Published : 29 Jan 2025 06:30 AM
Last Updated : 29 Jan 2025 06:30 AM
உலக நாடுகளில் கருவுறுதல் விகிதம் குறைந்துவருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக்கொள்ள முடிகிற குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையே கருவுறுதல் விகிதம்.
உலகளாவிய நோய்ச் சுமை அமைப்பு (Global Burden of Disease) 2021இல் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 1950இல் 6.18ஆக இருந்த கருவுறுதல் விகிதம் 2021இல் 1.9ஆகக் குறைந்ததாகவும், 2100இல் 1.04ஆகக் குறையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறையும்பட்சத்தில் எதிர்காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை மட்டுமே இருக்கும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
காரணங்கள்: இந்தியாவைப் பொறுத்தவரை, குடும்பக் கட்டுப்பாடு போன்ற தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் திட்டங்கள் கருவுறுதல் விகிதம் குறைவதற்குக் காரணமாக இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் கல்வியறிவு, தொழிலாளர் பங்களிப்பில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றமே கருவுறுதல் விகிதம் குறைய முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது போன்றவை குறித்த சமூகப் பார்வை மாறியிருக்கிறது; குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் திருமணம், தாய்மை அடைதலைக் காட்டிலும் பொருளாதாரத் தன்னிறைவு அடைவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
அதிகரிக்கும் பணவீக்கம், பொருளாதாரச் சுமை காரணமாகக் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது குழந்தையைப் பராமரிப்பது பெரும் சவாலானதாக இருக்கிறது. இச்சிக்கலைச் சமாளிக்கக் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுவது அல்லது ஒரு குழந்தை போதும் என்கிற மனநிலைக்குப் பலரும் வந்துவிடுகின்றனர்.
அடுத்ததாக, உயர்படிப்பு, பணிக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் அங்கு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆக, இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைய இடப்பெயர்வும் முக்கியக் காரணமாக உள்ளது. உணவு, வாழ்க்கை முறை மாற்றத்தினால் திருமணமான ஆண், பெண்களிடத்தில் நிலவும் உடல்நலப் பிரச்சினைகளாலும் குழந்தையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
இந்தியாவின் நிலை என்ன? - இந்தியாவில் கருவுறுதல் விகிதம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. 2015 - 2016இல் நடத்தப்பட்ட தேசியக் குடும்பநல ஆய்வு 4இன்படி, கருவுறுதல் விகிதம் 2.2 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2019 - 2021இல் 2.0 ஆகக் குறைந்தது. ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையைச் சீராகப் பராமரிக்க இறப்பு எண்ணிக்கைக்கு ஏற்பப் புதிய பிறப்புகளும் தேவை. இதையே பதிலீடு கருவுறுதல் விகிதம் (replacement-level fertility) என அழைக்கிறோம். அதன்படி, பிஹார் (3.0), மேகாலயம் (2.9), உத்தரப் பிரதேசம் (2.3), ஜார்க்கண்ட் (2.2), மணிப்பூர் (2.1) ஆகிய மாநிலங்களில் பதிலீடு கருவுறுதல் விகிதம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே உள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள் இவ்விஷயத்தில் சரிவைச் சந்தித்துள்ளன. பதிலீடு கருவுறுதல் விகிதத்தில் தென்னிந்திய மாநிலங்கள் கடந்த காலங்களில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கேரளம் 1980களிலும், தமிழ்நாடு 1993ஆம் ஆண்டிலும், பிற தென்னிந்திய மாநிலங்கள் 2000ஆம் ஆண்டிலும் பதிலீடு கருவுறுதல் விகிதத்தில் நிர்ணயித்த இலக்கை அடைந்தன.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கருவுறுதல் விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் 1.6க்குக் கீழ் சென்றுள்ளது. தமிழகத்தில் கருவுறுதல் விகிதம் 1.4ஆக உள்ளது.
இதன்பொருட்டே குழந்தைகளைக் கூடுதலாகப் பெற்றுக்கொள்வதற்கு ஆந்திர அரசு வலியுறுத்தி வருகின்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும், இதன் மூலம் மக்கள்தொகை குறைவது தடுக்கப்படும் என்றும் அறிவித்தது கவனிக்கத்தக்கது.
தாக்கங்கள்: ஒரு நாட்டின் கருவுறுதல் விகிதம் குறைவது சமூகம் - அரசியல் - பொருளாதாரம் எனப் பல்வேறு தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறைந்துவரும் கருவுறுதல் விகிதம் தென்னிந்தியாவில் மக்கள்தொகை குறைய வழிவகுத்திருக்கிறது; இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அதற்கேற்ற சுகாதாரம், சமூக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய தேவை அம்மாநிலங்களுக்கு அதிகரித்துவருகிறது.
அது மட்டுமல்லாது, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் மக்கள்தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறலாம். மறுபுறம், குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் தங்களுக்கான இடங்களை இழக்க நேரிடலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.
மேலும், மக்கள்தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்போது தென்னிந்திய மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம். மாநில நலனுக்கான கொள்கைகளை வகுக்கும்போது, இம்மாநிலங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை உருவாகும்.
அதிகரிக்க முடியுமா? - கருவுறுதல் விகிதச் சரிவு பெரும்பாலும் மீள முடியாததாகவே இருந்திருக்கிறது. எனினும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், குறைந்த கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்கும் என்பதற்குத் தென் கொரியா தற்போது உதாரணமாகியுள்ளது. 2022இல் தென் கொரியாவில் கருவுறுதல் விகிதம் 0.78ஆக இருந்த நிலையில் 2023இல், 0.72 ஆகக் குறைந்தது.
இதைத் தொடர்ந்து கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க அவசரகால நடவடிக்கைகளில் தென் கொரிய அரசு ஈடுபட்டது; மக்களுக்குப் பல்வேறு நிதிச் சலுகைகளையும் அறிவித்தது. இதன் பலனாக 2023ஐ ஒப்பிடுகையில் குழந்தை பிறப்பு விகிதம் 2024இல் 3% அளவு அதிகரித்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதைக் கவனத்தில் கொண்டு கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். அதேநேரத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் அதிகரிக்க வேண்டும். 2050க்குள் இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை 20%ஆக அதிகரிக்கும் என ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (UNFPA - United Nations Population Fund) தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்ப சுகாதாரம், பராமரிப்பு, நிறைவான வாழ்க்கைக்கான சமூக - பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment