Published : 22 Mar 2025 09:49 AM
Last Updated : 22 Mar 2025 09:49 AM

வியத்தகு ஊரார் ஒற்றுமை: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 5

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் தேர்வு, மகாத்மா காந்தியின் இலங்கைப் பயணம் குறித்து அடுத்து பார்ப்போம் என்று கடந்த 4-வது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன்னதாக சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1956-ம் ஆண்டில் எங்கள் பகுதியில் பெரும் மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளங்கள் மளமளவென்று நிரம்பின. கழிங்கல், பெரிய மதகுகளை எல்லாம் திறந்து விட்டபிறகும் கரைகளில் மண் அரிக்கப்பட்டு சேதமடைந்தன. உடனடியாக கிராம மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து துரிதமாகச் செயல்பட்டு 2 - 3 மணி நேரத்தில் சீர்படுத்தினோம். அப்படியொரு ஒற்றுமை கிராமங்களில் இருந்தது. அவசர காலங்களில் அரசு அதிகாரிகள், பொறியாளர்களை எல்லாம் தொடர்பு கொள்வதற்கு அன்றைக்கு தொலைபேசி வசதி கிடையாது.

குளங்களையும், நீர் நிலைகளையும் சீர்படுத்துவதை பொது மராமத்து என்பார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இது உருவாக்கப்பட்டது. அதன்படி, குளங்கள், நீர்நிலைகளில் ஏற்படும் மண் அரிப்பு, உடைப்புகளைச் சரி செய்யும் பணிகளை உள்ளூர்காரர்களே செய்து வந்தனர். முதன்முதலில் தஞ்சை மாவட்டத்தில் இது நடைமுறைக்கு வந்தது.

குளத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறுகின்ற நிலங்களின் உரிமையாளர்கள் ஆயக்கட்டுதாரர்கள் என்று அழைக்கப்பட்டனர். கிராம ஒற்றுமை, கிராம கூட்டுறவு என்ற நிலையில் பொதுக்காரியங்கள் அன்றைக்கு நடைபெற்றன.

இந்நிலையில், 1969-க்குப் பிறகு இந்த குளங்கள் பராமரிப்பு என்பது வருவாய்த் துறை, பஞ்சாயத்து யூனியன் கையில் சென்றது. அதன்பிறகு குளங்களில் இருந்து விவசாயத்துக்கு வண்டல் மண் எடுப்பது கூட பிரச்சினையாகி விட்டது. நீர் நிலைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்குக் கூட அரசாங்கம் உத்தரவு போட்டால்தான் அகற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

பஞ்சாயத்து ராஜ் நிர்வாகம் என்று சொல்கிறார்கள். இருந்தபோதும், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள, வருவாய் மற்றும் பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகளிடம் அனுமதி பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவலமான நிலை இன்று உள்ளது.

பொது நலனுக்கு, போக்குவரத்துக்கு தடையாக உள்ள ஒரு மரத்தை வெட்ட வேண்டுமென்றாலும் கூட அரசு அதிகாரிகளின் உத்தரவு பெற வேண்டியுள்ளது. அன்றைக்கு பொதுவான விஷயங்களில் எந்த அதிகாரியின் உத்தரவும் இல்லாமல் கிராமத்தில் உள்ள மக்களே ஒற்றுமையாக இருந்து முடிவுகளை எடுத்து, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டார்கள்.

குளங்களில் இருந்து வண்டல் மண்ணை தங்கள் விருப்பம் போல் மாட்டு வண்டிகளில் எடுத்துச் சென்று விவசாயத்துக்கு பயன்படுத்தினார்கள். அதேபோல், நீர் நிலைகளில் மீன் பிடிக்கும் குத்தகை விடும் அதிகாரமும் ஊர் பொது மக்களிடமே இருந்தது. ஆனால், இன்றைக்கு அது அரசு அதிகாரிகளின் கைகளிலும், உள்ளூர் அரசியல்வாதிகளின் கைகளிலும் சென்று விட்டது.

காந்தி சொன்ன கிராம ராஜ்ஜியம், அதேபோல் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும், கிராம மக்கள் தாங்களாக எதையும் செய்துவிட முடியாது என்ற நிலையால் இன்றைக்கு கிராம முன்னேற்றம் பாழ்பட்டு விட்டது.

200 - 300 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமத்து மக்கள் ஏரி, குளங்களின் கரையை மேடாக்கி அதன் மேல் நடைபாதை அமைத்தார்கள். கரைகளில் கழிங்கல்களையும் மதகுகளையும் அமைத்ததோடு, ஆலமரம், அரசமரம், நாவல் மரம் போன்ற நீண்டகால நிழல்தரும் மரங்களை வைத்து குளங்களைப் பாதுகாத்தனர். இன்றைக்கு அந்த விழிப்புணர்வுகூட நம் மக்களிடம் இல்லாமல் போய்விட்டது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் குளங்கள் ஏரிகள் என மொத்தம் 65 ஆயிரம் நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அவை 30 ஆயிரமாகக் குறைந்து விட்டன. இந்த எண்ணிக்கை ஏன் குறைந்தது என்ற சிந்தனை, ஆட்சியாளர்களுக்கோ, சமூக நலன் காப்பவர்களுக்கோ இல்லாமல் போய்விட்டது.

எனவே, இருக்கின்ற நீர்நிலைகளாவது பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை (WP No. 3039/2018) தொடர்ந்துள்ளேன். 6 - 7 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் இறுதி விசாரணைக்கு வர இருக்கின்றது. பார்ப்போம்...

திருமண திண்ணை

அன்றைக்கெல்லாம் திருமணம் என்றால் கிராமமே அல்லோகலப்பட்டு விடும். அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் மட்டுமின்றி உறவினர்கள் எல்லோரும் மூன்று - நான்கு நாட்களுக்கு முன்பே வந்துவிடுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை இழுத்துப் போட்டு செய்வார்கள். எங்கள் தந்தையார் வீட்டு திருமணம் 10 நாட்கள் நடந்ததாகச் சொல்வார்கள்.

கிராமத்தில் உள்ள பெரிய வீடுகளின் வெளியே திருமண திண்ணை நிரந்தரமாகவே அமைக்கப்பட்டிருக்கும். அது மூன்று அடி உயரம் நான்கு அடி அகலத்தில் இருக்கும். அதில்தான் திருமணங்களை நடத்துவார்கள். இதெல்லாம் 40 - 45 வருடங்களுக்கு முன் உள்ள நிலைமை. இன்றைக்கு அந்த நிலைமை மாறி, அருகாமையில் உள்ள நகரங்களிலோ, கோயில்களிலோ பெரும்பாலான திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

திருமணம் என்றாலே.... பந்தக்கால் நடுதல், திருமண அழைப்பு, நலுங்கு, மணமகள் அழைப்பு என தொடர்ந்து நிகழ்ச்சிகள் களைகட்டும். ஊர்க்காரர்கள், உறவினர்கள் சுற்றம் சூழ முன்னின்று நடத்துவார்கள். இப்போதெல்லாம் திருமணம் என்றால் ஏதோ கடமைக்குச் செல்வது போல் ஆகிவிட்டது. முகூர்த்தம் காலை 9 மணிக்கு என்றால், 8.30 மணிக்கு செல்வது, திருமணம் முடிந்ததும் கவரை கொடுத்து விட்டு, சாப்பிட்டு விட்டு கிளம்புவது என்று சுருங்கி விட்டது.

திருமணத்தில் பெண் பார்க்கும் படலம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அன்றைக்கு தரகர்கள் எல்லாம் கிடையாது. உறவுக்காரர்களே அந்த ஊரில் பெண் இருக்கிறது... இந்த ஊரில் பெண் இருக்கிறது என்று தகவல் சொல்வார்கள். முதலில் ஆண் - பெண் இரண்டு பேருடைய ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படும்.

எங்கள் ஊரில் ஒடுக்கப்பட்ட சமுதாயமான அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த மாசிலாமணி என்பவர், ஜாதகத்தை சரியாக கணித்துச் சொல்வார். எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் அவர்தான் ஜாதகம் எழுதினார். கிராமத்தின் தென்கிழக்கு மூலையில் ஒரு சாவடி அமைத்துக் கொண்டு, அதில் அமர்ந்து ஜோசியம் சொல்வார். அவரிடம் ஜாதகம் பார்க்க தினமும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வருவார்கள். அங்கு உட்கார இடம் இல்லாமல், எங்கள் வீட்டில் வந்து இருப்பார்கள். பெண் - பிள்ளை ஜாதகங்களைப் பார்த்து பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று மாசிலாமணி சொன்னால்தான் திருமணப் பேச்சுவார்த்தையையே தொடருவார்கள். இல்லையென்றால் அப்படியே விட்டு விடுவார்கள்.

ஜாதகம் பொருத்தம் இருந்தால், மணமகன் வீட்டார், மணமகள் வீட்டுக்குச் சென்று பெண்ணை பார்த்து விட்டு வருவார்கள். பிறகு மணமகள் வீட்டார், மணமகன் வீடு எப்படி, வசதிகள் எப்படி, பொருளாதார நிலை அறிய குடும்பதோடு வருவார்கள். இதேபோல் மாப்பிள்ளை வீட்டாரும் சென்று வருவார்கள். அதற்குப் பிறகுதான் மற்றதையெல்லாம் பேசி வெற்றிலை பாக்கு மாற்றுவார்கள். கல்யாணம் முடியும்வரை ஒருவர் வீட்டில் மற்றவர் தண்ணீர்கூட குடிக்க மாட்டார்கள்.

ஒருபக்கம் மஞ்சள், மறுபக்கம் ரோஸ் நிறத்தில் ஆன மங்களகரமான காகிதத்தில் திருமண பத்திரிகையை அச்சிடுவார்கள். இரு வீட்டார் அழைப்பு என திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கும்.

திருமணம் கிராமத்தில்தான் நடக்கும். கிட்டத்தட்ட ஒரு வாரம் திருமண நிகழ்ச்சிகள் நடக்கும். 3 நாட்களுக்கு முன்னாலேயே உறவினர்கள் ஊர்களில் இருந்து வந்துவிடுவார்கள். பெரிய பந்தல் போடப்படும். 3 நாட்களும் 3 வேளையும் பந்தி போடப்பட்டு உணவு பரிமாறப்படும். எப்போதும் காபி, டீ தயாராக இருக்கும். ஒரு பக்கத்தில் சீட்டு விளையாட்டு மும்முரமாக நடக்கும். ஒருசில வீடுகளில் இரவு நேரத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்களைப் போடுவார்கள். இவையெல்லாம் என் மனதில் பசுமையாக இன்றும் நினைவில் நிழலாடுகின்றன. இதேபோல் இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்.

துக்க நிகழ்வுகள்

எங்கள் கிராமத்தில் யாராவது ஒருவர் வீட்டில் இறப்பு நிகழ்ந்தால், உடனே சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் ஊரார் ஒன்றுகூடி விடுவார்கள். வெளியூரில் உள்ள உறவினர்களுக்கும் அவர்களே தகவல் தெரிவிப்பார்கள். உறவினர்கள் வந்தவுடன் அவர்களுடன் சேர்ந்து உடலை எடுப்பது முதல் மயானத்தில் அடக்கமோ, எரியூட்டலோ செய்து முடியும் வரை கூடவே இருப்பார்கள்.

தகனம் முடிந்த மூன்றாவது நாள் அஸ்தி கலயத்தை எடுத்துக்கொண்டு, பாபநாசம், தாமிரபரணி ஆற்றில் கரைப்பார்கள். கொஞ்சம் வசதியுள்ளவர்கள், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், ராமேஸ்வரம் கடலில் கரைப்பது உண்டு.

அதேபோல், 12 - 13 நாள் காரியத்தையும் ஊரார் சேர்ந்தே நடத்துவார்கள். துக்க வீட்டில் உள்ளவர்கள் துயரத்தில் இருப்பார்கள் என்பதால், அவர்களை எதிர்பார்க்காமல் ஊராரே எல்லாவற்றையும் செய்வார்கள். உத்தரகிரியை பத்திரிகை என போஸ்ட் கார்டு சைஸில் வெள்ளை அட்டையில், அதன் ஒருமுனையில் கருப்பு கலர் அடையாளத்தோடு, இன்னார் இந்த தேதியில் இறந்தார். அவருக்கு இந்த தேதியில் காரியம் நடத்தப்படும். தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்ற விவரம் எழுதி உறவினர்களுக்கு அனுப்புவார்கள். அந்த அளவுக்கு இன்பத்திலும், துயரத்திலும் ஊரார் ஒற்றுமையாக உடன் இருந்தது எல்லாம் அந்தக் காலம்.

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்

அன்றைக்கு பெண்கள் மத்தியில் காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டுதான் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்தப் பட்டுப் புடவையை உடுத்துவது பெரிய கவுரவமாகவும் கருதினார்கள். அதேபோல் புடவைகளைப் பொருத்தவரை சின்னாளப்பட்டி, மதுரை சுங்கடி, ராஜபாளையம் தளவாய்புரம் சேலைகள் பிரபலமாக இருந்தன. 50 - 55 வயதைத் தாண்டி விட்டால், பூக்கள் போட்ட புடவையோ, டிசைன் போட்ட புடவையோ கட்டுவதை பெண்கள் தவிர்த்து விடுவார்கள். ஒரே வண்ணத்தில் ஆன புடவையைக் கட்டுவார்கள். கணவனை இழந்த கைம்பெண்கள் வெள்ளை கலர் ரவிக்கை, வெள்ளை நிற புடவையைக் கட்டுவார்கள்.

வயதுக்கு வந்தப் பெண்களுக்கு தாவணி போடுவார்கள். கருவேல மரத்தில் உள்ள நெற்றுக்களை நன்றாக சூடுபடுத்தினால், அது கருப்பு நிறத்தில் களிம்பு போல் வரும். அதையே கண் மையாகப் பயன்படுத்தினார்கள். நெற்றிப் பொட்டாகவும் வைத்துக் கொள்வார்கள். ஐடெக்ஸ் வாங்கினால் திட்டுதான் விழும். அதேபோல் சிகப்பு பொட்டு என்றால், சாந்து பொட்டெல்லாம் வைக்கக் கூடாது. குங்குமத்தைத்தான் நெற்றியில் வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

காலங்கள் செல்லச் செல்ல, பெரும்பாலான தெருக்களில் மின்சார விளக்குகள் எரிந்தன. வீட்டில் மின்சார வசதி இல்லாத பள்ளி மாணவர்கள் தெரு விளக்கு ஒளியில் படிப்பதும் உண்டு. அன்றைக்கெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு இன்றைக்கு கொடுப்பதுபோல் இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை. புத்தகங்கள் வாங்க வேண்டுமென்றால், கோவில்பட்டி, சங்கரன்கோவில் போய் வாங்க வேண்டும். இல்லையென்றால் பள்ளியில் பணம் கட்டி புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆக்ஸ்போர்டு அட்லஸும், ரென் அண்ட் மார்ட்டின் கிராமர் புத்தகங்களும் கிடைப்பது மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.

பெரும்பாலான மாணவர்கள் காலில் செருப்பு இல்லாமல்தான் பள்ளிக்கு வருவார்கள். செருப்பு அணிவது என்பது அன்றைக்கு பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. ஹவாய் செருப்புதான் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்தது. தோல் செருப்பு, பூட்ஸ் வகைகளும் கிடைக்கும். தோலாலான பக்கில்ஸ் போல் இருக்கும் காலணியை நான் அணிவது வழக்கம். என்னுடைய சகோதரர்கள் கல்லூரியில் இருந்து விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போது இதை வாங்கி வருவார்கள்.

என்னுடைய சகோதரர்கள் இருவரும் பேராசிரியர்களாக இருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டார்கள். ஒருவர் பெயர் டாக்டர் பாலகிருஷ்ணன். இன்னொருவர் நவநீத கிருஷ்ணன். இருவரும் 50-களில் பாளையங்கோட்டையில் படித்து, பின்னர் திருச்சி, சென்னையில் முதுநிலை படிப்புகளை முடித்து, எங்கள் வட்டாரத்தில் முதல் முதுநிலைப் பட்டதாரிகளாகத் திகழ்ந்தார்கள்.

எங்கள் வீட்டில் வேலை பார்த்தவர்களில் குறிப்பாகச் சொல்வதென்றால், அய்யன்ராஜ், ராமசுப்பு, போன்ற பலர் அன்றைக்கு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கச் சென்றார்கள். அப்போது ஆசிரியர் பயிற்சி பள்ளி மணியாச்சி பக்கத்தில் பரிவிலிக்கோட்டையில் இருந்ததாக நினைவு. அதேபோல், ராதாபுரம் பக்கத்தில் உள்ள சண்முக ரங்காபுரம், மற்றும் எங்கள் ஊரில் இருந்து 3 மைல் தொலைவில் உள்ள குருவிகுளம் ஆகிய பகுதிகளிலும் பயிற்சி பள்ளிகள் இருந்தன. குருவிகுளத்தில்தான் தற்போதைய சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆசிரியர் பயிற்சி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய வயதுதான் அப்பாவுவுக்கும். அவர்தான் குருவிகுளத்தில் படித்த கடைசி செட்டாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

சிவகாசி பக்கம் வடமலாபுரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலட்சுமியினுடைய தந்தையார் எஸ்.ஆர். நாயுடு பெயரில் ஆசிரியர் பயிற்சி பள்ளி இருந்தது. இங்கு படித்தவர்கள், அன்றைக்கு ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள். அங்கு ஆசிரியர்கள் அதிகம் இல்லாததால், குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் ஏராளமானோர் சேலம் மாவட்டத்தில் பணியாற்றினார்கள்.

எங்களுடைய குடும்பத்தின் உதவியால் கிட்டத்தட்ட 20, 25 பேர் பள்ளி ஆசிரியர்களாக சேலம், கோவை போன்ற இடங்களுக்குச் சென்று பணிபுரிந்தார்கள். அவர்கள் பள்ளி கோடை விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது எங்கள் வீட்டில் 2 - 3 நாட்கள் தங்கிவிட்டுச் செல்வார்கள்.

அன்றைக்கு கிராமத்தில் கூட்டுறவு இயக்கங்கள் வளமாக இருந்தன. கூட்டுறவு, சர்வோதயா, வானொலி என்ற பெயர்களில் 3 இதழ்கள் தமிழில் வரும். வானொலி இதழ், சென்னை வானொலி நிலையத்தால் வெளியிடப்பட்டது. அதில் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதியில் இருந்து மாதம் கடைசி வரை என்னென்ன நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும் என்பதை தொகுத்து வெளியிடுவார்கள். கிராம நிகழ்வுகள், விவசாய நிகழ்வுகள் குறித்து வானொலியில் மாலையிலும், விடியற்காலை 6 மணிக்கும் ஒலிபரப்புவார்கள்.

கிராமங்களில், கிராம கூட்டுறவு விவசாய வங்கிகள் இருந்தன. குறுகிய காலக் கடன்கள், நீண்ட காலக் கடன்கள், விளைச்சல் பொருட்களின் மேல் கடன்கள், நகைக் கடன்கள் என விவசாயிகளுக்கு உதவியாக அன்றைக்கு சிறு சிறு கூட்டுறவு அமைப்புகளாக வங்கிகள் 1970 - 72 வரை நல்ல முறையில் செயல்பட்டன. பிற்காலத்தில் இவையெல்லாம் அரசியல் காரணங்களால் சீர்கெட்டு விட்டன.

டெல்லி வானொலியில் சரோஜ் நாராயணசுவாமி, செல்வராஜன், ராஜாராம், ஜான் சுந்தர் , சென்னை வானொலியில் ஜெயா பாலாஜி, செல்வராஜ் என்று செய்தி வாசிப்பாளர்களின் கம்பீரமான குரல்கள் கிராம மக்களிடம் பிரபலமானவை. அது தொலைக்காட்சி வராத காலம். தொலைபேசி இணைப்புகளும் அவ்வளவாக இல்லாத காலம்.

முக்கிய அவசரச் செய்திகளை உறவினருக்கு தெரிவிப்பது என்றால், தந்தி மூலமாகத்தான் தெரியப்படுத்துவார்கள். எங்கள் பகுதியில் வெளியூரில் இருந்து தந்தி வரவேண்டுமென்றால் குருவிகுளம், பின்னாட்களில் திருவேங்கடத்தில் இருந்து வரும். சென்னையில் இருந்து அனுப்பினால் 7 மணி நேரம், டெல்லியில் இருந்து என்றால் 1 நாள் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x