Published : 07 Jul 2018 10:24 AM
Last Updated : 07 Jul 2018 10:24 AM
தமிழகத்தில் இன்றைக்கு பலராலும் உச்சரிக்கப்படும் திட்டமாக சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை இருக்கிறது. இது சென்னை தாம்பரம் அடுத்த படப்பையில் தொடங்கி சேலம் அரியானூர் அருகே முடிவடையும் வகையில் 277 கி.மீ. நீளத்துக்கு 8 வழிச் சாலையாக அமைக்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.10,000 கோடியில் அமைக்க திட்டமிட்டுள்ள இந்த சாலைக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் என 5 மாவட்டங்களில் 2,343 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை என நிலம் கையகப்படுத்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் தென்னை, கரும்பு, வாழை என பணப் பயிர்கள் விளையக்கூடிய நிலங்கள் பல இடங்களில் கையகப்படுத்தப்பட உள்ளன. அதிலும், பெரும்பாலான விளைநிலங்களில் விவசாய கிணறுகள், விவசாயிகளின் வீடுகள் ஆகியவையும் சிக்குவது விவசாயிகளிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் பல இடங்களில் கிராமங்களில் உள்ள ஏராளமான வீடுகள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள் என பலவும் எட்டு வழிச்சாலைக்காக எடுக்கப்பட உள்ளன.
விவசாயிகள் கூக்குரல்
‘பசுமையை அழித்து போடப்படும் சாலைக்கு பெயர் பசுமைவழிச் சாலையா? விவசாயிகளை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக 8 வழிச் சாலையா?’ என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விளைநிலத்தை பறித்துக் கொண்டால் வேறு என்ன வேலைக்கு செல்வது என்று விவசாயிகள் கூக்குரல் எழுப்புகின்றனர். இன்னும் பலர் எங்களது நிலத்தை சாலைக்காக எடுக்கப்போகும் அதிகாரி கள் எங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? எங்கள் நிலத்துக்கு, வீட்டுக்கு, மரங்களுக்கு என்ன விலை கொடுப்பார்கள்? மாற்று இடம் கொடுப்பார்களா? பல லட்சம் செலவு செய்து நாங்கள் கட்டிய வீட்டுக்கு என்ன விலை கொடுப்பார்கள்? என கேள்விகளை அடுக்குகின்றனர்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பசுமைவழிச் சாலை அவசியம் என்று கூறியுள்ள முதல்வர் பழனிசாமி, ‘‘தமிழகத்தில் ஆண்டுக்கு 60 ஆயிரம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் சராசரியாக 16,217 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. விபத்துகளைக் குறைக்க, உயிரிழப்புகளைத் தடுக்க, சாலைகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். தமிழகத்தில் தற்போது 2.57 கோடி வாகனங்கள் உள்ளன. 5 ஆண்டுகளுக்கு பின்னர் இது 3.27 கோடியாக அதிகரிக்கும். எனவே, எதிர்காலப் போக்குவரத்தை சமாளிக்க நவீன தொழில்நுட்பத்தில் பசுமைவழிச் சாலை அமைக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.
பசுமைவழிச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு புதிய சட்டத்தின்படி தகுந்த இழப்பீடு, தென்னை மரங்களுக்கு அவற்றின் வயதுக்கு ஏற்ப ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இழப்பீடு தொகையும், வீடுகளுக்கு உரிய மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு பசுமை வீடு கட்டித்தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய இழப்பீடு கிடைக்குமா?
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் 8 வழிச் சாலைக்கு தேவையான நிலம் அளவீடு செய்யப்பட்டு, முட்டுக்கல் நடப்பட்டு வருகிறது. முட்டுக்கல் போடச் சென்ற இடங்களில் விவசாயிகள் தங்கள் நிலம் கையகப்படுத்தப்படுவதை எண்ணி வேதனையில் அழுது புரண்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் ஏராளம். கிராமங்களிலும், விளைநிலங்களிலும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பும், கோயில்களில் பிரார்த்தனை செய்தும் மக்கள் ஒருபுறம் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே, நிலத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலரும், அரசின் திட்டத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று சிலரும், வளர்ச்சி திட்டத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டியதுதான் என்று மேலும் சிலரும் எட்டு வழிச் சாலைக்கான ஆயத்த பணிகளைக் கவனித்துக் கொண்டுள்ளனர். இதனிடையே, விவசாயிகள், பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்கு அரசு சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டங்களை யும் நடத்தி வருகின்றன.
பசுமைவழிச் சாலைக்காக முட்டுக்கல் நடப்பட்ட இடங்களை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து, அது பட்டா நிலமா? தரிசு நிலமா? நிலத்தின் உரிமையாளர் யார்? என அளவீடு செய்து உறுதிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள மரங்களைத் தோட்டக்கலைத் துறையினரும், கிணறுகள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களைப் பொதுப்பணித் துறையினரும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, கையகப்படுத்தப்பட உள்ள இடங்களில் உள்ள வீடுகளின் மேற்கூரை, தரை தளம் சிமென்ட், மொசைக், மார்பிள், கிரானைட் என எந்த வகையில் அமைந்துள்ளதோ அதற்கேற்ப நுட்பமாக மதிப்பீடு தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT