Last Updated : 03 Jan, 2025 08:37 AM

22  

Published : 03 Jan 2025 08:37 AM
Last Updated : 03 Jan 2025 08:37 AM

சட்டை அணிந்து செல்வது பக்தர்களின் உரிமையா?

கேரளாவில் உள்ள கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்வதற்கு தடை உள்ளதால், ஆண் பக்தர்கள் சட்டையைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டுதான் உள்ளே செல்கின்றனர். குருவாயூர் கோயில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

தமிழகத்திலும் திருச்செந்தூர், சுசீந்திரம், கன்னியாகுமரியில் உள்ள கோயில்களில் சட்டையைக் கழற்றி விட்டு செல்லும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கோயில்களில் சட்டையை கழற்றி விட்டுச் செல்லும் நடைமுறை இல்லை.

‘இந்த நடைமுறையை மாற்றலாம்; சட்டை அணிந்து கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கலாம்’ என்ற கருத்தை கேரளாவின் ஸ்ரீநாராயண தர்ம சங்க அறக்கட்டளையின் தலைவர் சுவாமி சச்சிதானந்தா முன்மொழிந்துள்ளார். அவரது கருத்துக்கு சில அமைப்புகள் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன. அந்தந்த கோயில்களே முடிவெடுக்க அனுமதிக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, சட்டை அணியாமல் சாமி கும்பிடச் செல்வது இறைவனை அவமதிக்கும் செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படி கோயில்களில் சட்டையை கழற்றிவிட்டுச் செல்லும் நடைமுறைக்கு எதிரான கருத்து, கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பூணூல் அணிந்தவர் யார், அணியாதவர் யார் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த நடைமுறை வழக்கத்தில் வந்தது என்று நாத்திகர்களும், ஆண்கள் மார்பு மற்றும் தோள்களின் வழியாகவே இறைசக்தியை பெற முடியும் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று ஆத்திகர்களும் தங்கள் அளவில் விளக்கம் அளிக்கின்றனர்.

பொதுவாகவே ஆன்மிக நம்பிக்கைகள் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் இடங்களில், அத்தகைய நம்பிக்கை இல்லாதவர்கள் கருத்து சொல்வதும், அந்த நடைமுறைகளில் தலையிட்டு தங்கள் கருத்துகளை திணிப்பதும் அண்மைக் காலமாகவே அடிக்கடி நடக்கும் ஒன்று!

இத்தகைய ‘புரட்சிகர’ கருத்துகளை இவர்கள் இந்து மதம் தாண்டி மற்ற மத விவகாரங்களுக்குள் நுழைக்க மறந்தும் முயற்சிப்பது இல்லை என்ற பார்வையும் தொடர்கிறது. இந்து மதம் அல்லாதவர்களை இதுபோன்ற செயல்களால் ‘மகிழ்விப்பதை’யே இவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்ற கருத்தையும் புறந்தள்ளி விட முடியாது.

தேங்காய் உடைப்பது, தீபம் ஏற்றுவது, வெண்ணை வீசுவது, கோயில்களில் குளத்தில் துணிகளை கழற்றி எறிவது என பல நடைமுறைகளில் சுற்றுச்சூழல் மற்றும் சுத்தம் கருதி காலப்போக்கில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். அத்தகைய ஒரு மாற்றமாக சட்டை அணிந்து இறைவனை தரிசிக்க அனுமதிப்பதிலும் தவறில்லை.

ஆன்மிக நம்பிக்கை உள்ளோர் மட்டுமே இதை ஆலோசித்து முடிவு செய்ய வேண்டுமே தவிர, நம்பிக்கை இல்லாதவர்கள் ‘அரசியல்’ செய்வதற்காக தலை நுழைக்கும்போதுதான் சமூகத்தில் சந்தேகமும் பதற்றமும் எழுகிறது. ஆகவே, இந்து மடாதிபதிகள், மத குருமார்கள், கோயில் நிர்வாகிகள், ஆன்மிக நம்பிக்கை கொண்ட சீர்திருத்தவாதிகள் மற்றும் பக்தர்கள் கூடி `சட்டை’ விஷயத்தில் முடிவு எடுப்பதே சரியாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x