Published : 07 Jul 2018 11:38 PM
Last Updated : 07 Jul 2018 11:38 PM

சொட்டாங்கல்

பெ

ரி

ய தூக்குச்சட்டி நெறய கம்பங்கஞ்சியக் குடிச்சுப்புட்டு வந்தாலும் “வவுறு பசிக்கி செமதி, எலந்தவடை வச்சிருக்கியா”னுவா அழகம்மா. எப்பயும் தீனி மென்னுகிட்டே இருக்கிற வாயும், கொட்டக் கொட்ட விரியுற வவுறுமா இருக்குறதால அவளுக்குக் ‘குலுதாடி’னு பட்டப் பேரு. “வவுறா அது, குலுதாடிய (மாட்டுத் தீனி கரைச்சு வைக்கிற பெரிய மரக் குண்டான்) கவுத்தி வச்சுருக்கா”னு சத்துணவு மாலா அக்கா சடச்சுக்கிட்டாலும் அழகம்மாக்கு மட்டும் உண்டன ஒரு கரண்டி சோறும் வெஞ்சனமும் போட்டுவிடும்.

அழகம்மா சந்திரங்கொளத்துக்காரி. பொட்டுக்கடலயப் போட்டு ஒத்த சுருக்குப்பைய அண்ணாக்கயித்துல கட்டிப் பாவாடைக்குள்ள வச்சுருப்பா. வவுத்துக்கு மேல எப்பயும் எக்கியிருக்கிற சட்டைல கடைசி பட்டனப் போடாம அதத் திருகிக்கிட்டே இருப்பா. ரீசஸ் பீரியடுல எல்லாரும் முடியனூர்க் கிழவி கிட்டக்கத் தீம்பண்டம் வாங்குனாக்க, அவ மட்டும் முல்லைக்கனி அண்ணாச்சியோட முக்குக்கடைக்கு ஓடிருவா. எப்பயும் சீரணியும், சாத்தூர்சேகும் அங்கன கெடைக்கும்.

அந்தச் சீரணில இத்துனூண்டு இனுக்க எனக்குன்னு எடுத்தாந்து வாயில திணிப்பா. அழகம்மாக்கு வேப்பங்கொழுந்தும் புளியம்பூவும் அம்புட்டு உசிரு. “குலுதாடி வேப்பங்கொழுந்த மென்னு திங்கிறதாலதா அம்புட்டு இனிப்புக்கும் அலுங்காம அந்த வகுறு கெடக்கு”னுவா மாலாக்கா.

தீவாளி, தைப் பொங்கலு, பங்குனித் திருழா, முத்தாலம்மன் தீச்சட்டி வந்துட்டாலே அழகம்மாக்குத் தரைல காலு பாவாது. நானும் சேர்மாவும் எங்க பங்குக்கு வர்ற எல்லாத் தீம்பண்டத்தையும் அவளுக்குப் பங்கு வச்சுருவோம். தீவாளிக்கு எடுக்குற கறில செய்யுற ‘கோலா உருண்டை’னா அழகம்மாக்கு உசிருன்னு நா அவள வூட்டுக்கு வரச் சொல்லுவேன். “ரொம்ப மெதுவா இருந்தா நல்லாருக்காது செமதி. நாக்குல நடுவுல சிக்கி மெல்லுற வசத்துல பொறிச்சு எடுக்கணும்”னு சொல்லிக்கிட்டே பொசுக்கப் பொசுக்க முனியம்மா கிட்டக்க வாங்கித் தின்னுவா. அழகம்மாக்கு ‘கும்மி’ நல்லா அடிக்க வரும். சந்திரங்கொளத்து ‘கொமருக’ செவ்வாய்க்கெழம சாமிக்கு முன்னாடி அம்புட்டு அம்சமாக் கும்மி அடிச்சு ஆடுங்க. நா வம்படியா அடம் புடிச்சு ஒருவாட்டிப் பாக்கப் போனப்ப அழகம்மாதா “கெங்கம்மா எல்லம்மா பூவம்மா”னு ஒரக்கப் பாடிக்கிட்டே கும்மி சுத்தினா. வகுத்த எக்கிக்கிட்டு, ஒடம்ப வளைச்சு அவ குதிச்சுக் கும்மி தட்டுறப்ப நெலா வெளிச்சத்துல அம்புட்டு அழகா தெரிஞ்சா.

அழகம்மாவோட அத்தை ஜக்கம்மாவ மல்லாங்கெணத்துலதா கட்டிக்கொடுத்திருக்கு. ஜக்கம்மா அத்தை, அக்கியைக் குணப்படுத்துறதுக்காக அக்கி எழுதும். நானும் அழகம்மாவும், ஞாயித்துக்கெழமைன்னா ஜக்கம்மா வீட்டு முத்தத்துல போய்க் குத்த வச்சுருவோம். அக்கி எழுதிக்கிறவுக கிட்டக்கக் காசு வாங்கறது வழமையில்லனு வெள்ளாம வௌஞ்சது, கோழி, கொளத்து மீனு, உப்புக்கண்டம், கருவாடுனு ஆளுக கொண்டுவாரத வாங்கிக்குவா ஜக்கம்மா. எப்பயாச்சும் உச்சிவேளைக்குப் போனோம்னாக்க வரகரசிச் சோத்துல, கருவாட்டுக் கொழம்ப ஊத்தித் தருவா. நானும், அழகம்மாவும் நல்லா மொக்கிட்டு கோயில் திண்ணைக்கு ஓடியாந்து மல்லாந்துருவோம்.

அழகம்மாக்குத் தையல் தைக்கவும் நல்லா வரும். ஓட்டுத் தையல், சங்கிலித் தையல், அரும்புத் தையல்னு எல்லாம் கத்துகிட்டுப் போடுவா. வகுத்துக்கு மேல வாகா துணிய வச்சுக்கிட்டு கண்ணெடுக்காம தலகாணி ஒறைகளுக்கு அரும்புத் தையல்ல பூப்போட்டு, ஒட்டுத் தையல்ல ஓரந் தச்சுருவா. எனக்கு ஒருவாட்டி ஒயிலாட்ட கர்சீஃபுல இதயம் தைச்சு அதுக்குள்ளாற அம்பு விட்டுக் கொடுத்தா.

‘குலுதாடி’களுக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் டிரம்கள் வந்துவிட்டன. ‘தையல் மிஷின்’ வாங்க ‘நலத்திட்ட உதவி’ வழங்கும் ஒரு பொதுநல விழாவில், வளர்ந்திருந்த பேத்தியோடு ‘டோக்கன்’ வாங்கிக்கொண்டிருந்த அழகம்மாவைப் பார்த்தேன். ஆள் மெலிந்து ஒட்டிய வயிறோடு ஒடுங்கித் தளர்ந்திருந்தாள். வீட்டுக்காரர் இறந்துபோய், பள்ளிச் சீருடைகள் தைத்து குடும்பம் நடத்துவதாகச் சொன்னவளின் கைகளைப் பற்றிக்கொண்டேன். பிய்ந்துபோன பட்டன்போல அந்த ‘டோக்கன்’ என் கைகளில் தங்கிவிட்டது அழகம்மா நினைவாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x