Published : 29 Jan 2025 07:50 AM
Last Updated : 29 Jan 2025 07:50 AM
மதுராந்தகம் அருகிலுள்ள கருங்குழியில் இருந்து பூஞ்சேரி வரை 32 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் மூலம் டெண்டர் கோரியிருப்பது வரவேற்கத்தக்க முடிவாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடி அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் படிப்பு போன்ற காரணங்களுக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள் குவியும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை நகரின் மக்கள்தொகை ஒரு கோடியை எட்டியுள்ளது. இதுதவிர, அண்டை மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் தினந்தோறும் பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த காரணங்களால், தற்போதுள்ள சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் போதாமல் சென்னை திணறும் நிலையே இருந்து வருகிறது. குறிப்பாக, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதி தென்மாவட்டங்களில் இருந்து வந்து செல்வோரின் நுழைவாயிலாக இருப்பதால் எத்தனை மாற்றங்கள் செய்தாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
வார இறுதி நாட்களில் பலர் சென்னையில் இருந்து வெளியூர் செல்வதும், மீண்டும் சென்னை திரும்புவதும் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலங்களில் 10 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியேறுவதும் மீண்டும் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதுமாக இருப்பதால் அத்தகைய நாட்களில் சென்னை நகரின் நுழைவுப்பகுதிகள் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
இந்த சிக்கலுக்கு ஒரு ஆறுதல் தீர்வாக தமிழக அரசின் மாற்றுவழித் திட்டம் அமையும் என்பதில் சந்தேகமில்லை. கருங்குழி – பூஞ்சேரி சாலை சென்னைக்குள் நுழையவும், வெளியேறவும் மாற்று வழியாக இருப்பது மட்டுமின்றி, ஜிஎஸ்டி சாலையையும், இசிஆர் சாலையையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக அமையும்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், அவை தற்காலிக நடவடிக்கைகளாக இருப்பதால், ஓரிரு ஆண்டுகளில் அந்த முயற்சிகள் பலனற்றதாக மாறி விடுகின்றன. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்காக பாலங்கள் கட்டப்பட்டன.
ஆனால், பாலங்களின் மீது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சிக்னல் அமைப்பது, போக்குவரத்து காவல்துறையினர் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது என்ற நிலை ஏற்படுகிறது. பாலம் கட்டப்படுவதன் நோக்கமே நிறைவேறாமல் போய்விடுகிறது.
போக்குவரத்து நெரிசலின் இன்றைய தேவையை கணக்கில் கொள்ளாமல், இன்னும் 50 ஆண்டுகளுக்கு கணக்கில்கொண்டு பாலங்கள் கட்டப்பட்டால் மட்டுமே இதுபோன்ற சிக்கலுக்கு தீர்வு காண முடியும். மக்கள்தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆனால், இருக்கும் சாலைகளின்மீதே பாலங்கள், நடைபாதைகள், தடுப்புகள், மரம் நடுவது, தூண்கள் கட்டுவது, விளம்பர பலகைகள் வைப்பது, கட்சி கொடிக் கம்பங்கள் நடுவது போன்ற செயல்களால் சாலைகளின் அகலம் மென்மேலும் குறைந்து விடுகிறது. எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு புதிய அகலமான சாலைகளை உருவாக்கினால் மட்டுமே போக்குவரத்து சிக்கல் தீரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...