Published : 16 Jul 2018 08:18 AM
Last Updated : 16 Jul 2018 08:18 AM
1989: பார்வையாளராக...
அரசியல் கட்சியாக 1988-ல் தொடங்கப்பட்ட பாமக 1989 சட்ட மன்றத் தேர்தலில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. எம்ஜிஆர் மறைவை அடுத்து, ஜானகியும் ஜெயலலிதாவும் தனித்தனி அணிகளாக திமுகவை எதிர்த்துநின்ற மும்முனைப் போட்டியில் பாமக பார்வையாளராக மட்டுமே இருந்தது. ஆனால், அடுத்த சில மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. தமிழகம், புதுச்சேரியில் 33 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக தோல்வியடைந்தாலும், 6% வாக்குகளைப் பெற்று தன்னை நிரூபித்தது.
1991: அக்கினிப் பிரவேசம்...
இந்த ஆண்டில்தான் மக்களவைத் தேர்தல், சட்ட மன்றத் தேர்தல் என்று இரண்டையும் ஒருசேரச் சந்தித்தது பாமக. முஸ்லிம் லீக் கட்சி, குடியரசுக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஆகியவற்றுடன் பாமக இணைந்துநின்றது. சட்ட மன்றத்துக்கு 199 தொகுதிகளிலும் மக்களவைக்கு 31 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ராஜீவ் படுகொலையின் அனுதாப அலையால் அதிமுக கூட்டணி 224 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்வெற்றி பெற்றது. மக்களவைத் தொகுதிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியின் வசமாயின. அந்த அலைக்கு மத்தியிலும், பண்ருட்டி தொகுதி பாமக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றிபெற்றார். ஆளுநர் உரையில் குறுக்கிட்டதன் காரணமாக சட்ட மன்றத்தில் அவர் தாக்கப்பட்டபோது வட மாவட்டங்கள் போராட்டக் களமானது.
1996: அடுத்த வெற்றி
தேர்தலுக்கு முன்பு பாமகவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கியிருந்து திமுக. தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினையால் அந்தக் கூட்டணி உடைந்தது. திவாரி காங்கிரசுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த பாமக, 4 இடங்களில் மட்டுமே வென்றது.
1998: பாமகவின் முதலாவது அமைச்சர்
மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்தது பாமக. கூட்டணியில் பாஜக, மதிமுக, தமிழக ராஜீவ் காங்கிரஸ் இருந்தன. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வென்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானானர். பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதால், வாஜ்பாய் ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது.
1999: மத்தியில் இரண்டு அமைச்சர்கள்
பாஜகவின் தேசிய ஜனநாயக அணியில் அதிமுக விலகிக்கொள்ள திமுக கூட்டணி சேர்ந்துகொண்டது. பாமகவுக்குப் புதுச்சேரியையும் சேர்த்து 8 இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் 5 இடங்களை வென்றது. பாமகவைச் சேர்ந்த என்.டி.சண்முகம் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும் இ.பொன்னுசாமி இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்கள்.
2001: மின்னல் கூட்டணி
திமுக அணியிலிருந்து விலகி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்ட மன்றத் தேர்தலைச் சந்தித்தது பாமக. தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில் 20 இடங்களை வென்ற பாமக, புதுச்சேரியில் படுதோல்வியடைந்தது. அதிமுக - பாமக கூட்டணியும் உடைந்தது.
2004: வாரிசு அரசியல்
பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவும் பாமகவும் கூட்டணியைவிட்டு வெளியேறின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. பாமக 5 தொகுதிகளை வென்றது. ஆர்.வேலு ரயில்வே துறை இணை அமைச்சரானார். அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சரானார்.
2006: கொஞ்சம் சறுக்கல்
திமுகவுடனான மக்களவைத் தேர்தல் கூட்டணி, சட்ட மன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. 34 இடங்களில் போட்டியிட்ட பாமக, 18 இடங்களைக் கைப்பற்றியது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கொஞ்சம் சறுக்கல்தான்.
2009: வெற்றியைத் தராத கூட்டணி
மக்களவைத் தேர்தலுக்காக, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக்கொண்டது பாமக. ஆனால், எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.
2011: தொடர்ந்த சரிவு
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக கட்சிகளுடன் பாமகவும் இடம்பெற்றிருந்தது. 30 சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
2014: ஒரே ஒரு இடம்
மாநிலத்தின் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றிய நிலையில், பாஜக கூட்டணியிலிருந்த பாமக எட்டு இடங்களில் போட்டியிட்டு தருமபுரியில் மட்டும் வென்றது. அன்புமணி ராமதாஸ், மக்களவை உறுப்பினரானார்.
2016: தனித்துப் போட்டி..
திமுக, அதிமுக என்று மாறி மாறி தேர்தல்களைச் சந்தித்து வந்த பாமக, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
4 இடங்களில் இரண்டாம் இடமும் 66 இடங்களில் மூன்றாமிடமும் பெற்றது. 2011 சட்ட மன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் பாமக பெற்ற வாக்குகள் 5.23%. 2016 சட்ட மன்றத் தேர்தலில் தனித்து நின்றே பெற்றது 5.3%.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT