்கான கடன் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியது. இப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (ஐ.ஆர்.டி.பி.) மூலம் லட்சக்கணக்கானோர் கடன் பெற்றனர். கால்நடைகள் அதிகரித்தன. விவசாயம் வளர்ச்சியடைந்தது. சிறுதொழில்கள் வளர்ந்தன. வேலைவாய்ப்பு பெருகியது.. பொருளாதாரம் வளர்ந்தது. முக்கியமாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தது. இந்தியாவில் 1930-ல் மொத்த சொத்தில் 21% இருந்தது 1% பேரிடம்தான். 1960-ல் 10% பேரிடம் 40% சொத்து இருந்தது. ஆனால், 1980-ல் 5% ஆகக் குறைந்தது. பெரும் பணக்காரர்களின் வளர்ச்சி சதவீதத்தைவிட சாதாரண மக்களின் வளர்ச்சி விகிதம் 1980-களில் அதிகரித்தது.

புதிய பொருளாதாரக் கொள்கை

இதைப் பொறுக்காத அரசியல்வாதிகளும், பெரு முதலாளிகளும் 1991-ல் புதிய பொருளாதாரக் கொள்கையைக் கொண்டுவந்தனர். இந்தக் கொள்கை உலக வங்கியாலும், சர்வதேச நிதி நிறுவனத்தாலும் உருவாக்கப்பட்டதே.

1992-ல், பொதுத்துறை வங்கிகளில் அரசு தன் பங்குகளை 33% ஆகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என நரசிம்மம் குழு தனது அறிக்கையில் வலியுறுத்தியது. அரசு படிப்படியாகத் தன் பங்குகளைக் குறைக்கத் தொடங்கியது. பல கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.1 கோடிக்கு மேல் ஒரு நிறுவனத்துக்குக் கடன் கொடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வேண்டும் எனும் விதி நீக்கப்பட்டது. தனியார் ஏக போகங்களைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட

எம்.ஆர்.டி.பி. சட்டம் விலக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு வங்கிகளில் ஆட்கள் நியமனம் நிறுத்திவைக்கப்பட்டது. ‘தங்க கைக்குலுக்கல்’ திட்டம் மூலம் சுமார் 1,34,000 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். முன்னுரிமைக் கடனுக்கான வரையறைகள் தளர்த்தப்பட்டன. ஐடிபிஐ, ஐசிஐசிஐ, யூடிஐ போன்ற வளர்ச்சி நிதி நிறுவனங்கள் வங்கிகளாக மாற்றப்பட்டன.

அரசு தன் செலவைக் குறைத்துக்கொள்வதற்காக அடிப்படைக் கட்டுமானம், மின்சாரம், தொலைத்தொடர்பு, சாலை, கப்பல் போக்குவரத்து, துறைமுகம் போன்று அடிப்படைக் கட்டுமானத் துறைகளில், பொதுமக்கள்-தனியார்-கூட்டு முயற்சி என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குப் பெருங்கடன்கள் வழங்க வலியுறுத்தியது. விளைவு - சிறுகடன்கள் குறைந்தன. பெருங்கடன்கள் அதிகரித்தன. பெருநிறுவனங்கள் கடனால் வளர்ந்தன. விஜய் மல்லையா, ஜிதின் மேத்தா, நீரவ் மோடி, அம்பானிகள், அதானி, அனில் அகர்வால் போன்றவர்கள் உருவாகினர். தளர்த்தப்பட்ட கடன் விதிமுறைகள் மூலம் இவர்களுக்குக் கடன் கொடுக்க வங்கிகள் வலியுறுத்தப்பட்டன.

பொருளாதார மந்தநிலையினாலும், சில மோசடி நபர்களாலும் வாராக்கடன்கள் அதிகரித்தன. அவற்றை வசூல் செய்வதற்குப் பதிலாக ரிசர்வ் வங்கியே மறுசுழற்சித் திட்டங்களைக் கொண்டுவந்தது. கடன் மேலும் அதிகரித்தது. கடன்களைக் கறாராக வசூல் செய்ய திட்டங்கள் கொண்டுவராமல் பெருமுதலாளிகளுக்கு அதிகம் தள்ளுபடி செய்யும் திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்தச் சூழலில், விவசாயிகள் தள்ளுபடி கேட்பதைச் சிலர் விமர்சிப்பதை என்னவென்று சொல்வது!

பணக்காரர்களிடமே செல்வம்!

2014 உலகச் சொத்து அறிக்கையின்படி, இந்தியாவில் மேல் தட்டு மக்கள் 10% பேரிடம் 74% சொத்துக்கள் குவிந்துள்ளன. அடித்தட்டில் உள்ள 20% பேரிடம் 0.2% சொத்துக்களே உள்ளன. அடித்தட்டில் உள்ள 50% பேரிடம் 4.5% சொத்துக்களே உள்ளன. இதற்கு அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம்.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பது பேரழிவுக்கு வித்திடும். ஏற்றத்தாழ்வை அதிகரிப்பதற்கே உதவும். இன்றைக்கு, ஐசிஐசிஐ வங்கிகளில் பெரும் மோசடிகள் குறித்து ஆய்வு நடக்கிறது. தனியார் வங்கிகள்தான் சிறந்தவை என்பவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை வசதியாக மறைத்துவிடுகிறார்கள். பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்துவது, கடன் கொள்கைகளை மாற்றி பெரும் பகுதி மக்களுக்குக் கடன் கிடைக்கச் செய்வது, வங்கிக் கிளைகளை அதிகரிப்பது, ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பன போன்ற நடவடிக்கைகள்தான் இன்றைய தேவை. இதன் மூலம் கிராமப்புற, சிறு நகர்ப்புற பொருளாதாரம் வளரும். விவசாயிகளுக்கு, சிறு தொழில் செய்வோருக்கு, சிறு வியாபாரிகளுக்கு, பெண்களுக்கு, மாணவர்களுக்கு, வீடு கட்டுபவர்களுக்குக் கடன் கிடைக்கும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஏற்றத்தாழ்வு குறையும். எனவே, ‘இந்திய வங்கிகள் விற்பனைக்கல்ல’ எனக் குரலெழுப்புவோம்!

- தே.தாமஸ் ஃபிராங்கோ,

பொதுச் செயலாளர்,

அகில இந்திய பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் கூட்டமைப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x