Last Updated : 30 Jan, 2025 08:25 AM

6  

Published : 30 Jan 2025 08:25 AM
Last Updated : 30 Jan 2025 08:25 AM

அண்ணா பல்கலை. சம்பவம்: பதிவேற்றம் செய்தவர்தானே முதல் குற்றவாளி?

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப் பட்டு, முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து விசாரித்து வருகிறது. செய்தியாளர்களிடமும் இக்குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் 4 செய்தியாளர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையின் நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து துறைரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை பெறப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்ததில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அது பொதுதளத்தில் மறைக்கப்படவில்லை. இந்த தவறை அறிந்தவுடன் துரிதமாக செயல்பட்டு சென்னை காவல் துறை தவறை சரிசெய்துவிட்டது. இந்த நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற வாதத்தின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை பொதுவெளிக்கு கிடைக்காமல் ரகசியமாக பாதுகாக்க வேண்டியது காவல் துறையின் கடமை. அந்த கடமையை செய்ய தவறியவர்களைத்தான் முதல் குற்றவாளியாக (ஏ1) அறிவிக்க வேண்டும். அதை பதிவிறக்கம் செய்து வெளியிடுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இருந்தாலும் பதிவிறக்கம் செய்து பொதுவெளியில் பரவ விட்டவர்கள் ஏ2, ஏ3 என அடுத்தடுத்த குற்றவாளிகளாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை முதன்மை குற்றவாளிகளாக முன்நிறுத்துவது ஏற்புடையதல்ல. இன்னும் சொல்லப்போனால், அவர்களை குற்றவாளிகளாக கருதாமல் சாட்சிகளாக கருதுவது மட்டுமே பொருத்தமாக இருக்கும்.

குற்றம் தொடங்கிய இடம் காவல் துறையாக இருக்கும்போது, அவர்கள் வசதியாக ஒதுங்கிக் கொண்டு அடுத்தகட்டமாக பதிவிறக்கம் செய்தவர்களை முதன்மை குற்றவாளிகளாக காண்பிக்க முயல்வது எந்த வகையிலும் நியாயமில்லை. இது ஒருவகையான அதிகார துஷ்பிரயோகமாகவே கருதப்படும்.

இன்றைய சமூக வலைதள யுகத்தில் ஒரு விஷயம் சரி, தவறு என்று தெரிவதற்கு முன்பே, பல லட்சம் பேரை சென்றடைந்து விடுகிறது. அத்தனை பேரையும் குற்றவாளிகளாக சேர்க்க முடியாது. அது தொடங்கிய இடத்தையே குற்றம் நடந்த இடமாக கருத முடியும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் காவல் துறை நியாயமாக நடந்து கொள்வது மட்டுமின்றி, மக்கள் நம்பும்படியான செயல்களில் ஈடுபட வேண்டும்.

காவல் துறை விசாரணை என்ற பெயரில் இந்த வழக்கில் செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கே கொண்டு செல்லுமாறு கைவிரித்து விட்டது. நீதிமன்றம் வரை சென்று முறையிட்டு கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் நெருக்கடிக்கு செய்தியாளர்களை தள்ளுவது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்காது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x